தமிழ் நடுவில் யின் அர்த்தம்

நடுவில்

இடைச்சொல்

 • 1

  ‘(நடந்துகொண்டிருக்கும் செயலின்) இடையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘பேச்சின் நடுவில் கையிலிருந்த குறிப்பைப் பார்த்துக்கொண்டார்’
  ‘பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நடுவில் பேசாதே’
  ‘எதிரணி வீரருக்குக் காயம் பட்டதால் ஆட்டத்தை நடுவில் நிறுத்த வேண்டியதாகிவிட்டது’
  ‘பயணத்தின் நடுவில் பல்வேறு சோதனைகள்’

 • 2

  (காலத்தைக் குறித்து வரும்போது) ‘இடையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அவன் ஐந்து வருடம் இங்குதான் இருந்தான்; நடுவில் ஆறு மாதம் மட்டும் வெளியூர் சென்றிருந்தான்’

 • 3

  ‘(ஒரு பரப்பின் அல்லது ஒரு பொருளின்) மத்தியில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கடலின் நடுவில் கப்பல்கள் நிற்பது தெரிந்தது’
  ‘மைதானத்தின் நடுவில் கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது’
  ‘கூடத்தின் நடுவில் விளக்கு ஒன்று வைக்கப்பட்டிருந்தது’
  ‘குளத்தின் நடுவில் ஒரு நீராழி மண்டபம்’
  ‘கோட்டையின் நடுவில் ஒரு கோயில் இருந்தது’
  ‘வட்டத்தின் நடுவில் ஒரு புள்ளி வை’
  ‘கயிற்றின் நடுவில் நின்றுகொண்டு சாகசம் செய்தான்’
  ‘பாலத்தின் நடுவில் விரிசல்’
  ‘குழாயின் நடுவில் ஒரு கோடு போடு’

 • 4

  ‘(ஒன்றின்) உள்ளே’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘மையத்தில்’.

  ‘முட்டையின் நடுவில் மஞ்சள் கரு’
  ‘கொழுக்கட்டையின் நடுவில் பூரணம் வைக்கப்பட்டிருந்தது’
  ‘தீ விபத்தில் நெருப்பின் நடுவில் குழந்தைகள் மாட்டிக்கொண்டன’
  ‘புகைக்கு நடுவில் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்’

 • 5

  ‘(குறிப்பிட்ட நிலைமைக்கு) இடையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில் அவரால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?’
  ‘இருக்கிற குழப்பங்களுக்கு நடுவில் இவன் தொல்லை வேறு!’
  ‘அத்தனை பிடுங்கல்களுக்கு நடுவிலும் அவரால் எப்படிச் சிரிக்க முடிகிறது?’