பார் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பார்1பார்2பார்3பார்4பார்5

பார்1

வினைச்சொல்பார்க்க, பார்த்து

 • 1

  (கண்களால் அறிதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (உருவம் உடையவற்றை) கண்கள்மூலம் அறிதல் அல்லது உணர்தல்; காணுதல்

   ‘போதிய வெளிச்சம் இருந்தால்தான் எதையும் பார்க்க முடியும்’
   ‘வானத்தைப் பார், மேகம் பஞ்சுப் பொதிபோல் தெரிகிறது’
   ‘அவரை நான் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை’
   ‘மருத்துவர் நோயாளியின் கண்களை உற்றுப் பார்த்தார்’
   ‘கொலையை நேரடியாகப் பார்த்ததற்குச் சாட்சி இல்லை’
   ‘இவளைப் போன்ற அழகியை நீ எங்காவது பார்த்திருக்கிறாயா?’
   ‘தோட்டத்தில் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூத்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்’
   ‘எழுதியதை அச்சு வடிவில் பார்ப்பதற்கு ஆவல் கொண்டு ஒரு பதிப்பகத்தை நாடினார்’
   ‘இந்தக் குழாயில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கசிந்து நான் பார்த்ததில்லை’
   ‘முதுமலைக்குப் போனால் காட்டெருமைகளைப் பார்க்கலாம்’
   ‘ஆந்தை இரவில் பார்க்கும் தன்மை கொண்டது’

  2. 1.2 (திரைப்படம், திருவிழா போன்றவை நடக்கும் இடத்துக்குச் சென்று) காணுதல்

   ‘திரையரங்கம் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால் அடிக்கடி படம் பார்க்க முடிகிறது’
   ‘அவர் குடும்பத்தோடு பொருட்காட்சி பார்க்கப் போயிருக்கிறார்’
   ‘பெற்றோர்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு திருவிழா பார்க்கப் போயிருக்கிறார்கள்’
   ‘கதகளியைப் பார்க்க வேண்டுமென்றால் கேரளாவுக்குத்தான் போக வேண்டும்’

  3. 1.3 (சுற்றுலா செல்வதன் மூலம் ஓர் இடத்தை) சுற்றிப்பார்த்தல்; சுற்றிப் பார்க்கச் செல்லுதல்

   ‘இருவருமாக அஜந்தா, எல்லோரா முதலிய இடங்களைப் பார்க்கச் சென்றனர்’
   ‘இதோ இருக்கும் மகாபலிபுரத்தைப் பார்க்காமல் இருக்கிறோமே என்ற எண்ணம் பல ஆண்டுகளாக என்னை உறுத்திக்கொண்டிருந்தது’

  4. 1.4 (ஓர் இடத்தை) பார்வையிடுதல்

   ‘பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்த்தார்’
   ‘கொலை நடந்த இடத்தைக் காவல்துறையினர் வந்து பார்த்தார்கள்’
   ‘பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பிரதமர் பார்க்கச் செல்லுகிறார்’

  5. 1.5 (படிப்பது, கேட்பது, சிந்திப்பதுமூலம் ஒன்றை) உணருதல் அல்லது அறிந்துகொள்ளுதல்

   ‘இவரது வண்ண ஓவியங்களில் வங்காள ஓவியப் பாணியின் பாதிப்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது’
   ‘இந்தப் பாடலின் இசையமைப்பு திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்’
   ‘வேலையில் அவனது கவனமின்மையைப் பார்த்தவுடன் அவனுக்கு ஏதோ பிரச்சினை என்பதை மேலதிகாரி புரிந்துகொண்டார்’

  6. 1.6 (ஒன்று அல்லது ஒருவர் குறிப்பிட்ட விதத்தில் இருப்பதை) கவனித்தல்

   ‘காவலர் இல்லையென்றால் பலர் சட்டத்தை மீறுவதைப் பார்க்கிறோம்’
   ‘யாரோ பாடுவதுபோல் இருக்கிறது என்று பார்த்தால் அது என் மனைவிதான்’
   ‘நானும் வெகு நேரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பக்கத்து வீட்டில் சத்தம் ஓயவே இல்லை’

