தமிழ் செய் யின் அர்த்தம்

செய்

வினைச்சொல்செய்ய, செய்து

 • 1

  (ஒரு செயலை) நிகழ்த்துதல் அல்லது மேற்கொள்ளுதல்; ஒரு செயலில் ஈடுபடுதல்.

  ‘அறையில் தனியாக உட்கார்ந்துகொண்டு என்ன செய்கிறாய்?’
  ‘செய்வதைத் திருந்தச் செய்!’
  ‘வேலை செய்யாமல் இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது?’
  ‘வீண் கலாட்டா செய்யாதே!’
  ‘திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன’
  ‘எனக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்’
  ‘நேற்று நான் செய்த சமையல் எப்படி?’
  ‘ஒப்பனை செய்துகொள்ளுவதற்கு இவ்வளவு நேரமா?’
  ‘கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்தான்’
  ‘எனது கட்டுரையில் அவர் சில திருத்தங்கள் செய்தார்’
  ‘இங்கே நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’
  ‘என்ன வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை’
  ‘இயற்பியலில் நியூட்டன் செய்த ஆய்வுகள் உலகையே மாற்றியமைத்திருக்கின்றன’
  ‘மூத்த பையன் வேலை இல்லாமல் இருக்கிறான். அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’

 • 2

  (கேள்வியாக வரும் வாக்கியத்தில் மட்டும்) தொழிலை மேற்கொள்ளுதல்.

  ‘‘நீங்கள் சென்னையில் என்ன செய்கிறீர்கள்?’ ‘நான் ஒரு பள்ளியில் ஆசிரியர்.’’

 • 3

  (ஒன்று அல்லது ஒருவர் குறிப்பிட்ட) விளைவை அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல்; பாதித்தல்.

  ‘‘இந்த மருந்து ஏதாவது செய்யுமா?’ ‘ஒன்றும் செய்யாது.’’
  ‘நாய் ஒன்றும் செய்யாது. பயப்படாமல் வா!’
  ‘‘மாமா உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், என்னிடம் வா’ என்று குழந்தையை அவர் கூப்பிட்டார்’
  ‘வயிற்றை என்னவோ செய்கிறது’

 • 4

  தயாரித்தல்; உருவாக்குதல்.

  ‘இந்தத் தொழிற்சாலையில் காகிதம் செய்கிறார்கள்’
  ‘மீதிப் பலகையை வைத்து ஒரு சின்னப் பெட்டி செய்துவிடு!’

தமிழ் செய் யின் அர்த்தம்

செய்

துணை வினைசெய்ய, செய்து

 • 1

  (‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் அல்லது எதிர்காலப் பெயரெச்சம் + ஆறு, படி என்ற அமைப்பைக் கொண்ட தொடரின் பின்) ஓர் ஆக்கவினை.

  ‘அவனை உடனே மதுரைக்குப் போகச் செய்தேன்’
  ‘என் நண்பர்தான் என்னை வீடு வாங்குமாறு செய்தார்’
  ‘அவன் இப்படிப் பேசியது என் மனத்தை வேதனையுறச் செய்தது’
  ‘சுள்ளென்று அடித்த வெயில் கண்களைக் கூசச் செய்தது’

 • 2

  சில பெயர்ச்சொற்களோடு இணைக்கப்பட்டு அவற்றை வினைப்படுத்தும் வினை.

  ‘கைதுசெய்’
  ‘அடக்கம்செய்’
  ‘திறமைதான் வெற்றி தோல்வியை நிர்ணயம்செய்கிறது’
  ‘வேலைக்கு மனுசெய்திருக்கிறேன்’

 • 3

  வாக்கியத்தின் நிறைவிற்காக மட்டும் முதன்மை வினையோடு இணைந்து வழங்கும் பொது அல்லது போலி வினை.

  ‘அப்பா திட்டவும் செய்தார் அடிக்கவும் செய்தார்’
  ‘நான் நல்ல சம்பளம் வாங்கத்தான் செய்கிறேன்’