பிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிடி1பிடி2பிடி3பிடி4பிடி5

பிடி1

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

 • 1

  (கைகளைப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள்) அழுந்தி இருக்கும்படி செய்தல்

   ‘பந்தைப் பிடிக்கும்போது கீழே விழுந்துவிட்டார்’
   ‘குழந்தை திரைச்சீலையைப் பிடித்து இழுத்தது’
   ‘கதவின் கைப்பிடியைப் பிடித்துத் திருப்பினால் அது அசையவே இல்லை’
   ‘அவளுடைய காலைப் பிடித்து அதில் குத்தியிருந்த முள்ளை எடுத்தான்’
   ‘அவள் என்னுடைய கையைப் பிடித்து ‘நான் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்’ என்றாள்’
   ‘மார்பைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் சுருண்டு விழுந்தான்’
   ‘பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்’

  2. 1.2 (கையால் ஒரு பொருளைக் குறிப்பிடும் நிலையில்) இருக்கச் செய்தல்

   ‘குடையைச் சற்று உயர்த்திப் பிடி’
   ‘அடியில் இருந்த பொருளை எடுப்பதற்காகப் பெட்டியைச் சாய்த்துப் பிடித்தார்’
   ‘அந்த வேதிப்பொருளை எரியவைத்து வெளிப்பட்ட வாயுவை ஒரு ஜாடியினுள் பிடித்தான்’
   ‘சுவாமி ஊர்வலத்தின் முன்பு தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள்’
   ‘நீ வில்லைப் பிடித்திருக்கும் முறை சரியில்லை’
   ‘ஜப மாலையைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தார்’
   ‘குழந்தை தடுமாறி விழப்போன நேரத்தில் ஓடிச்சென்று பிடித்தேன்’

  3. 1.3 (கையால் உடலின் ஒரு பகுதியை) இதமாக அமுக்குதல்

   ‘‘உனக்குக் கால் பிடிக்க ஒரு ஆள், கை பிடிக்க ஒரு ஆளா?’ என்று தம்பி என்னைக் கிண்டல்செய்தான்’
   ‘பாட்டிக்குக் கால் பிடித்துவிட்டால் நிறைய கதைகள் சொல்வாள்’
   ‘எனக்குக் கொஞ்சம் முதுகைப் பிடித்துவிடுவாயா?’

  4. 1.4 (உணவுப் பொருள்கள் அல்லது மண் போன்றவற்றைக் குறிப்பிட்ட வடிவத்தில் இருக்குமாறு கையால்) உருவாக்குதல்

   ‘எனக்குக் கொழுக்கட்டை பிடிக்க வரவில்லை’
   ‘கூழ்வடாம் போடுவதற்காக உருண்டைகள் பிடித்து வெயிலில் காயவைத்தாள்’
   ‘என் அக்கா களிமண்ணில் அழகாகப் பிள்ளையார் பிடிப்பாள்’

  5. 1.5 (பீடி, சுருட்டு முதலியவற்றை) புகைத்தல்

   ‘பெரியவர் எப்போதாவது சுருட்டு பிடிப்பார்’
   ‘பொது இடங்களில் சிகரெட் பிடிக்க அரசு தடை விதித்திருக்கிறது’

  6. 1.6 (நடனம், கூத்து போன்றவற்றில் முத்திரை, அபிநயம்) காட்டுதல்

   ‘நாட்டிய நாடகத்தில் பங்கேற்றவர்கள் பல அரிய அடவுகள் பிடித்து ஆடினார்கள்’
   ‘அபய முத்திரையை அருமையாகப் பிடித்துக் காண்பித்தாள்’
   ‘புரிசை கண்ணப்பத் தம்பிரான் அடவு பிடித்தால் பார்க்க அற்புதமாக இருக்கும்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரைக் கட்டுப்பாட்டுக்குள் அல்லது உரிமைக்குள் கொண்டுவருதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (குற்றவாளி போன்றோரை அல்லது விலங்குகளை) சிக்கவைத்தல்/ (ஒன்றை அல்லது ஒருவரை) தனது வசத்துக்குள் கொண்டுவருதல்

   ‘திருடனைத் துரத்திப் பிடித்தார்கள்’
   ‘பதுக்கல்காரர்களைக் கையும்களவுமாகப் பிடிப்பதற்காகக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்’
   ‘தீவிரவாதிகள் இரண்டு பத்திரிகையாளர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளனர்’
   ‘கன்றுக்குட்டியைப் பிடித்துக் கட்டு’
   ‘பூச்சியைப் பல்லி பிடித்து விழுங்கியது’
   ‘வலை வீசி மீன் பிடித்தார்கள்’
   ‘தாத்தா காட்டிலிருந்து முயல் பிடித்துக் கொண்டுவந்தார்’
   ‘சுடுகாட்டுப் பக்கமாகப் போனால் காற்றுகறுப்பு ஏதாவது பிடித்துக்கொள்ளுமோ என்று அவனுக்குப் பயம்’