 • 2

  (பார்ப்பதுமூலம் ஒரு செயலைச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஆலோசனை, கருத்து போன்றவற்றைக் கேட்கும் நோக்கத்தோடு ஒருவரை) சந்தித்தல்

   ‘என் பழைய ஆசிரியர் ஒருவரைப் புத்தகக் கடையில் பார்த்துப் பேசினேன்’
   ‘வழியில் பார்த்தால்கூட அவன் நம்மோடு பேசுவதில்லை!’
   ‘நேற்று யாரோ ஒருவர் அப்பாவைப் பார்க்க வந்திருந்தார்’
   ‘அமைச்சரைப் பார்ப்பதற்காக நிருபர்கள் காத்திருந்தார்கள்’
   ‘இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடக் கூடாது. முதலில் நல்ல வழக்கறிஞரைப் பார்’
   ‘சாதாரண இருமல் என்று விட்டுவிடாமல் போய் மருத்துவரைப் பார்த்துவிட்டு வா’

  2. 2.2 சோதித்து அறிதல்

   ‘இந்தக் குழந்தை ஏன் இப்படி நோஞ்சானாக இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்’
   ‘இந்தக் கைக்கடிகாரம் ஏன் ஓடவில்லை என்று பார்’
   ‘மூக்கில் கைவைத்துப் பார்த்தேன். நல்ல வேளை உயிர் இருந்தது’
   ‘தம்பி! இந்தக் கணக்கு சரியாக இருக்கிறதா என்று பார்’
   ‘ரசத்துக்கு உப்பு போதுமா என்று பார்த்துச் சொல்!’
   ‘காய்ச்சல் இருக்கிறதா என்று குழந்தையைத் தொட்டுப் பார்’
   ‘இரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்ததில் சர்க்கரை இருப்பது தெரியவந்தது’
   ‘என் மகனுடைய ஜாதகத்தைப் பார்த்தபோது அவனுக்குச் செவ்வாய்தோஷம் இருப்பது தெரியவந்தது’
   ‘ஜோசியரே, கையைப் பார்த்து எனக்குக் கல்யாணம் எப்போது என்று சொல்லுங்கள்’
   ‘ஒரு ஆளைப் பார்த்து அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிடுவார்’

  3. 2.3 (வீடு, வேலை போன்றவற்றை) தேடுதல்/ (திருமணத்துக்காக மாப்பிள்ளை அல்லது பெண்ணை) தேர்ந்தெடுத்தல்

   ‘நீங்கள் பார்த்திருக்கும் வீடு எந்தத் தெருவில் இருக்கிறது?’
   ‘என் தம்பிக்கு ஒரு நல்ல வேலை பார்த்துக் கொடு’
   ‘என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்’

  4. 2.4 (சரியான நேரம், பொருத்தம் முதலியவற்றை) அறிதல்

   ‘ஒரு நல்ல நாள் பார்த்துப் பையனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடு’
   ‘இரண்டு பேருடைய ஜாதகத்தையும் வைத்துப் பொருத்தம் பார்க்க வேண்டும்’
   ‘வீட்டுக்குக் குடிபோக நல்ல நாள் பார்க்கச் சொல்’

 • 3

  (ஒரு செயலை மேற்கொள்ளுதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (ஒரு செயல், தொழில் முதலியவற்றை) மேற்கொள்ளுதல்

   ‘பத்து ஆண்டுகளாக நான் பார்க்காத வேலையில்லை’
   ‘என் தம்பி தச்சு வேலை பார்க்கிறான்’
   ‘ஊருக்குப் போய்வந்ததும் இந்த விஷயத்தை நான் பார்க்கிறேன்’
   ‘விருந்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறோம்’
   ‘சாப்பாட்டை வழியில் பார்த்துக்கொள்ளலாம்’
   ‘தம்பிதான் வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்கிறான்’
   ‘தொண்டையை நனைக்க ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறேன்’

