நிலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிலை1நிலை2

நிலை1

வினைச்சொல்நிலைக்க, நிலைத்து

 • 1

  (குறிப்பிட்ட ஒன்று மாறாமல் அல்லது நீங்காமல்) நீண்ட காலத்திற்கு நீடித்து இருத்தல்; (அமைதி, புகழ் முதலியவை) நிலைபெறுதல்.

  ‘இந்த ஆட்சி நிலைக்கும் என்பதில் ஐயம் இல்லை’
  ‘அநியாயமாகச் சேர்த்த பணம் நிலைக்காது’
  ‘ஒரு வேலையிலும் அவன் நிலைக்க மாட்டான்’
  ‘அவனுடைய இயற்பெயர் மறைந்து, நண்பர்கள் வைத்த பட்டப் பெயரே நிலைத்துவிட்டது’
  ‘அவர்களுடைய திருமண உறவு ஓராண்டுதான் நிலைத்தது’
  ‘அந்த வீட்டில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தது’
  ‘ஆதிமனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழவில்லை’

 • 2

  (பார்வை) ஓர் இடத்தில் பதிதல்.

  ‘பாதி திறந்திருந்த கண்கள் அருகில் நின்ற மகனின் மேல் நிலைத்தன’

 • 3

  (பெற்றோருக்குக் குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சிறு வயதிலேயே இறந்துவிடும் சூழ்நிலையில் குறிப்பிடப்படும் குழந்தை) உயிரோடிருத்தல்; தங்குதல்.

  ‘ஐந்து குழந்தையில் ஒன்றும் நிலைக்கவில்லை’
  ‘இந்தக் குழந்தையாவது நிலைத்ததே என்று சந்தோஷப்படு’

நிலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிலை1நிலை2

நிலை2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இடம், தன்மை, உணர்வு ஆகியவற்றில் ஒன்றின் அல்லது ஒருவரின்) இருப்பு.

  ‘தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது!’
  ‘உட்கார்ந்த நிலையிலேயே பதில் சொன்னான்’
  ‘உற்பத்தியில் ஒரு தேக்க நிலை காணப்படுகிறது’
  ‘குடும்பத்தின் செல்வ நிலை மேலும்மேலும் உயர்ந்தது’
  ‘மார்பு விரிந்த நிலையில் 80 சென்டி மீட்டரும் சுருங்கிய நிலையில் 75 சென்டி மீட்டரும் இருந்தது’
  ‘தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு பிணம்’
  ‘இந்த இயந்திரத்தை ஒரு நிமிடத்திற்குள் தயார் நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம்’
  ‘துணை ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’
  ‘அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்’

 • 2

  சூழ்நிலை; நிலைமை.

  ‘கலகம் ஏற்பட்டபோது வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை’
  ‘என் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?’
  ‘குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் நான் இருக்கிறேன்’
  ‘அந்தக் கட்சிக்குத் தர்மசங்கடமான நிலைதான்’
  ‘அக்கால நெசவாளர்களின் நிலையைச் சரித்திரபூர்வமாக விவரித்தேன்’

 • 3

  (பல பிரிவுகளாக உள்ளவற்றுள் ஒரு) கட்டம்; பிரிவு.

  ‘அதிகாரியின் வேலைநீக்கம் முதல் நிலை நடவடிக்கைதான்’
  ‘செல் பிரிதல் இரு நிலைகளில் நடைபெறும்’
  ‘இது இந்தப் பயிற்சியின் மூன்றாம் நிலையாகும்’
  ‘பொம்மலாட்டத்தைப் பற்றிய புத்தகம் எந்த நிலையில் இருக்கிறது?’

 • 4

  சமநிலை.

  ‘அவன் ஒரு நிலையில் இல்லை’
  ‘நிலை தடுமாறிக் கீழே விழுந்தான்’

 • 5

  (ஒன்று) மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது; நிரந்தரம்.

  ‘கல்வி நிலையான செல்வந்தான்’
  ‘இவர் ஒரு இடத்திலும் நிலையாகத் தங்குவதில்லை’
  ‘தேர்தலுக்குப் பின் ஒரு நிலையான ஆட்சி ஏற்பட்டு விட்டது’
  ‘கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது’
  ‘எனக்கென்று நிலையான வேலை ஒன்றும் கிடையாது’
  ‘இவ்வுலகில் நிலையாக இருக்கக்கூடியது எதுவுமில்லை’

 • 6

  (தேர்) நிறுத்தப்பட்டிருக்கும் இடம்.

  ‘தேர் நிலைக்கு வந்துவிட்டது’

 • 7

  படைகள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் இடம்.

  ‘எல்லைப் பகுதியில் சில முக்கிய நிலைகளைக் கைப்பற்ற அண்டை நாடு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது’
  ‘முன் அனுமதி இல்லாமல் ராணுவ நிலைகளைப் படம் பிடிக்க முடியாது’

 • 8

  இயற்பியல்
  (குறிப்பிட்ட விளைவு, விசை, ஆற்றல் போன்றவற்றுக்கு உட்படாததால்) இயக்கம் அல்லது மாறுதல் ஏற்படாத தன்மை.

  ‘ஒரு பொருளின் மீது சமமாக இரண்டு விசைகளும் எதிரெதிராகச் செயல்பட்டால் அப்பொருள் நிலையாக இருக்கும்’
  ‘கார்பன் சுழற்சியின் மூலம் இயற்கையில் கார்பனின் அளவு நிலையாக உள்ளது’

 • 9

  (உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றில்) கைகால்களை அல்லது உடலை ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்திருப்பது.

  ‘இந்த உடற்பயிற்சியின்போது இரண்டு கைகளையும் உயரே தூக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும்’
  ‘இந்தக் காட்சியில் ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் நிற்க வேண்டும்’
  ‘காலசைவும் கையசைவும் கலந்த நிலைதான் கரணம்’

 • 10

  (விளையாட்டுகளில்) தரப்பட்டியலில் ஒருவரின் இடம்.

  ‘மூன்றாம் நிலை வீரர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகினார்’
  ‘சதுரங்கத்தில் காஸ்பரோவ் உலகின் முதல் நிலை வீரராகப் பல ஆண்டுகள் இருந்தார்’

 • 11