தமிழ் தொலை யின் அர்த்தம்

தொலை

வினைச்சொல்தொலைய, தொலைந்து, தொலைக்க, தொலைத்து

 • 1

  (எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி அல்லது மீண்டும் கிடைக்காதபடி) காணாமல் போதல்.

  ‘மோதிரம் எப்படித் தொலைந்தது?’
  ‘இவ்வளவு நேரம் இங்கு நின்றிருந்தான். இப்போது எங்கே தொலைந்தான்?’

 • 2

  (தொல்லை அல்லது தீங்கு தருவதாகக் கருதப்படுவது) இல்லாமல் போதல்; ஒழிதல்.

  ‘நாட்டில் லஞ்சம் தொலைய வேண்டும்’

 • 3

  (இறந்தகால வடிவங்களில் மட்டும்) கடுமையாகப் பாதிக்கப்படுதல்; கடுமையான விளைவுக்கு உள்ளாதல்; தீர்தல்.

  ‘பணம் கையாடியது மேலதிகாரிக்குத் தெரிந்தால் அவன் தொலைந்தான்’
  ‘அப்பாவுக்கு உண்மை தெரிந்தால் தொலைந்தது’

 • 4

  பொருட்படுத்த வேண்டாம் என்னும் முறையில் பயன்படுத்தப்படுவது.

  ‘மரியாதை தெரியாமல் பேசிவிட்டான்; தொலைகிறான் விடு’
  ‘அவன் எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும், நமக்கென்ன?’

தமிழ் தொலை யின் அர்த்தம்

தொலை

துணை வினைதொலைய, தொலைந்து, தொலைக்க, தொலைத்து

 • 1

  (பிடிக்காத செயல் நிகழும்போது பேசுபவரின் நோக்கில்) எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்த உதவும் ஒரு துணை வினை.

  ‘நான் புறப்படும் நேரத்தில் வந்து தொலைந்தான்’
  ‘அவன் ஊருக்குப் போய்த் தொலைந்தால் போதும்’

தமிழ் தொலை யின் அர்த்தம்

தொலை

வினைச்சொல்தொலைய, தொலைந்து, தொலைக்க, தொலைத்து

 • 1

  (வைத்திருந்த ஒன்றை) இழந்துவிடுதல்; தவறவிடுதல்.

  ‘சாவியை எங்கோ தொலைத்துவிட்டு இங்கு வந்து தேடுகிறாயா?’
  ‘பணத்தைத் தொலைக்காமல் பத்திரமாக எடுத்துச்செல்’

 • 2

  (சொத்தை) இழத்தல்.

  ‘பரம்பரைச் சொத்தையெல்லாம் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டான்’

 • 3

  (பெரும்பாலும் ‘விடு’ என்னும் துணை வினையுடன்) கடுமையான விளைவுக்கு உள்ளாக்குதல்.

  ‘பரீட்சையில் தேர்வு பெறாத விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால் தொலைத்துவிடுவார்’
  ‘நீ ஒழுங்காக இல்லாவிட்டால் தொலைத்துவிடுவேன்’

தமிழ் தொலை யின் அர்த்தம்

தொலை

துணை வினைதொலைய, தொலைந்து, தொலைக்க, தொலைத்து

 • 1

  (கட்டாயத்தினால் ஒரு செயலைச் செய்ய நேரும்போது) வெறுப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு துணை வினை.

  ‘பணம் வாங்காமல் போக மாட்டான் என்று பத்து ரூபாய் கொடுத்துத்தொலைத்தேன்’
  ‘இந்தச் சண்டையை விட்டுத்தொலை’
  ‘ஊருக்குப் போக வேண்டுமா? போய்த்தொலை’

தமிழ் தொலை யின் அர்த்தம்

தொலை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு தொலைவு.

  ‘தோட்டம் எவ்வளவு தொலை? நடக்க முடியுமா?’