  2. 3.2 (ஒன்றை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில்) முயற்சித்தல்

   ‘போர் என்று தொடங்கிவிட்ட பிறகு, இறுதிவரை பார்த்துவிட வேண்டியதுதானே?’
   ‘என்னால் முடிந்தவரையில் பார்க்கிறேன்’
   ‘இரண்டில் ஒன்று பார்க்காமல் விட மாட்டேன்’

 • 4

  (உணர்ச்சியை வெளிப்படுத்துதல் தொடர்பான வழக்கு)

  1. 4.1 சவால் விடும் வகையில் அல்லது ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தும் சொல்

   ‘இதை யார் செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம்’
   ‘இந்த விடுகதைக்கு விடையைச் சொல் பார்ப்போம்!’
   ‘நீயா நானா என்று பார்ப்போம்’
   ‘நம்மிருவரில் யார் சொன்னது நடக்கப்போகிறது என்று பார்ப்போமா?’

  2. 4.2பேச்சு வழக்கு பேசுபவர் தான் அடைந்த வியப்பை மற்றவரிடம் புலப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தும் சொல்

   ‘‘பதில் சொன்னான் பார், நான் அப்படியே அசந்துவிட்டேன்’ என்றார்’
   ‘நேற்று இரவு மழை பெய்ததே பார்க்கலாம், அப்படியொரு மழை!’
   ‘என்னிடம் இதை மறைத்ததற்குத் தண்டனையைப் பார்த்தீர்களா?’
   ‘நாலு வருடங்களை எப்படி வீணாக்கிவிட்டோம் பார்!’
   ‘அதைச் சொல்ல மறந்துவிட்டேன் பார்த்தாயா!’

  3. 4.3 (ஏவல் வடிவத்தில் மட்டும்) ஒரு செயலின் மோசமான விளைவுக்காகத் தன்னையோ பிறரையோ குறைகூறுவது போன்ற பாவனையில் பயன்படுத்தப்படும் சொல்

   ‘உதவிக்கு உன்னிடம் வந்தேன் பார், என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும்’
   ‘இதை உன்னிடம் சொன்னேன் பார், எனக்கு நன்றாக வேண்டும்’
   ‘இவ்வளவு பெரிய பொறுப்பை அவனிடம் போய்க் கொடுத்திருக்கிறார் பார், அவரைச் சொல்ல வேண்டும்’

  4. 4.4 (‘பார்த்தாலும்’ என்ற வடிவத்தில் வரும்போது) விடுபாடே இல்லை என்பதை உணர்த்தப் பயன்படும் சொல்

   ‘எப்போது பார்த்தாலும் இந்தக் கடைக்காரர் சில்லறை தருவது கிடையாது’
   ‘எங்கே பார்த்தாலும் சினிமா பேச்சுதானா?’
   ‘யாரைப் பார்த்தாலும் நவநாகரிக உடைகள்தான்’

 • 5

  (பிற வழக்கு)

  1. 5.1 (புத்தகம், குறிப்பேடு முதலியவற்றிலிருந்து) தகவல் அறிதல்

   ‘சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை என்றால் அகராதியைப் பார்க்கிறோம்’
   ‘இதுவரை நான் வாங்கிய கடன் எவ்வளவு என்று குறிப்பேட்டைப் பார்த்துச் சொல்’
   ‘இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது நமக்கு ஓர் உண்மை எளிதில் புலனாகும்’

  2. 5.2 (ஒன்றை அல்லது ஒருவரை ஒரு இடத்தில்) தேடுதல்

   ‘பணம் இருக்கிறதா என்று சட்டைப் பையில் பார்த்தார்’
   ‘தென்னந்தோப்பு, ஆற்றங்கரை என்று எல்லா இடத்திலும் பார்த்தாயிற்று; சித்தப்பாவைக் காணோம்’
   ‘பாட்டி சுருக்குப்பையைத் திறந்து பார்த்தாள்’