  2. 2.2 (ஆடு, மாடு போன்றவற்றை) வாங்குதல்; (சில பொருள்களை) கொள்முதல் செய்தல்

   ‘அப்பா சந்தைக்கு மாடு பிடிக்கப் போயிருக்கிறார்’
   ‘கூடை முடைந்து கிடைத்த பணத்தில் கிழவி பேத்திக்கு ஒரு ஆட்டுக் குட்டி பிடித்தாள்’
   ‘இது நெல் பிடித்துச் சேர்த்த சொத்து’

  3. 2.3 (வீடு, வாகனம் போன்றவற்றை வாடகைக்கு) அமர்த்துதல்

   ‘பல மாதங்கள் அலைந்து ஒரு வீடு பிடித்திருக்கிறேன்’
   ‘வாடகைக்கு ஒரு வண்டி பிடித்து வா’
   ‘கட்சி மாநாட்டிற்கு வந்தவர்கள் விடுதியில் உள்ள எல்லா அறைகளையும் பிடித்துக்கொண்டார்கள்’

  4. 2.4 (பயணம் செய்வதற்காக வாகனத்தில்) ஏறுதல்

   ‘ஆறு மணி ரயிலைப் பிடித்து ஊருக்கு வந்துவிடு’
   ‘சிறிது தொலைவு நடந்து சென்றால் நகருக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்கலாம்’

  5. 2.5 (நாடு, ஆட்சி போன்றவற்றை) கைப்பற்றுதல்/(பதவி, இடம் போன்றவற்றை) அடைதல்

   ‘இந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’
   ‘நிறுவனத்தின் இயக்குநர் பதவியைப் பிடிக்கப் பலத்த போட்டி நடக்கிறது’
   ‘இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது’
   ‘இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்த மேலை நாட்டினர் வாணிகத்தைவிட நாடு பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்’

 • 3

  (ஓர் இடத்தில் அல்லது ஒன்றில் பரவுதல் அல்லது நிலைத்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (பொருத்தமான அளவில் இல்லாததால் ஆடை உடலின் ஒரு பகுதியை) இறுக்கி அழுத்துதல்

   ‘ஒரு தடவை துவைத்த பிறகு கால்சட்டை இடுப்பைப் பிடிக்கிறது’

  2. 3.2 (பாத்திரம், பை முதலியவை ஒரு பொருளை) கொள்ளுதல்

   ‘இந்தச் சாக்கு இருபத்தெட்டு மரக்கால் நெல் பிடிக்கும்’
   ‘இரண்டு லிட்டர் பால் பிடிக்கும் படியாக ஒரு பாத்திரம் வாங்கு’

  3. 3.3 (தீ) பற்றுதல்

   ‘பாஸ்பரஸ் எளிதாகத் தீப் பிடித்துக்கொள்ளும் இயல்புடையது’
   ‘காடுகள் தீப் பிடித்து எரிவதால் காற்று மண்டலம் அதிக அளவில் மாசடைகிறது’
   ‘குடிசைகளில் நெருப்புப் பிடித்துவிட்டதா?’

  4. 3.4 (மழை) வலுவாகப் பெய்யத் தொடங்குதல்

   ‘நாங்கள் கிளம்புவதற்குள் மழை பிடித்துக்கொண்டது’

  5. 3.5 (நிலத்தில் வேர்) நிலைத்தல்

   ‘வேர் பிடித்திருந்தால் மரக்கன்று சாய்ந்திருக்காது’

  6. 3.6 (ஒன்றில் வண்ணம், சாயம்) ஏறுதல்

   ‘துணிக்குப் போட்ட நீலம் சரியாகப் பிடிக்கவில்லை’
   ‘வெற்றிலை போட்டதால் உதட்டில் சிவப்பு பிடித்திருந்தது’
   ‘‘முதலில் அந்தக் காவி பிடித்த வேட்டியை அவிழ்த்து எறி’ என்று அம்மா சத்தம் போட்டாள்’
   ‘‘மருதாணி கையில் நன்றாகப் பிடித்திருக்கிறதா?’ என்று தங்கை ஆர்வத்தோடு கேட்டாள்’

  7. 3.7 (குறிப்பிட்ட நோய் ஒருவரை) தாக்குதல்; (ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஒருவருக்கு) உண்டாதல்; ஏற்படுதல்

   ‘சில குடும்பங்களில் சந்ததி முழுவதையும் சில நோய்கள் பிடிக்கின்றன’
   ‘வியர்வையோடு குளிக்காதே, சளி பிடித்துக்கொள்ளும்’
   ‘இரண்டு நாட்களாகக் காய்ச்சல் பிடித்துக்கொண்டு ஒரே அவஸ்தை’
   ‘அவனுக்கு முதுகில் சொறி பிடித்திருந்தது’

