தமிழ் போ யின் அர்த்தம்

போ

வினைச்சொல்போக, போய்

 • 1

  (மனிதரும் இயக்கம் உள்ள பிறவும் நீங்கிச் செல்லுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (நடத்தல், ஓடுதல், நகர்தல், பறத்தல், பரவுதல் போன்ற செயல்களின் மூலம்) ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி இடம்பெயர்தல்; செல்லுதல்

   ‘நான் கடைக்குப் போக வேண்டும்’
   ‘இந்த ரயில் திருச்சிக்குப் போகுமா?’
   ‘அந்தப் பூங்காவுக்குப் போக அவனுக்கு வழி தெரியும்’
   ‘எளிதாகப் போக முடியாத அடர்ந்த காடுகளில் சில குகைக்கோயில்கள் இருக்கின்றன’
   ‘இலக்கின்றி அம்பு எங்கேயோ போயிற்று’
   ‘இது சிங்கப்பூருக்குப் போக வேண்டிய கடிதம்’
   ‘இதயத்திலிருந்து புறப்படும் இரத்தம் உடலின் பல பாகங்களுக்கும் போகிறது’
   ‘ஒலியைவிட ஒளி விரைந்து போகிறது’
   ‘அந்தப் பத்திரிகை போகாத இடம் உலகில் எதுவும் கிடையாது’
   உரு வழக்கு ‘எடுத்துக்கொண்ட பொருளுக்கு வெளியே போகாதது கட்டுரை ஆசிரியரின் சிறப்பு’

  2. 1.2 (குறிப்பிட்ட நோக்கத்தோடு ஒருவரை) நாடுதல்; சென்று பார்த்தல்

   ‘உன் மகன் மருத்துவரிடம் போவதற்கே பயப்படுகிறான்’
   ‘வீடு வாங்குவதற்கு முன்னால் ஆலோசனை பெறுவதற்காக ஒரு வழக்கறிஞரிடம் நேற்று போனேன்’
   ‘பிரச்சினையைத் தீர்க்க முடியாத கட்டத்தில் அந்த அரசியல்வாதியிடம்தானே போனாய்?’

  3. 1.3 (ஒரு செயலை மேற்கொள்வதற்காக) ஒரு இடத்துக்குச் செல்லுதல்

   ‘இன்று பரீட்சைக்கு நீ ஏன் போகவில்லை?’
   ‘தம்பி கல்யாணத்துக்கே என்னால் போக முடியவில்லை’
   ‘பரத நாட்டிய நிகழ்ச்சிக்குப் போக வேண்டும்’
   ‘இந்த நடிகை வெள்ளிக்கிழமைகளில் பட்டுப் புடவை கட்டிக்கொண்டுதான் படப்பிடிப்புக்குப் போவார்’

  4. 1.4 (ஓர் இடத்திலிருந்து) புறப்படுதல்; கிளம்புதல்

   ‘நீங்கள் எப்போது மதுரை போக வேண்டும்?’
   ‘ஊருக்குப் போகிற நேரத்தில் தம்பி என்னிடம் பணம் கேட்டு வந்தான்’

  5. 1.5 (ஒன்றின் வழியாக மற்றொன்று) வெளியேறுதல்; வெளிப்படுதல்

   ‘உடம்பில் உள்ள நீரெல்லாம் வியர்வையாக வெளியே போகிறது’
   ‘இரண்டு நாட்களாக எனக்கு பேதியாகப் போய்க்கொண்டிருக்கிறது’
   ‘சக்கரத்திலிருந்து காற்று போகிறது, பார்’

  6. 1.6 (ஒன்றை விட்டு அல்லது ஒருவரை விட்டு) விலகிச் செல்லுதல்; நீங்குதல்

   ‘என்னை விட்டு ஒரு நாள்கூட போக மாட்டான்’
   ‘வெள்ளத்துக்கு பயந்து பாதி ஜனம் ஊரை விட்டே போய்விட்டது’

  7. 1.7 (நீர்) ஓடுதல்

   ‘இந்த ஆண்டு பெய்த மழையில் எங்கள் ஊர் ஆற்றில் மார்பளவுக்குத் தண்ணீர் போயிற்று’
   ‘உங்கள் வயலுக்கு அணைத் தண்ணீர் போகிறதா?’

