தமிழ் சுருக்கு யின் அர்த்தம்

சுருக்கு

வினைச்சொல்சுருக்க, சுருக்கி

 • 1

  (பேச்சு, எழுத்து, வேலை, செலவு போன்றவற்றை) முன்பிருந்த அளவைவிடக் குறைத்தல்.

  ‘கட்டுரையைச் சுருக்கிக் கொடுத்தால் பத்திரிகையில் பிரசுரிக்கிறோம்’
  ‘வேலையைச் சுருக்கு’
  ‘வருமானம் குறைந்துவிட்டதால் செலவையும் சுருக்க வேண்டியுள்ளது’
  ‘‘பேசுவதைச் சுருக்கிக்கொண்டுவிட்டேன். சாப்பாட்டையும் சுருக்க வேண்டும்’ என்றார் முதியவர்’

 • 2

  (கண், நெற்றி முதலியவற்றை) மடிப்புகள் தோன்றும் வகையில் குறுக்கிக்கொள்ளுதல்.

  ‘கிழவர் கண்களைச் சுருக்கிக்கொண்டு கூர்ந்து பார்த்தார்’
  ‘கேள்வியைக் கேட்டவுடன் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு அவன் யோசனையில் ஆழ்ந்தான்’

 • 3

  (விரித்த குடையை) மடக்குதல்; (பையின் வாய்ப் பகுதி, வளையமாக முடிச்சிடப்பட்ட கயிறு முதலியவற்றை) சிறிதாகும்படி செய்தல்.

  ‘குடையைச் சுருக்கிக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு நடந்தார்’
  ‘வெற்றிலைப் பையைச் சுருக்கி இடுப்பில் செருகிக்கொண்டாள்’

தமிழ் சுருக்கு யின் அர்த்தம்

சுருக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (கயிற்றின் ஒரு முனையை மடக்கிக் கயிற்றிலேயே) நகரும் வகையில் போடும் முடிச்சு; (ஒன்றைப் பிணைப்பதற்காகக் கயிற்றில் போடப்படும்) முடிச்சு.

  ‘அவன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொன்றிருக்கிறார்கள்’
  ‘அந்த மாடு எப்படியோ சுருக்கை அவிழ்த்துக்கொண்டுவிட்டது’

 • 2

  (ஆடை முதலியவற்றின்) மடிப்பு.

  ‘சுருக்கு வைத்துத் தைத்த பாவாடை’

தமிழ் சுருக்கு யின் அர்த்தம்

சுருக்கு

வினைச்சொல்சுருக்க, சுருக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (நாற்றத்தைத் தவிர்க்கும் முறையில்) (மூச்சை) அடக்கிக்கொள்ளுதல்.

  ‘ஒழுங்கையில் ஒரே மணமாகக் கிடந்ததால் மூக்கைச் சுருக்கிக்கொண்டு ஓடிவந்துவிட்டேன்’