தமிழ் பின்னு யின் அர்த்தம்

பின்னு

வினைச்சொல்பின்ன, பின்னி

 • 1

  (நார், பெண்களின் முடி போன்றவற்றின் பிரிகளை) ஒன்றின் மீது ஒன்றாக மாற்றிமாற்றி வைத்து இறுக்குதல்.

  ‘‘இரட்டைச் சடை பின்னிவிடு’ என்று அம்மாவிடம் கேட்டாள்’
  ‘பரம்பரைபரம்பரையாகக் கயிறு பின்னும் தொழில் செய்துவரும் குடும்பம் இது’

 • 2

  (பாய், கூடை, வலை போன்றவை செய்வதற்குக் கோரை, நார் போன்றவற்றின் இழை, துண்டு ஆகியவற்றை) ஒன்றின் ஊடாக மற்றொன்றை அல்லது ஒன்றின் மீது மற்றொன்றைச் செலுத்தி இணைத்தல்.

  ‘இந்தக் கூடையை எவ்வளவு அழகாகப் பின்னியிருக்கிறாய்?’
  ‘பை பின்னத் தெரியுமா?’

 • 3

  (ஒரு நிகழ்ச்சி, கருத்து முதலியவற்றை மையமாகக் கொண்டு) கோர்வையாகச் சம்பவங்களை இணைத்து (கதை போன்றவற்றை) உருவாக்குதல்.

  ‘என் வாழ்க்கையில் நடந்த விநோதச் சம்பவம் ஒன்றை வைத்து இந்தக் கதையைப் பின்னினேன்’

 • 4

  ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் இருத்தல்.

  ‘கொடிகள் பின்னிக் கிடந்தன’

 • 5

  (களைப்பு, தூக்கக் கலக்கம், போதை போன்றவற்றால் கால்கள்) ஒன்றோடு ஒன்று மோதி இடறுதல்.

  ‘பசிக் களைப்பினால் கால் பின்னிக் கீழே விழுந்தான்’

 • 6

  (ஒருவரை) நன்றாக அடித்தல்.

  ‘குழந்தையின் சங்கிலியைப் பறித்தவனை ஊரார் பின்னியெடுத்துவிட்டனர்’