தமிழ் துடி யின் அர்த்தம்

துடி

வினைச்சொல்துடிக்க, துடித்து

 • 1

  (வேகத்துடன் அசைதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 நடுக்கத்துடன் துள்ளி அசைதல்

   ‘தூண்டிலிலிருந்து விடுபட்டுத் தரையில் விழுந்த மீன் துடித்தது’
   ‘அறுபட்ட பல்லியின் வால் கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தது’

  2. 1.2 (ஒருவரின் கண், உதடு போன்ற உறுப்பு) நடுங்குதல்; வேகமாக அசைதல்

   ‘கோபத்தில் கண்கள் சிவந்து உதடுகள் துடிக்க நின்றான்’
   ‘காலையிலிருந்தே வலது கண் துடித்துக்கொண்டிருக்கிறது’

  3. 1.3 (இதயம், நாடி முதலியவை) இயங்குதல்

   ‘வெயில் தாங்காமல் கீழே விழுந்த முதியவரின் மார்பில் காதை வைத்து இருதயம் துடிக்கிறதா என்று அவன் பார்த்தான்’
   ‘நாடி வேகமாகத் துடிக்கிறது’

  4. 1.4 உடனடியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஒருவர் பரபரப்புடன் இருத்தல்

   ‘இறக்கும் தருவாயில் இருக்கும் தாயை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று துடித்தான்’
   ‘மந்திரி ஆவதற்குத் துடிக்கிறார்’

 • 2

  (வருந்துதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (பசி, அதிர்ச்சி, அவமானம் முதலியவற்றால்) மிகவும் துன்புறுதல் அல்லது தவித்தல்

   ‘வயிற்று வலியால் துடிக்கிறான்’
   ‘குழந்தை அடிபட்ட செய்தி கேட்டதும் துடித்துப்போனான்’