தமிழ் நேரம் யின் அர்த்தம்

நேரம்

பெயர்ச்சொல்

 • 1

  சமயம்.

  ‘எதிர்பாராத நேரத்தில் திடுமென்று வந்து நிற்கிறாயே’
  ‘நான் வீட்டுக்கு வந்த நேரத்தில் நீ எங்கே போயிருந்தாய்?’
  ‘எனக்குச் செய்தித்தாள் படிக்க நேரமே கிடைக்கவில்லை’
  ‘குறித்த நேரத்தில் கூட்டம் நடைபெற்றது’
  ‘நெருக்கடியான நேரத்திலும் ஓட்டங்களைக் குவிக்கக்கூடிய இந்திய வீரர்’

 • 2

  (நொடி, நிமிடம், மணி அல்லது காலை, மதியம், மாலை முதலியவற்றை வைத்துக் குறிப்பிடும்) கால அளவு.

  ‘நான் இங்கு வந்து இரண்டு மணி நேரம் ஆயிற்று’
  ‘ஒருவர் குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்’
  ‘காலை நேரக் காற்று’
  ‘மாலை நேரத்தில் நான் எப்போதும் கடற்கரைக்குப் போய்க் காலாற நடந்துவிட்டு வருவேன்’
  ‘சிறிது நேரம் கழித்து வந்தால் அப்பாவைப் பார்க்கலாம்’

 • 3

  குறிப்பிட்ட வேலைக்கு அல்லது செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காலம்.

  ‘வேலை நேரத்தில் என்ன பேச்சு?’
  ‘ஆட்ட நேர முடிவில் இந்தியா 245 ஓட்டங்கள் எடுத்திருந்தது’
  ‘ஓய்வு நேரத்தில் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்’
  ‘உணவு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் குரல்வளை திறந்தே இருக்கும்’
  ‘கூட்டம் குறித்த நேரத்தில் நடைபெற்றது’
  ‘கடை சாத்தும் நேரம் ஆகிவிட்டது’

 • 4

  ஒருவருக்கு நன்மையாகவோ தீமையாகவோ அமைவதாகக் கருதப்படும் காலம்.

  ‘என் நேரம் இப்படிக் குடும்பத்தை ஆட்டிப்படைக்கிறது’

 • 5

  (ஒன்றைச் செய்வதற்கு) உரிய அல்லது பொருத்தமான காலம்.

  ‘நேரத்தோடு படுத்து நேரத்தோடு எழுந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது’
  ‘நீங்கள் நேரத்தோடு வந்திருந்தால் அவரைப் பார்த்திருக்கலாம்’
  ‘நேரத்தில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?’
  ‘நேரத்துக்குச் சாப்பிடாவிட்டால் குடல்புண் வரும்’