தமிழ் தப்பு யின் அர்த்தம்

தப்பு

வினைச்சொல்தப்ப, தப்பி

 • 1

  (அடைத்துவைக்கப்பட்ட நிலையிலிருந்து அல்லது பிடிபட்ட நிலையிலிருந்து) விடுபட்டு நீங்குதல் அல்லது வெளியேறுதல்.

  ‘வங்கியைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்ப முயன்ற கொள்ளையரைப் பொதுமக்கள் பிடித்தனர்’
  ‘மிருகக்காட்சிசாலையிலிருந்து சிங்கம் தப்பிவிட்டது’
  ‘சிறையிலிருந்து தப்பிய கைதியைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்’

 • 2

  (தண்டனை அல்லது சட்டம் போன்றவற்றுக்கு) உட்படாத நிலையை அடைதல்.

  ‘குற்றத்தை ஒப்புக்கொண்டால் கடும் தண்டனையிலிருந்து தப்ப வாய்ப்பிருக்கிறது’
  ‘சட்டத்திலிருந்து தப்பிக்க ஆயிரம் ஓட்டைகள் இருக்கிறது என்று பேசுவது சரியல்ல’

 • 3

  (தாக்குதல், விபத்து போன்றவற்றால்) பாதிப்பு அடையாமல் போதல்.

  ‘தலையைக் குனிந்து, பாய்ந்து வந்த குண்டிலிருந்து தப்பினார்கள்’
  ‘விபத்தில் காயம் அதிகம் இல்லாமல் தப்பினார்’

 • 4

  (திசை, குறி முதலியன) மாறுதல்; விலகிப்போதல்.

  ‘திசை தப்பி வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் அவனுக்கு எழுந்தது’
  ‘வைத்த குறி தப்பவில்லை’

 • 5

  (பார்வை, கவனம் முதலியவற்றில்) அகப்படாமல் போதல்.

  ‘ஒரு சிறு தவறுகூட அவர் கண்ணிலிருந்து தப்பாது’

தமிழ் தப்பு யின் அர்த்தம்

தப்பு

வினைச்சொல்தப்ப, தப்பி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (துணியைக் கல்லில்) அடித்தல்.

  ‘துணியை இன்னும் நன்றாகத் தப்பித் துவை’

 • 2

  பேச்சு வழக்கு (ஆளை) புடைத்தல்.

  ‘திருடனைப் பிடித்துத் தப்பிவிட்டார்கள்’

தமிழ் தப்பு யின் அர்த்தம்

தப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  முறையானது, சரியானது என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு மாறான செயல்; தவறு.

  ‘நீ தம்பியை அடித்தது தப்பு’
  ‘தொகையை எழுதாமல் ரசீதில் கையெழுத்து வாங்குவது தப்பான காரியம்’

 • 2

  சரியல்லாத முடிவு; தவறு.

  ‘தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியது தப்பாகப் போய்விட்டது. குழந்தைகள் படிப்பு கெடுகிறது’
  ‘குடை எடுக்காமல் வந்தது தப்பு’

 • 3

  (கணக்கில், எழுத்தில், அச்சில்) பிழை; தவறு.

  ‘கணக்கைத் தப்பாகப் போட்டுவிட்டேன்’
  ‘யாரோ கற்றுக்குட்டி எழுதியதுபோல் கட்டுரையில் ஏகப்பட்ட தப்பு’

 • 4

  உண்மை நிலைக்கு மாறானது; தவறு.

  ‘நான் சொன்னதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதே!’
  ‘என்னைப் பற்றி நீ தப்பான அபிப்பிராயம் வைத்திருக்கிறாய்’

தமிழ் தப்பு யின் அர்த்தம்

தப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தப்பட்டை.