  8. 1.8 (தேவைப்படும் ஒன்றை) தேடிச் செல்லுதல்

   ‘அவசரமாகப் பத்தாயிரம் ரூபாய் தேவை; நான் யாரிடம் போய்க் கேட்பேன்?’
   ‘வித்தியாசமான காதல் கதை வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்கிறார். அப்படிப்பட்ட காதல் கதைக்கு நான் எங்கே போவேன்?’

 • 2

  (இயக்கம் இல்லாதவற்றுக்கு இயக்கம் இருப்பதுபோல் கூறும் வழக்கு)

  1. 2.1 (தூக்கம், வலி முதலியவை) நீங்குதல்

   ‘காப்பி குடித்ததும் தூக்கம் போய்விட்டது’
   ‘எனக்கு நேற்று ஆரம்பித்த தலைவலி இன்னும் போகவில்லை’
   ‘இன்னுமா உனக்குக் களைப்புப் போகவில்லை?’
   ‘நரம்புத்தளர்ச்சி போவதற்கு யோகாசனத்தில் சில வழிமுறைகள் இருக்கின்றன’

  2. 2.2 (காலம்) கழிதல்; கடத்தல்

   ‘பகல் போய் இரவு வந்தது’
   ‘இந்த ஊரில் பொழுது நன்றாகப் போகிறது’
   ‘நாங்கள் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்’
   ‘சில வருடங்கள் போன பிறகு மறுபடியும் அவளைச் சந்தித்தேன்’

  3. 2.3 (ஓர் இடத்துக்கும் மற்றொரு இடத்துக்கும் இடையே அல்லது ஒன்றின் வழியே மின்கம்பி, பாதை போன்றவை) நீண்டு அமைதல்

   ‘வீட்டின் பின்பக்கமாக மின்சாரக் கம்பி போகிறது’
   ‘இந்தப் பாதை காட்டு வழியாகப் போகிறது அல்லவா?’
   ‘எங்கள் கிராமம் சென்னைக்குப் போகிற நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது’
   ‘இந்த ஒற்றையடிப்பாதை எங்கே போகிறது?’

  4. 2.4 (ஓர் இடத்தில் தோன்றி மற்றொரு இடத்தை) அடைதல்/(ஒன்று ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு) அனுப்பப்படுதல்

   ‘பூஜ்யம் என்னும் எண் இந்தியாவிலிருந்துதான் போயிற்று’
   ‘இந்தியாவில் தயாரிக்கப்படும் செருப்புகள் பர்மா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுக்குப் போகின்றன’
   ‘வைர நகைகள் மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்குப் போகின்றன’

  5. 2.5 (பணம், தகவல் போன்றவை ஒருவரை அல்லது ஒன்றை) சேர்தல்

   ‘நீ கொடுத்தனுப்பிய பணம் அவருக்குப் போயிருக்குமா?’
   ‘எனக்கு வேலை கிடைத்திருக்கும் தகவல் அவருக்கு இந்நேரம் போயிருக்கும்’
   ‘வருமானத்தில் பெரும்பகுதி மருத்துவச் செலவுக்கே போய்விடுகிறது’
   ‘நெருப்பை மிதித்தால் உடனே மூளைக்கு நரம்புமூலம் செய்தி நேராகப் போகிறது’

  6. 2.6 (பார்வை, மனம் ஒன்றின் மேல்) நிலைகொள்ளுதல்; குவிதல்

   ‘அவளது பார்வை எதேச்சையாகப் பக்கத்து அறைப் பக்கம் போனபோது அம்மா தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்’
   ‘உங்களுக்கு ஏன் புத்தி இப்படிப் போகிறது?’

