தமிழ் நீட்டு யின் அர்த்தம்

நீட்டு

வினைச்சொல்நீட்ட, நீட்டி

 • 1

  (கைகால் முதலியவற்றை) இருக்கும் நிலையிலிருந்து நீளச்செய்தல்.

  ‘கால்களை நீட்டிப் படுக்கக்கூட இந்த அறையில் இடம் இல்லை’
  ‘கைகுலுக்குவதற்காகக் கையை நீட்டினார்’
  ‘விரிப்பின் மீது அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும்’
  ‘மருத்துவர் நாக்கை நீட்டச்சொல்லிச் சோதித்தார்’
  ‘யானை துதிக்கையை நீட்டி ஓலையைப் பிடித்து இழுக்க முயன்றது’
  ‘பழுக்கக் காய்ச்சிய கம்பியை அடித்து நீட்டினார்கள்’
  ‘நாற்காலியின் சட்டத்தை நீட்டித் தாத்தா அதில் காலை வைத்துக்கொண்டார்’

 • 2

  முன்நோக்கிக் காட்டுதல்.

  ‘கத்தியை நீட்டிப் பயமுறுத்தினான்’
  ‘நீ கேட்டதும் பணத்தை எடுத்து நீட்ட வேண்டுமா?’
  ‘தபால்காரர் கடிதத்தை நீட்டினார்’

 • 3

  (ஒன்று சராசரிப் பரப்பளவிலிருந்து) வெளித்தள்ளிக் காணப்படுதல்.

  ‘அவருக்கு முன்பற்கள் மட்டும் சிறிது வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்’
  ‘நாற்காலியில் லேசாக நீட்டிக்கொண்டிருந்த ஆணி புடவையைக் கிழித்துவிட்டது’

 • 4

  (கால அளவை) தொடரச் செய்தல்; (எண்ணிக்கையை அளவில்) அதிகரித்தல்.

  ‘விவாதத்தை நீட்டிக் கொண்டே போகாதீர்கள்’
  ‘பெயர்ப் பட்டியலை இதற்கு மேல் நீட்ட வேண்டாம்’

 • 5

  (பேச்சில், பாட்டில்) வார்த்தைகளை இழுத்து உச்சரித்தல்.

  ‘அந்த ஊர்க்காரர்கள் எப்போதும் நீட்டிநீட்டித்தான் பேசுவார்கள்’
  ‘இந்தக் கட்டத்தில் வசனத்தை நீட்டிப் பேசக் கூடாது’
  ‘புதிதாகக் கற்றுக்கொண்ட ராகத்தை நீட்டிப் பாடிக்கொண்டிருந்தார்’

 • 6

  சுருக்கமாக இல்லாமல் விளக்கமாக அல்லது தேவைக்கும் அதிகமாக விவரித்தல்.

  ‘கதையை நீட்டாமல் சீக்கிரம் சொல்’
  ‘சொல்லவந்ததை நீட்டி எழுதாமல் கச்சிதமாக எழுதுவதே சிறப்பு’