தமிழ் சில்லறை யின் அர்த்தம்

சில்லறை

பெயர்ச்சொல்

 • 1

  நாணயம்; காசு.

  ‘சட்டைப் பையில் சில்லறை குலுங்கியது’

 • 2

  (அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டை அல்லது நாணயத்தை மாற்றினால் கிடைக்கும்) குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள்.

  ‘நூறு ரூபாய்க்குப் பத்து ரூபாயாகச் சில்லறை தரட்டுமா?’
  ‘ஐம்பது ரூபாய்க்குச் சில்லறை மாற்றிக்கொண்டு வா’
  ‘ஐந்து ரூபாய்க்குச் சில்லறை கிடைக்குமா?’
  ‘கடைக்காரருக்கு ஐம்பது காசு சில்லறை தர வேண்டும். என்னிடம் இரண்டு ரூபாய் நாணயம்தான் இருந்தது’

 • 3

  (பெரும்பாலும் பெயரடையாக) கடைகளின் மூலம் பொருள்களை (சிறுசிறு அளவுகளில்) நுகர்வோரிடம் நேரடியாக விற்கும் முறை.

  ‘சில்லறை வியாபாரம்’
  ‘சில்லறை விற்பனை’
  ‘சில்லறை வியாபாரிகள் சங்கம்’

 • 4

  அற்பம்; சாதாரணம்; முக்கியம் இல்லாதது; உதிரி.

  ‘சில்லறை விஷயத்துக்காக மனத்தைப் போட்டு அலட்டிக்கொள்வாள்’
  ‘சில்லறைப் பூசல்கள்’
  ‘சில்லறைச் செலவுகள்’
  ‘சில்லறைப் பயல்’

 • 5

  பேச்சு வழக்கு (தோராயமாகச் சொல்லும்போது) குறிப்பிடப்படும் அளவுக்குச் சற்றுக் கூடுதலாக இருக்கும் எண்ணிக்கையை அல்லது தொகையைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்; சொச்சம்.

  ‘போன மாதம் என்னிடம் நீ வாங்கிய ஆயிரத்துச் சில்லறையைத் திருப்பிக்கொடுக்க மறக்காதே’
  ‘இந்த நாவலின் எழுநூற்றுச் சில்லறை பக்கங்களையும் படிப்பதற்கு நிறைய பொறுமை வேண்டும்’