  7. 2.7 (குறிப்பிட்ட இணையதளத்தை) அடைதல்

   ‘தமிழின் பல இணையதளங்களுக்குப் போய்ப் பார்த்தால் திரைப்படங்கள் குறித்த தகவல்கள்தான் அதிகமாகக் கிடைக்கின்றன’

  8. 2.8 (குறிப்பிட்ட வரைமுறை, எல்லை முதலியவற்றை) எட்டுதல்; தாண்டுதல் அல்லது கடத்தல்

   ‘இந்தப் பிரதேசத்தின் தட்பவெப்ப நிலை 25ᵒ செல்சியஸுக்கு மேல் போவது அபூர்வம்’
   ‘இந்த ஊர்ப் பெண்கள் பலரும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் போவதில்லை’

  9. 2.9 (கவிதை, கதை போன்றவை) குறிப்பிட்ட விதத்தில் நடை, ஓட்டம் போன்றவற்றைக் கொண்டிருத்தல்

   ‘நேற்று படித்துக் கொண்டிருந்தாயே ஒரு நாவல், அது எப்படிப் போகிறது?’
   ‘கதாநாயகன் சாராயக் கடையில் சாராயம் குடிப்பது, காவல் நிலையத்துக்குச் செல்வது என்ற ரீதியில் கதை போகிறது’
   ‘புரட்சி வந்தால்தான் சமுதாயம் மாறும், தேவைப்பட்டால் ஆயுதத்தையும் எடுக்க வேண்டும் என்பது போலப் போகின்றன அந்தக் கவிதை வரிகள்’

  10. 2.10 மரணமடைதல்

   ‘எனக்கு எட்டு வயதானபோது கிழவியும் போய்விட்டாள்’
   ‘தாத்தாவுக்கு இப்போது தொண்ணூறு வயது ஆகிறது. அடுத்த தீபாவளிக்கு இருப்பாரோ போய்விடுவாரோ, யாருக்குத் தெரியும்?’

  11. 2.11 (வேலை, தொழில் முதலியவற்றுக்கு) செல்லுதல்

   ‘குறிப்பிட்ட வேலையில் நீண்ட நாள் பணிபுரிந்த தொழிலாளிகள் வேறு தொழில்களுக்குப் போவதற்குச் சிறிது காலம் பிடிக்கும்’
   ‘நம் ஊரிலும் பல பேர் படித்து முடித்து அரசுப் பணிக்கெல்லாம் போக ஆரம்பித்துவிட்டார்கள்’
   ‘மழை பிடித்துக்கொண்டால் மறுநாள் காட்டு வேலைக்குப் போக முடியாது’

  12. 2.12 (ஒன்றைச் செய்ய) ஆரம்பித்தல்; தொடங்குதல்

   ‘என்னுடைய உரைக்கு நான் போவதற்கு முன்பு உங்களை ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன்’

 • 3

  (பிற வழக்கு)

  1. 3.1 (இருப்பது) இல்லாமல் போதல்; (மின்சாரம்) வருவது நிற்றல்

   ‘பெரியவருக்குக் கண் பார்வை போயிற்று’
   ‘அவனுக்கு வேலை போயிற்று’
   ‘என் மானம் மரியாதை எல்லாம் போயிற்று’
   ‘துன்பம் போய் இன்பம் வந்தது’
   ‘அபரிமிதமான தொலைத்தொடர்பு வளர்ச்சியால் தந்தி அடிக்கும் முறை போய்விட்டது’
   ‘கோயில் சார்ந்த கலைகளுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போது போய்விட்டது’
   ‘காலை பத்து மணிக்குப் போன மின்சாரம் இப்போதுதான் வந்திருக்கிறது’

  2. 3.2 (ஒரு பொருள்) விற்பனையாதல்

   ‘இந்த வீடு முப்பது லட்ச ரூபாய்வரை போகும்’
   ‘இந்த நகைகளெல்லாம் என்ன விலைக்குப் போகும்?’
   ‘எங்கள் கடையில் கணிப்பொறி சம்பந்தமான நூல்கள்தான் அதிகமாகப் போகின்றன’
   ‘நீங்கள் கேட்கும் மருந்து இந்தப் பகுதியில் அதிகம் போவதில்லை’