  8. 3.8 (மோசமான நிலை, உணர்ச்சி போன்றவை ஒன்றை அல்லது ஒருவரை) பீடித்தல்; பாதித்தல்

   ‘இது தொல்லை பிடித்த விவகாரம். நீ தலையிடாதே’
   ‘எங்கள் வீட்டுக்கு அன்றிலிருந்து பிடித்தது வினை’
   ‘ஏன் பிரமை பிடித்ததுபோல் உட்கார்ந்திருக்கிறாய்?’
   ‘துரதிர்ஷ்டம் பிடித்த வீடு இது’
   ‘அவளுக்கு வெறி பிடித்துவிட்டது’
   ‘இருவருமே திக்பிரமை பிடித்து நின்றார்கள்’
   ‘தான் திருடுவதை யாராவது பார்த்திருப்பார்களோ என்ற பயம் அவனைப் பிடித்துக்கொண்டது’

  9. 3.9 (திமிர், கர்வம் போன்றவற்றை அல்லது மோசமான அல்லது அருவருக்கத் தக்க தன்மையை) கொண்டிருத்தல்

   ‘அவன் திமிர் பிடித்து அலைகிறான்’
   ‘அகம்பாவம் பிடித்தவன்’
   ‘சரியான கர்வம் பிடித்தவள்’
   ‘இந்த நாற்றம் பிடித்த சாக்கடையை எப்போதுதான் மூடுவார்களோ?’
   ‘அசிங்கம் பிடித்த ஆளாக இருக்கிறாயே?’

  10. 3.10 (ஒருவருக்குத் தூக்கம்) வருதல்

   ‘வெகுநேரமாகத் தூக்கம் பிடிக்காமல் புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தார்’

  11. 3.11 (நீர், காற்று போன்றவற்றைக் கொள்கலன் போன்றவற்றில்) நிரம்பச் செய்தல்

   ‘பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துச் செடிக்கு ஊற்றினார்’
   ‘இங்கு வாகனங்களுக்குக் காற்று பிடிக்கப்படும்’
   ‘குடத்தை எடுத்துக் கொண்டு அம்மா தண்ணீர் பிடிக்கப் போனாள்’

  12. 3.12 (மூச்சை) அடக்குதல் அல்லது அடக்கி வைத்தல்

   ‘தெருமுனையில் குப்பைகள் அதிகமாகக் கிடப்பதால் மூச்சைப் பிடித்துக்கொண்டுதான் நடக்க வேண்டும்’
   ‘தண்ணீருக்குள் மூச்சைப் பிடித்துக்கொண்டு கிடந்தான்’

  13. 3.13 (பாசி, பூஞ்சணம், ஒட்டடை முதலியவை ஒரு இடத்தில்) படிதல் அல்லது பரவுதல்

   ‘குளத்தின் படிகளில் பாசி பிடித்திருந்ததால் கால் வழுக்கியது’
   ‘பூஞ்சணம் பிடித்த ரொட்டியைத் தூக்கி எறி’
   ‘வீடு முழுவதும் ஒட்டடை பிடித்திருக்கிறது’
   ‘பாலில் ஏடு பிடித்ததும் அதை எடுத்துச் சேகரித்துக்கொள்ள வேண்டும்’

 • 4

  (பிற வழக்கு)

  1. 4.1 (ஒரு நோக்கத்தோடு ஒருவரிடம்) தொடர்பை அல்லது உறவை ஏற்படுத்திக்கொள்ளுதல்

   ‘யாரைப் பிடித்தால் தன் காரியம் நடக்கும் என்று யோசித்தார்’
   ‘நீ சொன்னபடியே ஒரு பணக்காரப் பெண்ணைப் பிடித்துவிட்டாய்!’
   ‘அவனைப் பிடித்தால் செலவில்லாமல் ஊருக்குப் போய்விடலாம் என்று நினைத்தான்’
   ‘நான் சிபாரிசு பிடித்துதான் அந்தத் தொழிற்சாலையில் என் தம்பிக்கு வேலை வாங்கிக்கொடுத்தேன்’

  2. 4.2 (பிஞ்சு, காய் முதலியவை) உண்டாதல்; தோன்றுதல்

   ‘செடியில் காய் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது’

  3. 4.3பேச்சு வழக்கு (நேரம், செலவு முதலியவை) ஆகுதல்

   ‘இதைச் செய்ய நேரமும் பிடிக்கும், செலவும் பிடிக்கும்’
   ‘பிரச்சினைக்கான காரணத்தை அறிய நீண்ட நேரம் பிடிக்கவில்லை’
   ‘இந்தக் கட்டுரை அச்சில் வரும்போது எப்படியும் முப்பது நாற்பது பக்கங்கள் பிடிக்கும்’

  4. 4.4 (சம்பளம் முதலியவற்றிலிருந்து ஒரு தொகையை) கழித்தல்

   ‘வாங்கிய கடனுக்காகச் சம்பளத்தில் ஒரு தொகையைப் பிடித்துக்கொண்டார்’
   ‘வாரக்கூலியில் அபராதம் பிடிப்பது எந்த விதத்தில் நியாயம்?’

