தமிழ் சாதாரணம் யின் அர்த்தம்

சாதாரணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஆடம்பரம் இல்லாத முறை; அலங்காரத் தன்மை இல்லாதது.

  ‘அவர் பெரும் பணக்காரர்; பெரிய பதவியிலும் இருக்கிறார். ஆனாலும் சாதாரணமாகவே இருந்தார்’
  ‘இது சொகுசு வசதிகள் இல்லாத சாதாரணப் பேருந்து’

 • 2

  (பேருந்தைக் குறிக்கும்போது) பல இடங்களில் நின்றுநின்று போவது.

  ‘இது சாதாரணப் பேருந்துதான்; விரைவுப் பேருந்து இல்லை’

 • 3

  (உடையில்) தொழிலுக்கோ சந்தர்ப்பத்திற்கோ உரியதல்லாதது.

  ‘சாதாரண உடையில் இரு காவலர்கள் நின்றிருந்தனர்’
  ‘திருமணத்துக்குச் சாதாரணப் புடவையா கட்டுவார்கள்?’

 • 4

  (பணம், பதவி முதலியவற்றில்) மேல்நிலை, முக்கியத்துவம், சிறப்பு போன்றவை இல்லாத நிலை.

  ‘இன்று பெரிய தொழிலதிபராக இருப்பவர் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்தான்’
  ‘அவரைச் சாதாரணமாக நினைத்துவிடாதே!’

 • 5

  பதற்றமின்மை; அமைதி.

  ‘அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் நான் சாதாரணமாகத்தான் பேசினேன்’

 • 6

  குறைந்தபட்சமாக இருக்க வேண்டியது.

  ‘சாதாரண மருத்துவ வசதிகள்கூட இல்லாத கிராமம்’
  ‘இந்தச் சாதாரண விஷயம் கூடவா உனக்குப் புரியவில்லை’

 • 7

  வழக்கமானது; இயல்பானது.

  ‘கொலை, கொள்ளை எல்லாம் சாதாரண நிகழ்ச்சிகளாகிவிட்டன’
  ‘அப்பாவிடம் அடி வாங்குவது அவனுக்குச் சாதாரணம்’
  ‘‘மூச்சைச் சாதாரணமாக இழுத்து விடுங்கள்’ என்றார் மருத்துவர்’
  ‘அவனுடைய மார்பின் சுற்றளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., விரிந்த நிலையில் 85 செ.மீ. ஆகும்’

 • 8

  எளிதானது.

  ‘இந்த மூட்டையைத் தூக்குவதெல்லாம் எனக்கு ரொம்பச் சாதாரணம்’
  ‘சாதாரணமான கணக்கு. அதைப் போடுவதற்கு உனக்கு இவ்வளவு நேரமா?’

 • 9

  சராசரியானது.

  ‘நான் ஒரு சாதாரண இந்தியக் குடிமகன்’
  ‘சாதாரண மக்களின் கஷ்டநஷ்டங்களை உணர்ந்த தலைவர்கள் மிகவும் குறைவு’

 • 10

  (பெரும்பாலும் பேசு, கேள் போன்ற சொற்களுடன் வரும்போது) குறிப்பிட்ட எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்காத தன்மை.

  ‘வேலை கிடைத்துவிட்டதா என்று சாதாரணமாகத்தான் கேட்டேன். அதைத் தவறாக எடுத்துக்கொண்டுவிட்டான்’