தமிழ் புரட்டு யின் அர்த்தம்

புரட்டு

வினைச்சொல்புரட்ட, புரட்டி

 • 1

  (ஒன்றின் அல்லது ஒருவரின் கீழே கையையோ பிற உபகரணங்களையோ வைத்து அதை) ஒரு பக்கமாக உருட்டுதல் அல்லது திருப்புதல்.

  ‘கீழே கிடந்தவரைப் புரட்டிப் பார்த்தபோதுதான் பின்மண்டையில் அடிபட்டிருந்தது தெரிந்தது’
  ‘பாறையைக் கடப்பாரையால் நெம்பிப் புரட்டினார்கள்’
  ‘எண்ணெயில் வதங்கும்படி கத்திரிக்காய்த் துண்டுகளைக் கரண்டியால் புரட்டவும்’

 • 2

  (நூல், கோப்பு முதலியவற்றில் பக்கத்தை) திருப்புதல்/அப்படித் திருப்புவதன்மூலம் வேகமாகப் படித்தல்.

  ‘தன் கவிதை வந்திருக்கிறதா என்று பார்க்கப் பத்திரிகையை வேகமாகப் புரட்டினான்’
  ‘நீ புத்தகத்தைப் புரட்டி நான் பார்த்ததே இல்லை’
  ‘இவரது நாவல்களைப் புரட்டிப்பார்க்கும்போது ஒரு உண்மை தெரிகிறது’

 • 3

  (ஒன்றின்) எல்லாப் பகுதிகளும் ஒரு பரப்பில் படுமாறு செய்தல்.

  ‘தூரிகையை வர்ணத்தில் புரட்டி எடுத்த பின் தாளின் நடுவில் ஒரு கோடு இழுத்தார்’
  ‘கறியை மசாலாவில் நன்றாகப் புரட்டிக்கொள்ள வேண்டும்’

 • 4

  (பல இடங்களிலும் அலைந்து, பல வழிகளிலும் பணத்தை) திரட்டுதல்; சேகரித்தல்.

  ‘பெரிய தொகையாகக் கேட்கிறீர்களே? ஒரே நாளில் எங்கிருந்து புரட்ட முடியும்?’
  ‘எப்படியாவது ஐநூறு ரூபாய் புரட்டிக்கொடு, அவசரம்’

தமிழ் புரட்டு யின் அர்த்தம்

புரட்டு

பெயர்ச்சொல்

 • 1

  உண்மையைத் திரித்துப் பேசும் பேச்சு.

  ‘எல்லா விதப் புரட்டுகளையும் செய்து சேர்த்த சொத்து எவ்வளவு காலத்துக்கு நிலைக்கும் என்று நினைக்கிறாய்?’
  ‘அவனுடைய பொய்யும் புரட்டும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் போய்விட்டன’