தமிழ் பிடிபடு யின் அர்த்தம்

பிடிபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (சட்ட விரோதமான பொருள்களோ குற்றம் செய்தவரோ) உரிய அரசு அதிகாரிகளிடம் மாட்டுதல்; சிக்குதல்.

  ‘கடையைக் காவலர்கள் சோதனையிட்டதில் ஏராளமான ஆபாசப் புத்தகங்கள் பிடிபட்டன’
  ‘சந்தன மரத்தைக் கடத்த முயன்ற இருவர் வனத் துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர்’
  ‘இரண்டு பெட்டிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆமைகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டன’
  ‘தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டம் செய்தவர் பறக்கும் படையின் வசம் பிடிபட்டார்’
  ‘பீரோவை உடைத்துத் திருடும் கும்பல் இன்னும் பிடிபடவில்லை’

 • 2

  பிடிக்கப்படுதல்; மாட்டுதல்; அகப்படுதல்.

  ‘தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் யானை வசமாகப் பிடிபட்டுவிட்டது’
  ‘பலரைத் தாக்கிய புலி பிடிபட்டது’

 • 3

  (போர், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் நபர்கள், நாடுகள் போன்றவை) பிடிக்கப்படுதல்.

  ‘முற்காலத்தில் போரில் பிடிபட்டவர்கள் தெய்வங்களுக்குப் பலியிடப்பட்டனர்’
  ‘பிடிபட்ட நாடுகளில் எல்லாம் தனது அரசை விரிவுபடுத்தினார்’

 • 4

  (மனத்தில்) தெளிவாகப் புலப்படுதல்; விளங்குதல்.

  ‘விடுகதைக்கு விடை சட்டென்று பிடிபட்டது’
  ‘சில நாட்களாகவே உன்னுடைய நடவடிக்கைகள் எனக்குப் பிடிபடவில்லை’
  ‘மருத்துவருக்கே பிடிபடாமல் அப்படி என்ன நோய் உனக்கு?’

 • 5

  (எதிர்மறையில் வரும்போது) (மகிழ்ச்சி, பெருமை போன்றவை) கட்டுப்படுதல்.

  ‘தேர்வில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற செய்தி கிடைத்ததும் அவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை’