தமிழ் பேசு யின் அர்த்தம்

பேசு

வினைச்சொல்பேச, பேசி

 • 1

  சொற்களை ஒலி வடிவில் வெளிப்படுத்துதல்.

  ‘குழந்தை பேச ஆரம்பித்துவிட்டது’
  ‘மனிதன் பேசுவதற்கு உடலின் பல பாகங்கள் உதவிபுரிகின்றன’
  ‘முதலில் மனிதன் ஓசை எழுப்பிப் பேசுவதற்கு முன்பு செய்கைகளின் மூலமே பேசிவந்தான்’
  ‘அந்தக் கலைஞர் பல குரல்களில் பேசி குழந்தைகளை மகிழ்வித்தார்’

 • 2

  மேற்குறிப்பிட்ட முறையில் ஒரு கருத்து, எண்ணம், உணர்வு முதலியவற்றைப் பிறரிடம் வெளிப்படுத்துதல்.

  ‘பேச ஆரம்பித்தால் அவர் நிறுத்த மாட்டார்’
  ‘அவர் உன்னோடு பேசுவதில்லையா?’
  ‘தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதைப் பலர் பெருமையாக நினைக்கிறார்கள்’
  ‘அவரை நேரில் பார்த்துப் பேச வேண்டும் என்று எனக்கு ஆசை’
  ‘உண்மையைப் பேசுவதற்கு எல்லாரும் தயங்குகிறார்கள்’
  ‘அப்பா பேசும்போது குறுக்கே யாரும் பேசக் கூடாது’
  ‘பல்வேறு மொழி பேசுபவர்கள் வாழும் நாடு இது’
  ‘இவ்வளவு நடந்த பிறகு பேச என்ன இருக்கிறது?’
  உரு வழக்கு ‘இசைக்கலைஞர் மாலியின் கையில் புல்லாங்குழல் பேசும்’
  உரு வழக்கு ‘இங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் நம் புராதனப் பெருமையைப் பேசும்’
  உரு வழக்கு ‘இனிமேல் நான் பேச மாட்டேன். இந்தத் துப்பாக்கிதான் பேசும் என்றான் வில்லன்’
  உரு வழக்கு ‘எல்லாம் பணம் பேசுகிறது, வேறு என்ன?’

 • 3

  உரையாடுதல்.

  ‘தலைவரும் நானும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் எனக்குத் தெளிவாயிற்று’

 • 4

  (ஒரு விஷயத்தைப் பற்றி அல்லது குறிப்பிட்ட பொருளில்) உரையாற்றுதல்.

  ‘மணமக்களை வாழ்த்திப் பேசினார்’
  ‘‘உலகமயமாதல்’ என்ற தலைப்பில் இன்றைய கூட்டத்தில் பேசப்போகிறேன்’
  ‘தீர்மானத்தை வழிமொழிந்து துணைப் பொதுச்செயலாளர் பேசினார்’

 • 5

  (ஒருவருடன் அல்லது பலருடன் ஒன்றைக் குறித்து) ஆலோசனை செய்தல்; கலந்தாலோசித்தல்.

  ‘உன் மேல்படிப்பைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம்’
  ‘உன் திருமணத்தைக் குறித்து நாம் பேச வேண்டும். நீ உடனே ஊருக்கு வா’

 • 6

  பேச்சு வழக்கு திட்டுதல்.

  ‘சொன்ன வேலையைச் செய்யவில்லையென்று கன்னாபின்னாவென்று பேசிவிட்டார்’
  ‘அப்பா பேசுவார் என்பதற்காகப் பணத்தைத் தொலைத்த விஷயத்தை மறைத்துவிட்டேன்’

 • 7

  (எழுத்தில் ஒன்றை) கூறுதல்; சொல்லுதல்; விவரித்தல்.

  ‘இந்த நூலில் கணிப்பொறியின் பயன்குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்’
  ‘மரபிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லை என்று பேசுகிறது இந்தக் கவிதை’
  ‘வாய்மொழி இலக்கியம் என்றும் எழுத்து இலக்கியம் என்றும் இன்று இலக்கியம் பிரித்துப் பேசப்படுகிறது’

 • 8

  (ஒருவருக்கு) ஆதரவாகக் கருத்தை அல்லது எண்ணத்தைத் தெரிவித்தல்.

  ‘தன் பக்கம் யாரும் பேச மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார்’
  ‘எனக்காக அவர்களிடம் கொஞ்சம் பேசிப்பார்’
  ‘எனக்காக அப்பாவிடம் பேசி அண்ணன் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டான்’

 • 9

  (பேசி ஒன்றை) முடிவுசெய்தல்.

  ‘பேசிய கூலியில் கொஞ்சம்கூட குறைத்துக்கொள்ள முடியாது என்று தச்சர் சொல்லிவிட்டார்’
  ‘வாடகையை முதலில் குறைத்துப் பேசிக்கொள், ஒத்துவரவில்லை என்றால் வேறு வீடு பார்க்கலாம்’

 • 10

  (ஒன்று அல்லது ஒருவர் பலரிடையே) பரவலாகவும் பரபரப்பாகவும் குறிப்பிடப்படுதல்.

  ‘எங்கு பார்த்தாலும் இப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள்’
  ‘உங்கள் முதல் நாவல் பேசப்பட்ட அளவுக்கு இரண்டாவது நாவல் ஏன் பேசப்படவில்லை?’
  ‘ஊரார் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகத்தான் பேசுவார்கள்’