சொல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொல்1சொல்2

சொல்1

வினைச்சொல்சொல்ல, சொல்லி

 • 1

  (வார்த்தையை, தொடரை) பேச்சின் மூலம் வெளிப்படுத்துதல்; (ஒன்றை ஒருவர்) அறியச் செய்தல்.

  ‘‘நான் போய்த் தண்ணீர் கொண்டுவருகிறேன்’ என்று சொன்னார்’
  ‘நான் கேட்டதற்கு இல்லை என்று சொல்லிவிட்டான்’
  ‘இரண்டு நாட்களாக என் மனத்தில் சொல்ல முடியாத ஒரு அவஸ்தை’
  ‘நீங்கள் சொன்ன முகவரியில் யாருமே இல்லை’
  ‘கதை சொல்லி முடிப்பதற்குள் குழந்தைகள் தூங்கிவிட்டன’
  ‘எனக்கு ஆறுதல் சொல்வதற்கு யாருமே இல்லை’
  ‘அவன் ஊருக்குப் போன செய்தியை என்னிடம் யாரும் சொல்லவில்லை’

 • 2

  (எண்ணம், கருத்து முதலியவற்றை எழுத்தின் மூலம் அல்லது படைப்புகளின் மூலம்) தெரிவித்தல்.

  ‘கதையில் எதையும் சொல்லலாம்; ஆனால் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்’
  ‘நடந்து முடிந்த தேர்தலைப் பற்றிப் பத்திரிகைகள் என்ன சொல்கின்றன?’
  ‘பல காட்சிகளில் இயக்குநர் என்ன சொல்லவருகிறார் என்றே புரியவில்லை’
  ‘சோழ மன்னர் கோயிலைக் கட்டுவித்துக் குடமுழுக்கு செய்ததாகக் கல்வெட்டு சொல்கிறது’

 • 3

  (வார்த்தைகளால் ஒன்றை) விவரித்தல் அல்லது விளக்குதல்.

  ‘அந்தக் கோயிலின் அழகை எப்படிச் சொல்வேன்!’
  ‘இதைச் சொல்லக் கம்பன்தான் வர வேண்டும்’
  ‘இராமாயணத்தைச் சில வரிகளிலும் சொல்ல முடியும்’
  ‘இந்து மதத்தின் தத்துவத்தைப் பற்றி அவர் மிக விரிவாகச் சொன்னார்’

 • 4

  (ஒன்றைச் செய்யும்படி) கேட்டுக் கொள்ளுதல்; கட்டளையிடுதல்/(ஒன்றுக்காக) பரிந்துரைசெய்தல்.

  ‘உங்களை அப்பா உடனே வரச்சொன்னார்’
  ‘அப்பா சொன்னால்தான் செய்வான்’
  ‘அமைச்சர் சொன்னால்கூட அவர் உனக்கு வேலை தர மாட்டார்’
  ‘கூட்டத்திற்கு அவரைத் தலைமை தாங்கச் சொல்லலாம்’
  உரு வழக்கு ‘என் மனசாட்சி சொல்கிறபடிதான் நான் நடப்பேன்’

 • 5

  அருகிவரும் வழக்கு (பாடம்) கற்றுத்தருதல்.

  ‘உனக்கு இலக்கணப் பாடம் சொன்னது யார்?’

 • 6

  (ஒன்றுக்குக் காரணமான ஒருவரை அல்லது ஒன்றை) குறைகூறுதல்.

 • 7

  குறிப்பிடுதல்; குறிப்பிட்டு வழங்குதல்.

  ‘இந்தியாவை பாரதம் என்றும் சொல்லுகிறோம்’
  ‘ஆங்கில மருத்துவம் என்று சொல்லப்படுகிற நவீன மருத்துவத்தின் வரலாறு’
  ‘நான் உன்னைச் சொல்லவில்லை, அவனைச் சொன்னேன்’
  ‘என் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்லக் கூடிய நிகழ்ச்சி ஒன்று போன வருடம் நடந்தது’
  ‘உலக இலக்கியங்களுக்கு நிகராகச் சொல்லத் தக்க இலக்கியங்கள் தமிழில் இருக்கின்றன’
  ‘அவரைப் பற்றி நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்’

 • 8

  உறவு கொண்டாடுதல்.

  ‘நாங்கள் நகரத்தில் இருப்பதால் மாமன், மச்சான் என்று சொல்லிக்கொண்டு அடிக்கடி யாராவது வீட்டுக்கு வந்துவிடுவார்கள்’
  ‘சொந்தக்காரன் என்று சொல்லிக்கொள்ள இந்த ஊரில் யாரும் இல்லை’

சொல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொல்1சொல்2

சொல்2

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி; குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் எழுத்து அல்லது எழுத்துகளின் தொகுதி; வார்த்தை.

 • 2

  பேசுவது அல்லது பேசப்பட்டது; பேச்சு.

  ‘இளம் வயதில் அன்பான சொல்லுக்காக எவ்வளவு ஏங்கியிருக்கிறேன் தெரியுமா?’

 • 3

  கட்டளை/அறிவுரை.

 • 4

  வாக்கு.

  ‘தன் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார்’

 • 5

  பேச்சு வழக்கு கடுஞ்சொல்.

  ‘சொல் பொறுக்காமல் என்னிடம் வந்து அழுதாள்’