தமிழ் தூக்கு யின் அர்த்தம்

தூக்கு

வினைச்சொல்தூக்க, தூக்கி

 • 1

  (மேலே கொண்டுவருதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒன்றை அல்லது ஒருவரை ஒரு பரப்பிலிருந்து) மேலே உயர்த்துதல்

   ‘மேஜையை இழுக்காமல் தூக்கி நகர்த்தினோம்’
   ‘விபத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முதியவரைத் தூக்கி காரில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்’
   ‘யானை எவ்வளவு பெரிய மரக்கட்டையைத் தூக்குகிறது, பார்!’

  2. 1.2 (தலை, கை முதலியவற்றை) மேல் நோக்கிய நிலைக்குக் கொண்டுவருதல்; உயர்த்துதல்

   ‘வந்திருப்பது யார் என்று தலையைத் தூக்கிப் பார்’
   ‘வகுப்பில் விடை தெரிந்தவர்கள் கையைத் தூக்கினார்கள்’

  3. 1.3 (மடித்தோ சுருட்டியோ நீட்டியோ) மேலே ஏற்றுதல்

   ‘வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு அவன் நடந்து வந்தான்’
   ‘அவள் எப்போதும் புடவையைக் கணுக்காலுக்குக் கொஞ்சம் மேலே தூக்கிக் கட்டியிருப்பாள்’

  4. 1.4 (விலங்கு, பறவை போன்றவை இரையை) கவ்வி அல்லது கொத்தி எடுத்தல்

   ‘நாய் எலும்புத் துண்டைத் தூக்கிக்கொண்டு ஓடியது’
   ‘பருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது’

  5. 1.5 (பளுதூக்கும் போட்டியில்) கனமான இரும்புத் தட்டுகள் மாட்டப்பட்ட இரும்புக்கழியைக் குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்த்திக் கீழே இறக்கிவைத்தல்

   ‘பளுதூக்கும் வீரர் முதல் சுற்றிலேயே 275 கிலோ எடையைத் தூக்கினார்’

  6. 1.6 (சிறு குழந்தையைக் கையில்) எடுத்து வைத்துக்கொள்ளுதல்

   ‘வீட்டுக்குள் நுழைந்ததும் குழந்தை தூக்கிக்கொள்ளச் சொன்னது’
   ‘அழுதுகொண்டிருக்கும் பிள்ளையைத் தூக்காமல் அப்படி என்ன வேலை?’

  7. 1.7 (விக்கிரகம், பல்லக்கு போன்றவற்றை ஊர்வலமாகக் கொண்டுவருவதற்காகத் தோளில்) சுமத்தல்

   ‘சாமி தூக்குவதற்கு இன்னும் ஆட்கள் வரவில்லை’
   ‘நான்கு பேர் மட்டும் இந்தப் பல்லக்கைத் தூக்க முடியாது’

  8. 1.8 (ஆயுதம்) ஏந்துதல்

   ‘ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவான்’
   ‘கோபம் வந்தால் போதும். துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சுட்டுவிடுவேன் என்று மிரட்டுவார்’

  9. 1.9 எடுத்தல்; அப்புறப்படுத்துதல்

   ‘மகன்கள் எல்லோரும் வந்த பிறகுதான் பிணத்தைத் தூக்குவார்கள் போலிருக்கிறது’
   ‘சாலை ஓரங்களில் அனுமதி இல்லாமல் வைத்திருக்கும் பெட்டிக்கடைகளை உடனடியாகத் தூக்கும்படி ஆணையர் உத்தரவு’

  10. 1.10 (ஒருவரை வேலையிலிருந்து) நீக்குதல்

   ‘மேலாளரிடம் தகராறு செய்ததற்காக அவனை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்களாம்’

 • 2

  (மரபு வழக்கு)

  1. 2.1பேச்சு வழக்கு (ஒரு வேலையைச் செய்யத் துவங்கும் விதமாக ஒன்றை) எடுத்தல்

   ‘காலையில் மண்வெட்டியைத் தூக்கினால் வேலை முடிந்த பிறகுதான் அவர் வீட்டுக்கு வருவார்’

  2. 2.2 (திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை) மாற்றுதல்

   ‘புதுப் படத்தை ஒரே வாரத்தில் தூக்கிவிட்டார்கள்’
   ‘அநேகமாக நாளை இந்தப் படத்தைத் தூக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்’

  3. 2.3பேச்சு வழக்கு திருடுதல்

   ‘காரில் வைத்திருந்த பையை யாரோ தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள்’
   ‘யாருக்கும் தெரியாமல் கிடையிலிருந்து ஒரு ஆட்டைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டான்’

  4. 2.4 ஒருவரைப் பாராட்டுவதன்மூலம் உயர்த்துதல்; பெருமைப்படுத்துதல்

   ‘அவர் தன் மாணவர்களை எப்போதும் தூக்கியேதான் பேசுவார்’
   ‘வேண்டியவர்களாக இருந்தால் வானளாவத் தூக்குவார். பிடிக்கவில்லையென்றால் மட்டம்தட்டுவார்’

  5. 2.5 (மணம்) அதிக அளவில் கவருதல்

   ‘என் நண்பர் ஆளைத் தூக்கும் நறுமணத் தைலம் பூசிக்கொண்டு வந்திருந்தார்’
   ‘அம்மா ரசம் தாளிக்கும் மணம் வீட்டையே தூக்குகிறது’

தமிழ் தூக்கு யின் அர்த்தம்

தூக்கு

பெயர்ச்சொல்

தமிழ் தூக்கு யின் அர்த்தம்

தூக்கு

பெயர்ச்சொல்

 • 1

  மேற்புறம் வளைவான பிடி உள்ள உருண்டை வடிவச் சிறு பாத்திரம்.

  ‘தூக்கும் பணமும் தாருங்கள்; எண்ணெய் வாங்கிக்கொண்டு வருகிறேன்’
  ‘பந்தியில் பரிமாறத் தூக்கு வேண்டும்’