தமிழ் திரும்பப் பெறு யின் அர்த்தம்

திரும்பப் பெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

 • 1

  (சமர்ப்பித்த பொருள், விண்ணப்பம், தீர்மானம், வழக்கு அல்லது பிறப்பித்த சட்டம், உத்தரவு முதலியவற்றை) விலக்கிக்கொள்ளுதல்; வாபஸ்வாங்குதல்.

  ‘காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார்’
  ‘பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மசோதாவை அரசு திரும்பப் பெற்றது’
  ‘வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு நாளைதான் கடைசி நாள்’

 • 2

  (ஒரு இடத்துக்கு அனுப்பிய ராணுவம், காவலர்கள், அதிகாரிகள் போன்றோரை) திரும்ப அழைத்துக்கொள்ளுதல்.

  ‘இந்திய அரசு இலங்கையிலிருந்து ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது’
  ‘போர் அபாயத்தைத் தொடர்ந்து இந்தியத் தூதரைப் பாகிஸ்தானிலிருந்து அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது’

 • 3

  (விற்பனைக்கு வந்த பொருளைத் தரமின்மையின் காரணமாக ஒரு நிறுவனம் விற்காமல்) திரும்ப எடுத்துக்கொள்ளுதல்.

  ‘அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வேதிப்பொருள்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனம் தங்கள் தயாரிப்புகளையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டது’

 • 4

  (ஒருவர் தான் கூறிய கருத்து) தவறு என்று ஒத்துக்கொள்ளுதல் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுதல்.

  ‘அணை கட்டுவது தொடர்பாக அந்த நடிகர் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று சில அமைப்புகள் போராட்டம் நடத்தின’