தமிழ் நடவடிக்கை யின் அர்த்தம்

நடவடிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர்) நடந்துகொள்ளும் முறை; (ஒருவரின்) செயல்பாடு.

  ‘சில நாட்களாகவே அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்துவருகிறேன்’
  ‘கொலை, கொள்ளை போன்ற பல குற்ற நடவடிக்கைகளுக்குக் குடிப்பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது’
  ‘அவனுடைய பேச்சு, தோரணை, நடவடிக்கை எல்லாவற்றின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது’

 • 2

  குறிப்பிட்ட ஒரு செயல்பாடு அல்லது விளைவு நிகழுமாறோ நிகழாதவாறோ தனிநபர், அரசு, நிறுவனம் மேற்கொள்ளும் ஏற்பாடு.

  ‘வறட்சி நிவாரண நடவடிக்கைகள்’
  ‘இந்த மருந்தை உபயோகிக்கும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’
  ‘மாடுகளுக்குத் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’
  ‘இந்தப் பாலத்தைச் செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?’
  ‘செயலிழந்த தொலைபேசிகள் குறித்துப் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள்’
  ‘கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’
  ‘கல்லூரி விதிமுறைகளை மீறியதற்காகச் சில மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’

 • 3

  (அலுவலகம், வியாபாரம் முதலியவற்றில்) பணி; அலுவல்.

  ‘கலவரத்தின் காரணமாகப் பல தொழிற்சாலைகளின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பித்துவிட்டன’

 • 4

  குறிப்பிட்ட துறையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடு.

  ‘வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நாங்கள் தமிழக அரசியல் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவருகிறோம்’
  ‘கிறித்தவ மதத்தைப் பரப்ப இந்தியாவுக்கு வந்த பாதிரிமார்களின் நடவடிக்கைகளால் கல்வியும் சமுதாயமும் வளர்ச்சியுற்றன’