தமிழ் சுருங்கு யின் அர்த்தம்

சுருங்கு

வினைச்சொல்சுருங்க, சுருங்கி

 • 1

  (அளவில்) சிறிதாதல்.

  ‘துவைத்த பிறகு போட முடியாதபடி புதுச் சட்டை சுருங்கிவிட்டது’
  ‘பட்டினி கிடந்து சுருங்கிப்போன வயிறு’
  ‘அறையில் மேஜையைப் போட்டவுடன் இடம் சுருங்கிவிட்டது’

 • 2

  (இலை, பூ போன்றவை) விரிந்த நிலையிலிருந்து மூடிய நிலைக்கு வருதல்/(நத்தை, ஆமை போன்றவை ஓட்டுக்குள்) சுருண்டுகொள்ளுதல்.

  ‘இந்தச் செடியின் இலைகளைத் தொட்டால் போதும், சுருங்கிவிடும்’
  ‘நத்தை தன் ஓட்டுக்குள் சுருங்கிக்கொண்டது’

 • 3

  (தோல்) சுருக்கம் அடைதல்; சுருக்கம் விழுதல்.

  ‘நெற்றி சுருங்க யோசனையில் ஆழ்ந்திருந்தார்’
  ‘கைகால்களிலெல்லாம் தோல் சுருங்கியிருந்தது’
  உரு வழக்கு ‘நான் பணம் தரப்போவதில்லை என்பது தெரிந்ததும் அவன் முகம் சுருங்கிவிட்டது’

 • 4

  (இரத்த ஓட்டத்தின்போது இதயம், தமனி போன்றவை) குறுகுதல்.

  ‘இதயம் சுருங்கும்போது நாளங்களில் இரத்தம் பாய்ச்சப்படுகிறது’
  ‘இரத்த ஓட்டத்தின்போது தமனி சுருங்கி விரிவதால் நாடித்துடிப்பு உண்டாகிறது’