தமிழ் செலுத்து யின் அர்த்தம்

செலுத்து

வினைச்சொல்செலுத்த, செலுத்தி

 • 1

  (போக விடுதல் அல்லது போகச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (வண்டி முதலிய வாகனங்களை) ஓட்டுதல்

   ‘காரை வேகமாகச் செலுத்திக்கொண்டு போய்விட்டார்’
   ‘துடுப்பை வலித்துப் படகைச் செலுத்தினான்’

  2. 1.2 (ஒன்று ஒரு இலக்கை நோக்கி) போகும்படி செய்தல்; அனுப்புதல்; ஏவுதல்

   ‘சமீபத்தில் இன்சாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது’
   ‘இலக்கின் மையத்தில் இருந்த சிவப்புப் புள்ளியை நோக்கி அம்பைச் செலுத்தினார்’

  3. 1.3 (ஒரு திசையில் அல்லது ஒன்றை நோக்கி) போகவிடுதல்

   ‘கூட்டத்தில் தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையைச் செலுத்தினார்’
   ‘என் மனத்தைத் தீவிரமாக இலக்கியத்தை நோக்கிச் செலுத்தினேன்’
   ‘ஆன்மீகத்தை நோக்கி என்னைச் செலுத்திய சக்தி எதுவென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்’

 • 2

  (ஒன்றைக் கொடுத்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (கட்டணம், அபராதம், வரி, வட்டி போன்றவற்றை அல்லது வங்கியில் பணத்தை) கட்டுதல்

   ‘பதினைந்தாம் தேதிக்குள் மின்கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும்’
   ‘வருமான வரி செலுத்தாதவர்களின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’
   ‘வங்கியில் தனது கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினான்’

  2. 2.2 (ஒருவருக்கு இரத்தம், பிராணவாயு முதலியவற்றை) ஏற்றுதல்; உட்செலுத்துதல்

   ‘மயக்கமுற்று விழுந்தவருக்கு மருத்துவமனையில் பிராணவாயு செலுத்தப்பட்டது’
   ‘நோயாளிக்கு உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும்’

  3. 2.3 (ஒரு பரப்பினுள் ஒன்றை) உள் நுழையச் செய்தல்

   ‘அவருடைய இரத்தக் குழாயில் நுண்ணிய குழல் ஒன்று செலுத்தப்பட்டது’
   ‘குழாய்க் கிணறு அமைக்க நிலத்தில் வட்டமாகத் தோண்டி அதற்குள் குழாயைச் செலுத்துவார்கள்’
   ‘அந்தப் பலகையில் நான்கு ஆணிகள் செலுத்தப்பட்டிருந்தன’

  4. 2.4 (அன்பு, நன்றி, மரியாதை, பக்தி போன்ற உணர்வுகளை) உரியதாக ஆக்குதல்

   ‘அவர்மீது அன்பு செலுத்த யாருமில்லை’
   ‘வீட்டு நினைவுகளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை’
   ‘ஆலைத் தொழிலாளர் பிரச்சினையில் நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லை’
   ‘தக்க சமயத்தில் உதவிய தங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்’
   ‘தீ விபத்தில் இறந்துபோன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது’

  5. 2.5 (அதிகாரம், ஆட்சி, கட்டுப்பாடு முதலியவற்றை) மேற்கொள்ளுதல்

   ‘மத்தியில் ஆட்சி செலுத்தும் கட்சி சில மாநிலங்களிலும் ஆட்சி செலுத்துகிறது’

  6. 2.6 (பெரும்பாலும் அறிவியல் சோதனைகளில் ஒரு கரைசலில் அல்லது ஊடகத்தில் மின்சாரம்) பரவுமாறு செய்தல்

   ‘கரைசலில் மின்சாரத்தைச் செலுத்திச் சோதனை செய்து பார்த்தார்’