தமிழ் தாண்டு யின் அர்த்தம்

தாண்டு

வினைச்சொல்தாண்ட, தாண்டி

 • 1

  (ஒன்றை மிதிக்காமல் அல்லது ஒன்றின்மீது செல்லாமல்) தாவுதல்; (ஒன்றை) தாவிக் கடத்தல்.

  ‘கோலத்தை மிதிக்காமல் தாண்டி வா!’
  ‘கட்டைச் சுவரை சர்வ சாதாரணமாகத் தாண்டினான்’
  ‘வேகமாக ஓடிவந்து வேலியைத் தாண்டிக் குதித்தான்’

 • 2

  (ஒருவரை அல்லது ஒன்றை) பக்கவாட்டில் அல்லது குறுக்குவாக்கில் கடந்து போதல்.

  ‘அவர் மேடையிலிருந்து இறங்கி என்னைத் தாண்டிப் போகும்போது திரும்பிப் பார்த்தார்’
  ‘வண்டி சிதம்பரத்தைத் தாண்டியதும் என்னை எழுப்பு’
  ‘சட்டையின் கைப்பகுதி முழங்கையைத் தாண்டக்கூடாது’
  ‘இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டியும் பரதநாட்டியம் புகழ் பெற்றுள்ளது’
  ‘திருப்பம் தாண்டியவுடன் அவர் வீடுதான்’

 • 3

  (வயது, காலம், எண்ணிக்கை முதலியவை குறிப்பிட்ட அளவுக்கு) மேற்படுதல்; மேல் செல்லுதல்.

  ‘இந்தியாவின் மக்கள்தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது’
  ‘அவன் வீட்டுக்கு வரும்போது மணி பத்தைத் தாண்டியிருந்தது’
  ‘நான் இந்தப் புத்தகத்தில் இன்னும் பத்துப் பக்கம்கூடத் தாண்டவில்லை’

 • 4

  (தடையாக உள்ளதை) கடத்தல்.

  ‘அவர் பல எதிர்ப்புகளைத் தாண்டிதான் புதிய கட்சியைத் தொடங்கினார்’
  ‘வாழ்க்கையில் பல போராட்டங்களைத் தாண்டி வந்துள்ளார்’
  ‘சிறைச்சாலையில் உள்ள காவல் தடைகளைத் தாண்டித் தப்பிப்பது கடினம்’
  ‘மருத்துவமனையிலிருக்கும் அம்மா ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார்’
  ‘யோகத்தின் உச்ச நிலையை அடைய நீங்கள் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கும்’

 • 5

  (கட்டம், கோடு போன்றவற்றைக் கொண்டு ஆடும் ஆட்டங்களில் ஆடுபவர் அல்லது ஆட்டத்தில் பயன்படுத்தும் காய்) நகர்தல்.

  ‘சதுரங்க ஆட்டத்தில் ராஜா ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியாது’

 • 6

  (ஒலி, ஒளி முதலியவை ஒரு பரப்பைக் கடந்து) செல்லுதல்.

  ‘சூரிய ஒளிக்கதிர் காற்றுமண்டலத்தைத் தாண்டிவந்து பூமியில் விழுகிறது’
  ‘அவள் பார்வை கூரையைத் தாண்டி எங்கோ சென்றது’

 • 7

  (மரபு, பழக்கம் போன்றவற்றை) மீறுதல்.

  ‘கந்தர்வ மணம் மரபுகளைத் தாண்டியது’
  ‘நான் சொல்கிற விஷயம் அலுவலகத்தைத் தாண்டி வெளியே போகக்கூடாது’

 • 8

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை ஒன்றில்) மிஞ்சுதல்.

  ‘அவனை யாராலும் படிப்பில் தாண்ட முடியாது’
  ‘சம்பல் ஆக்குவதில் அம்மாவைத் தாண்ட முடியாது’