தமிழ் சந்தி யின் அர்த்தம்

சந்தி

வினைச்சொல்சந்திக்க, சந்தித்து

 • 1

  (ஒருவரைக் குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்டபடியோ தற்செயலாகவோ) பார்த்துப் பேசுதல்.

  ‘அமைச்சரை வெளிநாட்டுத் தூதுவர் சந்தித்தபோது எடுத்த படம்’
  ‘குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இரு மாநில அமைச்சர்களும் இன்று சந்திக்கிறார்கள்’

 • 2

  (ஒன்றை) நேருக்கு நேர் பார்த்தல்.

  ‘ஆசிரியரின் கோபம் பொங்கும் கண்களைச் சந்திக்க அவனுக்குப் பயமாக இருந்தது’

 • 3

  எதிர்கொள்ளுதல்; எதிர்கொண்டு செயல்படுதல்.

  ‘தேர்தலைச் சந்திக்க எங்கள் கட்சி தயாராக உள்ளது’
  ‘கால் இறுதிப் போட்டியில் இந்தியா மேற்கிந்திய அணியைச் சந்திக்கும்’
  ‘இன்று மருத்துவத் துறை சந்திக்கும் சவால்கள் பல’
  உரு வழக்கு ‘உண்மையைச் சந்திக்கப் பயமா?’

 • 4

  (ஒரு குறிப்பிட்ட நிலை, பிரச்சினை அல்லது முக்கியமான நிகழ்வுகள், முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள் போன்றவற்றை) அனுபவிக்க, பெற, பார்க்க நேர்தல்; எதிர்கொள்ளுதல்.

  ‘வளர்ந்துவரும் நாடுகள் இன்று சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்’
  ‘காந்தி, அம்பேத்கர் போன்றோர் கடந்த நூற்றாண்டில் இந்தியா சந்தித்த மாமனிதர்களாகும்’
  ‘உலகம் சந்தித்த மாபெரும் யுத்தங்கள்’
  ‘நான் சந்தித்த அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல’
  ‘பாலியல் கல்வியின் அவசியத்தைக் குறித்துப் பேசியதால் அவர் பலருடைய எதிர்ப்புகளையும் சந்தித்தார்’
  ‘கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா பல வெற்றிகளைச் சந்தித்திருக்கிறது’

 • 5

  (ஆறுகள், சாலைகள்) கூடுதல்; (இரண்டு கோடுகள் ஒரு புள்ளியில்) சேருதல்; ஒன்றுசேர்தல்.

  ‘கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம் அலகாபாத் ஆகும்’
  ‘இரண்டு கோடுகளும் 75ᵒ கோணத்தில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன’

 • 6

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்று) கிடைத்தல்.

  ‘ஏதாவது வேலை சந்தித்தால் துன்பம் தீரும்’
  ‘கடையில் சாமான் கட்டிக் கொடுக்கும் சஞ்சிகை சந்தித்தாலும் வாசிக்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது’

தமிழ் சந்தி யின் அர்த்தம்

சந்தி

பெயர்ச்சொல்

 • 1

  சாலைகள் கூடும் இடம்.

  ‘சந்தியில் நின்று கொண்டு என்ன பேச்சு?’
  ‘சந்திக்குச் சந்தி இருக்கும் பிள்ளையார் கோயில்கள்’

 • 2

  இலக்கணம்
  இரண்டு சொற்கள் அல்லது இடைச்சொற்கள் சேரும்போது அவற்றின் இறுதி எழுத்தும் அடுத்து வருவதன் முதல் எழுத்தும் இணையும்போது ஏற்படும் மாற்றம் முதலியவை.

தமிழ் சந்தி யின் அர்த்தம்

சந்தி

பெயர்ச்சொல்

 • 1

  அந்தி மாலைப் பொழுது.

  ‘சந்தியில் ஜபம்’