தமிழ் நிறுத்து யின் அர்த்தம்

நிறுத்து

வினைச்சொல்நிறுத்த, நிறுத்தி

 • 1

  (இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்து வருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல் குறித்த வழக்கு)

  1. 1.1 (செயலை) மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்

   ‘பேச்சை நிறுத்து’
   ‘குழந்தை அழுவதை நிறுத்திவிட்டுச் சிரிக்கத் தொடங்கியது’
   ‘பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திவிட்டான்’
   ‘படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று’

  2. 1.2 (ஏதேனும் ஒரு காரணத்திற்காக வாகனத்தை) நிற்கச் செய்தல்

   ‘போக்குவரத்துக் காவலர் கையைக் காட்டிப் பேருந்தை நிறுத்தினார்’

  3. 1.3 (மின்விசிறி, விளக்கு போன்றவற்றின்) இயக்கத்தை (தற்காலிகமாக) நிற்கச் செய்தல்

   ‘மின்விசிறியையும் விளக்கையும் நிறுத்திவிட்டு வெளியே கிளம்பினான்’
   ‘தையல் இயந்திரத்தை நிறுத்தி விட்டு எழுந்தார்’

 • 2

  (இயக்கமற்ற நிலையில் இருக்க விடுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (வாகனத்தை ஓர் இடத்தில்) இருக்க விடுதல்

   ‘கொட்டகையில் பத்து சைக்கிள்களை நிறுத்தலாம்’

  2. 2.2 (ராணுவத்தின் அல்லது காவல்துறையின் வீரர்களைக் குறிப்பிட்ட இடத்தில்) இருக்குமாறு நடவடிக்கை மேற்கொள்ளுதல்

   ‘எல்லைப் பகுதியில் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது’
   ‘தேர்தலின்போது எல்லா வாக்குச் சாவடிகளிலும் காவலர்கள் நிறுத்தப்படுவார்கள்’

  3. 2.3 (ஒருவரை ஒரு இடத்தில்) நிற்கச் செய்தல்

   ‘அம்மாவைக் கடை முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்’
   ‘தன்னோடு வந்தவர்களை வெளியே நிறுத்திவிட்டுப் பெரியவர் மட்டும் அதிகாரியைப் பார்க்க உள்ளே சென்றார்’

  4. 2.4 (மற்றொருவர் முன் ஒருவரை) காணும்படி வைத்தல்

   ‘கொலையாளியைக் கண்டுபிடித்து என் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்று அதிகாரி கட்டளை பிறப்பித்தார்’
   உரு வழக்கு ‘அவருடைய கவிதை இயற்கை அழகை நம் கண்முன் நிறுத்துகிறது’

  5. 2.5 (மனத்தை ஒன்றில்) நிலைக்கச் செய்தல்; குவித்தல்

   ‘கடந்த காலத்தைச் சுற்றியே வட்டமிடும் மனத்தை நிகழ்காலத்தில் நிறுத்த வேண்டியிருக்கிறது’
   ‘அவருடைய கூற்றை மனத்தில் நிறுத்திப் பார்க்கும்போது நமக்குச் சில உண்மைகள் புரியும்’
   ‘ஒரு வழியில் மனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சிசெய்தால் அது வேறு பக்கம் தறிகெட்டு ஓடுகிறது’

  6. 2.6 (தேர்தலில்) போட்டியிட வைத்தல்

   ‘எங்கள் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும்’

  7. 2.7 (படுக்கை நிலையில் இருப்பதை அல்லது சாய்வாக இருப்பதை) செங்குத்தான நிலைக்குக் கொண்டு வருதல்

   ‘கீழே விழுந்து கிடந்த கம்பத்தைக் குழியில் நிறுத்தினார்கள்’
   ‘வேரோடு சாய்ந்து கிடந்த ஆல மரத்தை இயந்திரங்களின் உதவியோடு தூக்கி நிறுத்த முயன்றனர்’