தமிழ் தகுதி யின் அர்த்தம்

தகுதி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு) ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன்அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

  ‘மேற்பார்வையாளர் வேலையில் சேருவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன?’
  ‘என் கதையை விமர்சிக்க அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது’
  ‘ஒரு எழுத்தாளர் ஆவதற்கான தகுதிகள் எவை?’
  ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு என்று சில தகுதிகளைத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது’
  ‘பொறியியல் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது’

 • 2

  (ஓர் அமைப்பு அல்லது அதிகாரி ஒரு செயலைச் செய்ய) அதிகாரபூர்வமான முறையில் பெற்றிருக்கும் உரிமை.

  ‘தகுதி பெற்ற அலுவலர் கையெழுத்திட்டால் மட்டுமே இந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும்’
  ‘அரசின் ஆணைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் தகுதி நீதிமன்றத்துக்கு உண்டு’
  ‘தகுதி பெற்ற கட்டடக் கலைஞரிடம் சான்று பெற்ற பிறகே அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்ட முடியும்’

 • 3

  சமூகத்தில் ஒருவர் பெற்றிருக்கும் அந்தஸ்து/(தேர்ந்தெடுக்கவோ இடம்பெறவோ) தேவையான மதிப்பு.

  ‘தன்னுடைய தகுதிக்கு அந்த அறையில் தங்குவது கேவலம் என்று நினைத்தார்’
  ‘நீ காட்டும் அன்புக்கு நான் தகுதி உடையவனா?’

 • 4

  (மதிப்பீடு, விமர்சனம், பரிசு போன்றவற்றுக்கு) ஏற்றதாக ஒன்று கொண்டிருக்கும் அடிப்படைக் கூறு அல்லது அம்சம்.

  ‘‘உலகத் திரைப்பட விழாவுக்கு அனுப்பும் அளவுக்குத் தமிழ்ப் படங்களுக்குத் தகுதி இருக்கிறதா?’ என்று அவர் கேட்டார்’
  ‘பரிசைப் பெறும் தகுதி இந்த நூலுக்கு உண்டு’
  ‘ஒரு சர்வதேச சுற்றுலா மையமாக அமைய ராமேஸ்வரத்துக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது’

 • 5

  பொருத்தம்.

  ‘மணமக்கள் தங்களுக்குத் தகுதியான துணையை விளம்பரங்கள்மூலம் தேர்ந்தெடுக்க முடிகிறது’
  ‘நகை செய்வதற்குத் தகுதியான வைரத்தைத் தேர்ந்தெடுக்கும் திறமை நகை செய்பவருக்கு இருக்க வேண்டும்’
  ‘இந்த வட்டாரத்தில் பயிரிடுவதற்குத் தகுதியான நிலங்கள் மிகவும் குறைவு’
  ‘எல்லாப் பொழுதுகளிலும் பாடத் தகுதியான ராகம் ஹரிகாம்போதி’

 • 6

  (ஒரு அலுவலகம், நிறுவனம் போன்றவற்றில் ஒருவர் வகிக்கும்) பதவி.

  ‘தகுதி வாரியாக அடிப்படைச் சம்பளமும் மாறுபடும்’

 • 7

  திறன்; ஆற்றல்.

  ‘செப்புக் கம்பிகளுக்கு மின்சாரத்தைக் கடத்தும் தகுதி அதிகம் உண்டு’
  ‘இந்த அமிலத்துக்கு உலோகத்தைக் கரைக்கும் தகுதி இருக்கிறது’

 • 8

  சக்தி.

  ‘அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது அதை ஜீரணிக்கும் தகுதி உடலுக்கு வேண்டும்’
  ‘உன் அளவுக்குச் செலவு செய்ய எனக்குத் தகுதி கிடையாது’