தமிழ் திற யின் அர்த்தம்

திற

வினைச்சொல்திறக்க, திறந்து

 • 1

  (உள்ளிருப்பது வெளியே தெரியும்படியான நிலைக்கு வருதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (கதவு போன்றவை) மூடியிருக்கும் நிலையிலிருந்து நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்தல்/(கதவு போன்றவற்றை) மூடியிருக்கும் நிலையிலிருந்து நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்த்துதல்

   ‘கதவு ஏன் இப்படித் திறந்து கிடக்கிறது?’
   ‘ஜன்னலைத் திறக்க முடியவில்லை’
   ‘படலைத் திறந்துகொண்டு மாடு உள்ளே வந்துவிட்டது’

  2. 1.2 (பூட்டு போன்றவை) பூட்டியிருக்கும் நிலையிலிருந்து விடுபடுதல்/(பூட்டு போன்றவற்றை) பூட்டியிருக்கும் நிலையிலிருந்து விடுபடச் செய்தல்

   ‘எந்தச் சாவியைப் போட்டுப்பார்த்தும் பூட்டு திறக்கவில்லை’
   ‘பூட்டைத் திறக்கலாம் என்றால் சாவியைக் காணோம்’

  3. 1.3 உள்ளிருந்து ஒன்றை எடுப்பதற்கு வசதியான நிலைக்கு (பெட்டி, பை போன்றவை) வருதல்/உள்ளிருந்து ஒன்றை எடுப்பதற்கு வசதியான நிலைக்கு (பெட்டி, பை போன்றவற்றை) வரச் செய்தல்

   ‘பெட்டி ஏன் இப்படித் திறந்து கிடக்கிறது?’
   ‘பையைத் திறந்து புத்தகத்தை வெளியே எடுத்தான்’

  4. 1.4 (மூடக்கூடிய அல்லது ஒன்றுசேரக்கூடிய கை போன்ற உறுப்புகளைக் குறித்து வரும்போது) விரிதல்/(கை முதலிய உறுப்புகளை) விரித்தல்

   ‘தூங்கும் குழந்தையின் வாய் திறந்திருந்தது’
   ‘கையைத் திறந்து காட்டு!’
   ‘கண்களை நன்றாகத் திறந்து எதிரே என்ன இருக்கிறது என்று பார்’

  5. 1.5 (புத்தகம் போன்றவை பக்கம் தெரியும்படியாக) விரிதல்/(பக்கம் தெரியும்படியாக) விரித்தல்; பிரித்தல்

   ‘பேரேடு திறந்திருக்கிறது, மூடி வை!’
   ‘புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு படிக்காமல் வேடிக்கை பார்க்கிறாயா?’

  6. 1.6 (அறுவைச் சிகிச்சை செய்வதற்காகக் குறிப்பிட்ட உறுப்பை மூடியுள்ள தோல், தசை போன்றவற்றை) நீக்கிப் பிரித்தல்

   ‘மார்பைத் திறந்துதான் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்’
   ‘மருத்துவர் வயிற்றைத் திறந்துபார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்’
   ‘இப்போதெல்லாம் மார்பைத் திறக்காமலேயே சில வகை அறுவைச் சிகிச்சைகளைச் செய்ய முடியும்’

  7. 1.7 (உள்ளிருப்பது வெளியே வரும் வகையில் குழாய் போன்றவற்றை) திருகுதல்

   ‘எங்கள் ஊரில் குழாயைத் திறந்தால் போதும், தண்ணீர் கொட்டும்’

  8. 1.8 (பாட, பேச அல்லது அழ முடியும் வகையில்) குரலை வெளிவரச் செய்தல்

   ‘தொண்டையைத் திறந்து பாடினால்தான் கேட்க நன்றாக இருக்கும்’
   ‘மனுஷன் வாயைத் திறந்தால் போதும்; பேசுவதை நிறுத்தவே மாட்டார்’
   ‘உன் மகன் தொண்டையைத் திறந்தால் போதும்; யாராலும் அவனை அடக்க முடி யாது’

  9. 1.9 (உள்ளிருப்பதைப் பயன்படுத்தும் விதத்தில் மூடியிருக்கும் பாத்திரம், சீசா போன்றவற்றின் மூடியை) நீக்குதல்; அகற்றுதல்

   ‘தூக்கைத் திறந்து முறுக்கை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்’
   ‘திறக்க முடியாத அளவுக்கு ஜாடி இறுக்கமாக மூடியிருந்தது’

  10. 1.10 (அணை, ஏரி போன்றவற்றில் உள்ள நீரை மக்கள் பயன்படுத்தும் முறையில்) வெளியே விடுதல்

   ‘வழக்கமாக ஜுன் மாதம் மேட்டூர் அணையைப் பாசனத்திற்காகத் திறந்துவிடுவார்கள்’
   ‘ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது தாமதமடைந்ததால் குறுவைப் பயிர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது’

  11. 1.11 (உறை போன்றவற்றை) பிரித்தல்/(ஒப்பந்தப்புள்ளி இருக்கும் உறையை மற்றவர்கள் முன்னிலையில்) பிரித்தல்

   ‘அஞ்சல் உறையைத் திறந்து பார்’
   ‘அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்’

  12. 1.12 (பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் சாலை, கட்டடம் போன்றவற்றைப் பொதுமக்கள்) பயன்படுத்த அனுமதித்தல்

   ‘சித்திரை மாதம் முதல் தேதியன்று பக்தர்களுக்காகச் சபரிமலையில் நடை திறக்கப்படும்’
   ‘புதிய பாலம் போக்குவரத்திற்காகத் திறந்துவிடப்பட்டது’

 • 2

  (செயல்படுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (கல்விக்கூடம், கடை முதலியவை) செயல்படுதல் அல்லது (கடை முதலியவற்றை) செயல்படச் செய்தல்

   ‘கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கும்’
   ‘உடம்பு சரியில்லாததால் நான்கு நாட்களாகக் கடையைத் திறக்கவில்லை’
   ‘தீபாவளி என்பதால் கடைகள் இரவு முழுவதும் திறந்திருந்தன’

  2. 2.2 (புதிதாக நிறுவனம், கடை முதலியவற்றை) துவக்குதல்; ஆரம்பித்தல்

   ‘ஓய்வு பெற்றபின் கடை ஒன்று திறக்கலாம் என்று முடிவு செய்தார்’
   ‘போன மாதம்தான் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று திறந்திருக்கிறேன்’