  3. 3.3 (எண்களைக் குறித்து வரும்போது) கழிக்கப்படுதல்

   ‘நூறு ரூபாயில் செலவழித்த பணம் போக பாக்கி எங்கே?’
   ‘ரயில் கட்டணம் போக மீதியை உன்னிடம் கொடுத்துவிடுகிறேன்’
   ‘பத்தில் மூன்று போனால் ஏழு’

  4. 3.4 (ஒன்றில்) ஈடுபடுதல் அல்லது தலையிடுதல்

   ‘அவர் யார் வழிக்கும் போக மாட்டார்’
   ‘அந்த மோசமான அனுபவத்துக்குப் பிறகு அவன் யார் வம்புக்கும் போவதில்லை’
   ‘நானாகச் சண்டைக்குப் போகவில்லை. சும்மா இருந்த என்னை அவன்தான் சீண்டினான்’

  5. 3.5 (குறிப்பிட்ட போக்கில் அல்லது முறையில் ஒருவர்) செயல்படுதல்

   ‘உலகம் போகிற போக்கும் கவலைப்படத்தான் வைக்கிறது’
   ‘பிரச்சினை வேறு திசையில் போய்க்கொண்டிருக்கிறது’
   ‘வரவர உங்கள் அதிகாரம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது’

  6. 3.6 (திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை) வரவேற்பு பெறுதல் அல்லது வெற்றி அடைதல்

   ‘தனது மகன் அறிமுகமான முதல் படமே சரியாகப் போகாதது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது’
   ‘சின்னத்திரையில் ஒரு தொடர் நன்றாகப் போனால் அதில் இடம்பெறும் விளம்பரங்கள் அதிகமாகின்றன’

  7. 3.7 (ஒருவரோடு) உடலுறவு கொள்ளுதல்

   ‘கண்ட பெண்களிடம் போய் உடம்பைக் கெடுத்துக்கொண்டான்’
   ‘அவன் எத்தனை பேரோடு போனால் எனக்கு என்ன?’

  8. 3.8இலங்கைத் தமிழ் வழக்கு (வயது) ஆகுதல்; நிறைதல்

   ‘வயது போகப்போக உடம்பு இயலாமல் போய்விட்டது’

தமிழ் போ யின் அர்த்தம்

போ

துணை வினைபோக, போய்

 • 1

  (‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும்போது) வினை வடிவம் குறிப்பிடும் செயல் விரைவில் நிகழும் அல்லது நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது.

  ‘பலத்த காற்று அடிக்கப்போகிறது’
  ‘மரம் சாயப்போகிறது’
  ‘கீழே கண்ணாடிச் சில் கிடக்கிறது. காலில் குத்திவிடப்போகிறது’

 • 2

  (எதிர்மறை வினையெச்சத்தின் பின் வரும்போது) வினை வடிவம் குறிப்பிடும் நிலை வருந்தத் தக்க விதத்தில் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது.

  ‘அவர் இன்று நம்முடன் இல்லாமல் போனார். இருந்திருந்தால் நம்மைப் பாராட்டியிருப்பார்’
  ‘நேற்று என்னால் கூட்டத்திற்கு வர முடியாமல் போயிற்று’
  ‘படம் நன்றாக இருந்ததா! அடடா, பார்க்காமல் போனேனே’

 • 3

  முதன்மை வினை தெரிவிக்கும் பொருளின் அல்லது கர்த்தாவின் நிலைமாற்றம் முற்றுப்பெறுவதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் துணை வினை.

  ‘பழம் அழுகிப்போயிற்று’
  ‘பாலை உடனே காய்ச்சிவிடு; இல்லையென்றால் கெட்டுப்போகும்’
  ‘குளிரில் நடுங்கிப்போய்விட்டேன்’
  ‘உடம்பு பெருத்துப்போய்விட்டது’