  5. 4.5 (தசை, நரம்பு முதலியன) பிறழ்தல்

   ‘குனிந்தபோது கழுத்து பிடித்துக் கொண்டுவிட்டது’
   ‘முதுகு பிடித்துக்கொண்டதால் மூட்டையைத் தூக்க முடியவில்லை’

பிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிடி1பிடி2பிடி3பிடி4பிடி5

பிடி2

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

 • 1

  (நான்காம் வேற்றுமையோடு வரும்போது) (ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல்) விருப்பம் இருத்தல்; (மனம் ஒன்றில்) நாட்டம் கொள்ளுதல்.

  ‘அல்வா எனக்கு மிகவும் பிடிக்கும்’
  ‘உனக்கு அவனைப் பிடிக்காது என்றால் அவனோடு ஏன் பேசுகிறாய்?’
  ‘ஒரு வேலையும் செய்யாமல் வீட்டில் இருக்க எனக்குப் பிடிக்காது’
  ‘எனக்குப் பிடித்த பாடல் ஒன்று எங்கிருந்தோ ஒலித்துக்கொண்டிருந்தது’

பிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிடி1பிடி2பிடி3பிடி4பிடி5

பிடி3

துணை வினைபிடிக்க, பிடித்து

 • 1

  சில பெயர்ச்சொற்களோடு இணைந்து ‘மேற்கொள்ளுதல்’, ‘ஏற்படுதல்’, ‘கொண்டிருத்தல்’ முதலிய பொருள்களில் அவற்றை வினைப்படுத்தும் வினை.

  ‘பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன் என்று அவன் முரண்டுபிடித்தான்’
  ‘மழையில் நனைந்ததால் சளிபிடித்துவிட்டது’
  ‘வக்கிரம் பிடித்த ஆள்’
  ‘அவன் ஏன் இப்படிக் கர்வம்பிடித்து அலைகிறான்?’

பிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிடி1பிடி2பிடி3பிடி4பிடி5

பிடி4

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதர்கள் கைகளாலும், விலங்குகள் கால்களாலும் ஒன்றை) பிடித்து வைத்திருக்கும் நிலை.

  ‘அவருடைய பிடி இறுகுவதை உணர்ந்தேன்’
  ‘புலியின் பிடியில் துடித்தது மான்’
  உரு வழக்கு ‘வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள்’

 • 2

  ஒன்று அல்லது ஒருவர் பிறரைத் தனது அதிகாரத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திய நிலை.

  ‘சிறிய நாடுகளின் பொருளாதாரம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் சிக்கியிருக்கிறது’
  ‘இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் பிடியில் அகப்பட்டுத் தவித்த நாடுகள் ஏராளம்’
  ‘அரசியலின் மீது இருக்கும் மதத்தின் பிடியை நீக்க வேண்டும்’

 • 3

  (மல்யுத்தத்தில் கையாலோ காலாலோ எதிரியை) இறுக்கிக் கட்டுக்குள் கொண்டுவரும் விதம்.

  ‘கத்திரிப் பிடி போட்டு எதிரியைக் கீழே வீழ்த்தினார்’

 • 4

  உள்ளங்கைக்குள் அடங்குகிற அளவு.

  ‘தோசை மாவுக்கு ஒரு பிடி உப்புப் போடு’
  ‘பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி போட்டார்’

 • 5

  கை முஷ்டியின் செங்குத்து உயரம்.

  ‘மாப்பிள்ளையைவிடப் பெண் ஒரு பிடி உயரம்’
  ‘ஒன்பது பிடியில் ஒரு இரட்டை வடச் சங்கிலி’

 • 6

  கையால் பிடிப்பதற்காக ஒன்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதி.

  ‘கத்தியின் பிடி ஆடுகிறது’
  ‘மூடுவதற்காகக் கதவை இழுத்தபோது பிடி கையோடு வந்துவிட்டது’

பிடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிடி1பிடி2பிடி3பிடி4பிடி5

பிடி5

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  ராக ஆலாபனையில் ஒரு ராகத்தைத் தெளிவாகவும் அழகாகவும் வெளிப்படுத்தும் ஸ்வரப் பிரயோகங்கள்.

  ‘பைரவி ராக ஆலாபனை சிறந்த பிடிகள் கொண்டதாக இருந்தது’