  3. 5.3 (ஒன்றைச் செய்ய அல்லது ஒரு முடிவெடுக்க) யோசித்தல்

   ‘இந்தச் சிறுவனிடம் எப்படி இவ்வளவு பணத்தைக் கொடுத்து அனுப்புவது என்று பார்க்கிறேன்’
   ‘உன் தம்பியாயிற்றே என்று பார்க்கிறேன். இல்லையென்றால் அடி விழும்’
   ‘படத்துக்குப் போகலாம். ஆனால் மணியாயிற்றே என்று பார்க்கிறேன்’
   ‘கட்சியின் நடவடிக்கைகள் எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று ஒருநாள் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்’

  4. 5.4 (ஒன்று இவ்வாறு நடந்தது என்றோ அல்லது நடக்க வேண்டும் என்றோ) நினைத்தல்; எதிர்பார்த்தல்

   ‘இந்த நேரத்தில் அவன் வர வேண்டுமென்று பார்க்கிறாயா?’
   ‘எல்லாத் தயாரிப்பாளர்களும் தங்கள் பணப்பெட்டி நிறைகிறதா என்றுதான் பார்க்கிறார்கள்’

  5. 5.5 பொருட்படுத்துதல்; முக்கியத்துவம் அளித்தல்

   ‘கண் விழிப்பது கஷ்டம் என்று பார்த்தால் தேர்வுக்கு எப்படிப் படிப்பது?’
   ‘இரவுபகல் என்று பார்க்காமல் உழைத்ததால்தான் என்னால் முன்னேற முடிந்தது’
   ‘இந்தப் பிரச்சினையில் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும்’
   ‘காதல் எந்த பேதத்தையும் பார்ப்பதில்லை என்ற செய்தியோடு படம் முடிகிறது’
   ‘கூலியில் ஆண், பெண் பேதம் பார்ப்பது இப்போதும் தொடர்கிறது’
   ‘இலக்கணம் பார்த்தால் சினிமாப் பாடல்கள் இல்லை’
   ‘எதைச் செய்தாலும் குற்றம் பார்ப்பவர்கள் இருந்தால் எப்படி?’

  6. 5.6 (ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) குறிப்பிட்ட விதத்திலான கண்ணோட்டத்தைக் கொள்ளுதல்; கருதுதல்

   ‘இந்தப் பிரச்சினையை மனோதத்துவரீதியாகப் பார்த்தால் சுலபமாகப் புரியும்’
   ‘சினிமாவை ஒரு கலையாக, வாழ்க்கையின் தேடலாக நான் பார்க்கிறேன்’
   ‘அறிவியலின் வளர்ச்சியை அவர் வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பார்க்கிறார்’
   ‘நீ சொல்வதைப் பார்த்தால் அங்கு நடந்தவையெல்லாம் சதி என்றே எனக்குத் தோன்றுகிறது’
   ‘அவருடைய சிறுகதைகளின் தொடர்ச்சியாகவே நாவல்களையும் பார்க்க வேண்டும்’
   ‘மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அவன் சொல்வது சரிதான்’
   ‘நியாயப்படி பார்த்தால் என்னைத்தான் கட்சியினர் முதல்வராக ஆக்கியிருக்க வேண்டும்’
   ‘இறுதிவரை அந்தப் பெண் என்னை ஒரு இடையூறாகத்தான் பார்த்தாள்’

  7. 5.7 (கற்றல், கற்பித்தல், விவாதம் முதலியவற்றுக்காக ஒரு தகவல், கருத்து, செய்தி போன்றவற்றை) எடுத்துக்கொள்ளுதல்

   ‘இதைப் பற்றி பாரதியார் கூறுவதைப் பார்க்கலாம்’
   ‘அந்த மறவனின் புரட்சி வரலாற்றை இனி பார்ப்போம்’
   ‘இந்தத் தாவரங்களைப் பற்றிய தகவல்களைத் தனித்தனியாகப் பார்ப்போம்’

  8. 5.8 (குறிப்பிட்ட நிலைமையை, சூழலை) சந்தித்தல்; எதிர்கொள்ளுதல்

   ‘உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களைப் பார்த்திருக்கிறது’
   ‘தமிழ்க் கவிதை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களையும் பார்த்துவிட்டது’

