சரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சரி1சரி2சரி3சரி4

சரி1

வினைச்சொல்சரிய, சரிந்து, சரிக்க, சரித்து

 • 1

  (மணல் மேடு, கட்டடம் முதலியவை) குலைந்து ஒரு பக்கமாகச் சாய்தல்.

  ‘மண் சரிந்து விழுந்ததால் கிணறு வெட்டிக்கொண்டிருந்த இருவர் காயமடைந்தார்கள்’
  ‘பலத்த மழையால் பாறை சரிந்து விழுந்து போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டது’

 • 2

  நல்ல அல்லது உயர்ந்த நிலையிலிருந்து மோசமான அல்லது தாழ்ந்த நிலைக்கு இறங்குதல்.

  ‘மாநில அரசு கோதுமையை இறக்குமதி செய்யப்போகிறது என்ற செய்தி வந்ததும் அதன் விலை சரிந்தது’
  ‘அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது புகழ் சரியத் தொடங்கிவிட்டது’

 • 3

  (கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் தொடர்ந்து) விழுதல்.

  ‘அணியின் தலைவர் ஆட்டம் இழந்ததும் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன’

 • 4

  (வயிறு கிழிந்து குடல்) வெளிவருதல்.

  ‘ஜல்லிக்கட்டுக் காளை குத்தியதில் இருவருக்குக் குடல் சரிந்தது’

சரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சரி1சரி2சரி3சரி4

சரி2

வினைச்சொல்சரிய, சரிந்து, சரிக்க, சரித்து

 • 1

  (நிமிர்ந்த, செங்குத்தான நிலையிலிருந்து ஒரு பக்கமாக அல்லது ஒன்றின் மீதாக) சாய்த்தல்.

  ‘பாத்திரத்தைச் சரித்து நீரை ஊற்றினாள்’

 • 2

  (மணல், கருங்கல் முதலியவற்றை மேலிருந்து கீழ்நோக்கி) தள்ளுதல்.

  ‘மணலை லாரியிலிருந்து கீழே சரித்துவிட்டனர்’

 • 3

  (கிரிக்கெட்டில் விக்கெட்டுகளைக் குறைந்த நேர இடைவெளியில்) வீழ்த்துதல்.

  ‘உணவு இடைவேளைக்கு முன்னரே இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளைச் சரித்துவிட்டனர்’

சரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சரி1சரி2சரி3சரி4

சரி3

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தகுதியானது; பொருத்தமானது.

  ‘இந்தக் கேள்விக்கு நீங்கள் கூறியதுதான் சரியான பதில்’
  ‘நீ செய்தது சரியா?’

 • 2

  நல்ல நிலை.

  ‘எனக்கு உடம்பு சரியில்லை’
  ‘சில காலமாக அவருக்கு மனசு சரியில்லை’
  ‘அம்மாவுக்கு உடம்பு சரியாக இருக்கிறதா?’
  ‘கடிகாரம் சரியாக ஓடவில்லை’

 • 3

  சற்றுக் கூடுதல் அல்லது குறைவு என்று சொல்ல முடியாதபடி துல்லியமானது; (எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த) உரிய அளவு.

  ‘மல்யுத்த வீரர்கள் எடையில் சரிசமம்’
  ‘சொத்தைச் சரிபாதியாகப் பிரிக்க வேண்டும்’
  ‘சரியான அளவு தண்ணீர் ஊற்றிச் சமைத்தால் சோற்றை வடிக்க வேண்டியதில்லை’

 • 4

  (ஒன்றுக்கொன்று) ஈடு.

  ‘நீ அவனை அடித்ததற்கு அவன் உன்னைக் கிள்ளியது சரியாகப் போயிற்று’

சரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சரி1சரி2சரி3சரி4

சரி4

இடைச்சொல்

 • 1

  (ஒன்றைச் செய்யுமாறு சொல்லும்போதோ ஒன்றைச் செய்வதற்கு அனுமதி கேட்கும்போதோ மற்றவர் தன்) இசைவைத் தெரிவித்து இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘‘நாளைக் காலை எட்டு மணிக்கு வா’. ‘சரி, வருகிறேன்’’
  ‘‘உங்கள் பணத்தை அடுத்த வாரம் தரட்டுமா?’ ‘சரி, அப்படியே செய்யுங்கள்’’

 • 2

  ஒரு செயல், உரையாடல் போன்றவற்றை முடித்துக்கொள்ளும் நோக்கில் வாக்கியத்தின் முதலில் பயன்படுத்தும் சொல்.

  ‘சரி, நான் புறப்படுகிறேன்’
  ‘சரி, பேச்சை நிறுத்திவிட்டு வேலையைப் பாருங்கள்’

 • 3

  குறிப்பிடப்படும் ஒன்றை எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொதுவானதாக ஆக்கிக் கூறும்போது பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘யார் வந்து கேட்டாலும் சரி, நான் அந்தப் புத்தகத்தைத் தர மாட்டேன்’
  ‘வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, அவர் அதிகம் பேச மாட்டார்’
  ‘முதலாளிகளும் சரி, தொழிலாளிகளும் சரி, விட்டுக்கொடுத்துப் போக வேண்டும்’

 • 4

  ‘குறிப்பிடப்படும் செயலோடு ஒன்று நின்றுவிடுகிறது அல்லது நின்றுவிட்டது’ என்ற பொருளில் வாக்கியத்தின் இறுதியில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘நாங்கள் இருவரும் காலையில் வணக்கம் கூறிக்கொள்வதோடு சரி’
  ‘கார்த்திகை மாதம் இரண்டு நாள் மழை பெய்ததோடு சரி’

 • 5

  பேசிக்கொண்டிருக்கும் பொருளைத் தொடராமல் மற்றொன்றைத் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அவர் போக்கு அப்படி! சரி, நாம் ஊருக்குப் போவதைப் பற்றிப் பேசுவோம்’
  ‘அலுவலக விவகாரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர், ‘அது சரி, உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியாகிவிட்டதா?’ என்று கேட்டார்’

 • 6

  ஒரு சாத்தியத்தைப் பற்றி யோசிக்கும்போது சற்று ஆறுதலான தொனியில் வாக்கியத்தின் முதலில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘சரி, அப்பாதான் இருக்கிறாரே பணம் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தான்’
  ‘சரி, இன்னும் இரண்டு நாள் இருக்கிறதல்லவா, பார்த்துக் கொள்வோம்’

 • 7

  குறிப்பிடும் செயல் எப்படியாவது நிறைவேறினால் போதும் என்ற உணர்வைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘புத்தகத்தை யாராவது படித்தால் சரி’
  ‘யார் மூலமாவது வேலை கிடைத்தால் சரி’
  ‘எப்படியோ கல்யாணம் நடந்தால் சரி என்று இருக்க முடியுமா?’