தமிழ் செல் யின் அர்த்தம்

செல்

வினைச்சொல்செல்ல, சென்று, செல்லும், செல்லாது, செல்லாத, செல்லாமல் ஆகிய வடிவங்கள் மட்டும்

 • 1

  (இடம்பெயர்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (நடத்தல், ஓடுதல், நகர்தல், பறத்தல், பரவுதல் முதலிய செயல்களின் மூலம்) ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி இடம்பெயர்தல்; போதல்

   ‘ஒற்றையடிப் பாதை வழியாக மலை உச்சிக்குச் சென்றோம்’
   ‘மாடு இந்த வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும்’
   ‘இந்த விரைவுப் பேருந்து திருச்சிவரை செல்கிறது’
   ‘விமானம் மேலே செல்லச்செல்லக் காது அடைத்தது’
   ‘இதயத்திலிருந்து புறப்படும் இரத்தம் தமனியிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் செல்கிறது’
   ‘உடலின் பல பாகங்களிலிருந்தும் செய்திகள் நரம்புகளின் வழியாக மூளைக்குச் செல்கின்றன’
   ‘விண்கலம் சரியான பாதையில் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறை இது’
   ‘மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லக் கூடாது என்று அறிவிப்பு வந்தது’
   ‘காவலர்கள் ரோந்து சென்றனர்’
   ‘ஒலியைவிட ஒளி விரைந்து செல்கிறது’
   உரு வழக்கு ‘எடுத்துக்கொண்ட பொருளுக்கு வெளியே செல்லாதது கட்டுரை ஆசிரியரின் சிறப்பு’

  2. 1.2 (காலம்) கழிதல்

   ‘நேரம் செல்வதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்’
   ‘சில நாட்கள் சென்ற பிறகு மீண்டும் அவரைக் கடைத்தெருவில் சந்தித்தேன்’

  3. 1.3 (பணம், தகவல் போன்றவை ஒருவரை அல்லது ஒன்றை) சேர்தல்

   ‘பணம் அவனுக்குச் சென்றதா என்பது எனக்குத் தெரியாது’
   ‘நான் ஊருக்கு வந்திருக்கும் தகவல் அவருக்கு இந்நேரம் சென்றிருக்கும்’
   ‘தொழிற்சாலையின் வருமானத்தில் பெரும் பகுதி தொழிலாளர்களின் சம்பளத்திற்கே சென்றுவிடுகிறது’

  4. 1.4 (பார்வை, கவனம், மனம் ஒன்றின் மேல்) நிலைகொள்ளுதல்; குவிதல்

   ‘அந்த அழகிய சிலைமீது அவர் பார்வை சென்றது’
   ‘படிப்பில் கவனம் செல்லவில்லை’

 • 2

  (இயக்கம் இல்லாதவற்றை இயங்குவதுபோலக் கூறும் வழக்கு)

  1. 2.1 (ஒரு இடத்துக்கும் இன்னொரு இடத்துக்கும் இடையே அல்லது ஒன்றின் வழியே கம்பி, சாலை, ஆறு போன்றவை) நீண்டு அமைதல்

   ‘இந்தச் சாலை எங்கே செல்கிறது?’
   ‘எங்கள் வீட்டின் மேலாகத் தந்திக் கம்பி செல்கிறது’
   ‘நிலநடுக்கோடு பூமிக்குக் குறுக்காகச் செல்கிறது’
   ‘தண்டுவடத்திலிருந்து பிரிந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் நரம்புகள் செல்கின்றன’
   ‘சீனப் பெருஞ்சுவர் சுமார் நாலாயிரம் மைல் தூரம் செல்கிறது’
   ‘உள்ளங்கையில் தனரேகை நேராக மேலே செல்ல வேண்டும்’

 • 3

  (மரபு வழக்கு)

  1. 3.1 (உணவை) சாப்பிட முடிதல்; (உணவு) இறங்குதல்

   ‘துக்கம் தொண்டையை அடைத்ததால் சாப்பாடு செல்லவில்லை’
   ‘உப்புக்கண்டம் இருந்தால்தான் எனக்குச் சாப்பாடு செல்லும்’

  2. 3.2 குறிப்பிட்ட ஒன்றுக்காக ஒருவரையோ அல்லது ஒரு இடத்தையோ நாடிப் போதல்

   ‘நீ உடனே ஒரு மருத்துவரிடம் செல்வது நல்லது’
   ‘நான் ஒருத்தி வேலைக்குச் சென்றுதான் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்’
   ‘சொத்துப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒரு வழக்கறிஞரிடம் சென்றேன்’

  3. 3.3 ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை அடைதல்

   ‘இரைச்சல் படிப்படியாக உயர்ந்துகொண்டே சென்றது’
   ‘தாளம் கொஞ்சம்கொஞ்சமாக உச்சத்திற்குச் சென்றது’

  4. 3.4 ஒரு இடத்தில் தோன்றி மற்றோர் இடத்தையும் அடைதல்

   ‘பூஜ்யம் என்னும் எண் இந்தியாவிலிருந்துதான் சென்றது என்பார்கள்’
   ‘எங்கள் ஆலையில் உற்பத்தியாகும் பொருள்களில் பெரும் பகுதி மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றன’
   ‘போதைப்பொருள்கள் இந்தியா வழியே பிற நாடுகளுக்குச் செல்வதாக வந்த தகவலை அடுத்துக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது’

  5. 3.5 ஒரு நிலையிலிருந்து நீங்கி வேறொரு நிலைக்குப் போதல்

   ‘விருப்ப ஓய்வுத்திட்டத்தில் செல்வதற்கு குறைந்தது 15 ஆண்டுகளாவது பணியில் இருந்திருக்க வேண்டும்’
   ‘எங்கள் மேலதிகாரி விடுப்பில் சென்றிருக்கிறார்’
   ‘மனுவை விசாரித்த நீதிபதி ‘போலீஸ் காவலில் செல்ல உங்களுக்கு விருப்பமா?’ என்று குற்றவாளியிடம் கேட்டார்’

தமிழ் செல் யின் அர்த்தம்

செல்

வினைச்சொல்செல்ல, சென்று, செல்லும், செல்லாது, செல்லாத, செல்லாமல் ஆகிய வடிவங்கள் மட்டும்

 • 1

  (பணம், நாணயம் போன்றவை) பரிமாற்றத்திற்கு உரியதாக அமைதல்.

  ‘இந்த ரூபாய் நோட்டு செல்லும். செல்லாது என்று யார் சொன்னார்கள்?’

 • 2

  (தேர்தல், தீர்ப்பு முதலியவை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு) அதிகாரபூர்வ மதிப்பு உடையதாக அல்லது அதிகாரபூர்வமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடியதாக அமைதல்.

  ‘அந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லத் தக்கதுதான் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது’
  ‘மொத்த ஓட்டுகளில் ஆயிரம் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் ஆகும்’

 • 3

  (தந்திரம், சூழ்ச்சி, அதிகாரம் போன்றவை) எடுபடுதல்; பலித்தல்.

  ‘இந்த முறை உன் தந்திரம் இங்கே செல்லாது’

தமிழ் செல் யின் அர்த்தம்

செல்

பெயர்ச்சொல்

 • 1

  கறையான்.

  ‘செல் அரித்த ஏடு’