  9. 5.9 (பலனை) எதிர்பார்த்தல் அல்லது பெறுதல்

   ‘பிரதிபலன் பார்க்காத மனிதாபிமானப் பணி’
   ‘தன்னலம் பார்க்காமல் உழைத்தவர் அவர்’
   ‘பாடுபடுவதற்கு ஏற்ற பலனைப் பார்க்க வேண்டும்’
   ‘எந்தத் தொழிலில் இறங்கினாலும் லாபம் பார்க்கக் கூடியவர் அவர்’
   ‘அரிசி வியாபாரத்தில் நிறைய வருமானத்தைப் பார்த்தவர் அவர்’
   ‘பருவத்தில் விதைத்தால் நல்ல விளைச்சலைப் பார்க்கலாம்’

  10. 5.10சோதிடம்
   (ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட விதத்தில்) அமைந்திருத்தல்

   ‘சனி மூன்றாம் இடத்தில் உச்சம்பெற்று குருவினால் பார்க்கப்பெற்றாலே ராஜயோகம் ஏற்படும்’

பார் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பார்1பார்2பார்3பார்4பார்5

பார்2

துணை வினைபார்க்க, பார்த்து

 • 1

  (தான் ஒரு தொழிலை) மேற்கொள்ளுதல், கவனித்தல் முதலிய பொருளில் வழங்கும் வினையாக்கும் வினை.

  ‘கிராமத்தில் என் தந்தை விவசாயம்பார்க்கிறார்’
  ‘பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கப் பாட்டி வந்திருக்கிறாள்’

 • 2

  (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) முயற்சித்தல்/(அஃறிணை எழுவாயில்) (குறிப்பிட்டது நடக்க) சாத்தியமிருத்தல்.

  ‘இந்த வேலையை இன்றைக்குள் முடிக்கப்பார்க்கிறேன்’
  ‘வண்டியில் அடிபட்டுச் சாகப்பார்த்தது அந்த நாய்’
  ‘அரிய வாய்ப்பு நழுவப்பார்த்தது’

 • 3

  முதன்மை வினை குறிப்பிடும் செயலை மேற்கொள்வதன்மூலம் அதன் விளைவை அறிவது, அதன் தன்மையைச் சோதித்து அறிய முயல்வது, அதன் செயலில் ஈடுபடுத்திக்கொள்வது முதலியவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் துணை வினை.

  ‘மாமாவிடம் கடன் கேட்டுப்பார்க்கலாம்’
  ‘நான் இந்த வண்டியை ஓட்டிப்பார்க்கட்டுமா?’
  ‘இந்த விஷயத்தை நீங்களே நன்றாக யோசித்துப்பாருங்கள்’

 • 4

  முதன்மை வினை குறிப்பிடும் செயலைச் செய்வதால் ஏற்படும் விளைவு மிக மோசமாக இருக்கும் என்பதை உணர்த்தப் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘உன்னால் முடிந்தால் அவன் மேல் கைவைத்துப்பார்’
  ‘உனக்கு தைரியம் இருந்தால் அதைத் தொட்டுப்பார்’

பார் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பார்1பார்2பார்3பார்4பார்5

பார்3

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு உலகம்.

  ‘பார் போற்றும் கவிஞர்’

பார் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பார்1பார்2பார்3பார்4பார்5

பார்4

பெயர்ச்சொல்

 • 1

  (மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவற்றில்) பாரம் ஏற்றும் பகுதியின் சட்டத்தில் இரு புறத்திலும் உள்ள தட்டையான கனத்த மரத் துண்டு.

பார் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பார்1பார்2பார்3பார்4பார்5

பார்5

பெயர்ச்சொல்

 • 1

  ஆறு, கிணறு போன்றவற்றின் பக்கங்களாக இருக்கும் செங்குத்தான நிலப்பகுதி.

  ‘பார் இடிந்து கிணறு தூர்ந்துவிட்டது’
  ‘வலதுபுற பார் இடிந்து ஆறு அகலமாகிவிட்டது’