தமிழ் பக்கம் யின் அர்த்தம்

பக்கம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  ஒரு பொருளுக்குப் பரிமாணத்தைத் தருகிற தட்டையான பகுதி அல்லது பரப்பு.

  ‘சதுரத்துக்கு நான்கு பக்கங்களும் சமம்’
  ‘வீட்டின் வெளிப்பக்கத்திற்குச் சுண்ணாம்பு அடிக்க வேண்டும்’

 • 2

  சுட்டப்படும் திசையில் அமைந்திருக்கும் பகுதி; புறம்.

  ‘வீட்டின் பின்பக்கம் மழையில் இடிந்துவிட்டது’
  ‘வாகனங்கள் சாலையில் இடது பக்கமாகச் செல்ல வேண்டும்’
  ‘ஊரின் கிழக்குப் பக்கத்தில் ஆறு ஓடுகிறது’
  ‘சுவரின் மேல்பக்கத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது’
  ‘அலமாரியின் கீழ்ப் பக்கத்தில் புத்தகங்களை வை’

 • 3

  குறிப்பிட்ட இடத்தை ஒட்டி அமைந்திருக்கும் பகுதி.

  ‘மலைப் பக்கம் அமைந்திருக்கும் வீடு’
  ‘ஆற்றுப் பக்கம் காலாற நடந்துவிட்டு வருவோமா?’

 • 4

  அருகாமை; அண்மை.

  ‘அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான்’
  ‘உன் அலுவலகம் இங்கிருந்து பக்கமா, தூரமா?’
  ‘பக்கத்தில்தான் கடை இருக்கிறது, போய்விட்டு வருகிறேன்’
  ‘பேருந்து நிலையத்திற்குப் பக்கமாக ஏதாவது வீடு வாடகைக்கு இருந்தால் சொல்’

 • 5

  தரப்பு; சார்பு.

  ‘நான் யார் பக்கமும் பேசத் தயாராக இல்லை’
  ‘வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளைத் தம் பக்கம் இழுக்க முயல்கின்றன’

 • 6

  இரு மாறுபட்ட நிலைகளுள் ஒரு நிலை.

  ‘பையனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததில் ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மறுபக்கம் அவனைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற எண்ணமும் ஏற்படுகிறது’

 • 7

  புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றில் ஒரு தாளின் ஒரு புறம்.

  ‘செய்தித்தாளில் இரண்டு பக்கங்களை மட்டும் காணவில்லையே’
  ‘அந்தக் கவிதை முப்பதாவது பக்கத்தில் உள்ளது’
  ‘கடைக்குப் போனால் எண்பது பக்க நோட்டு ஒன்று வாங்கிக்கொண்டு வா’

 • 8

  (குறிப்பிட்ட மொழி, இனம், சாதி சார்ந்த மக்களைக் கொண்ட) பிரதேசம்.

  ‘ஆடி மாத வெள்ளியன்று அம்மனுக்குக் கூழ் காய்ச்சுவது எங்கள் பக்கத்துப் பழக்கம்’