போக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போக்கு1போக்கு2

போக்கு1

வினைச்சொல்போக்க, போக்கி

 • 1

  (ஒன்று ஒருவரிடத்திலிருந்து) அகலச் செய்தல்; நீக்குதல்.

  ‘மக்களின் குறைகளைப் போக்க அரசு தக்க முயற்சி எடுக்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்’
  ‘பொறுமையாகப் பதில் சொல்லி என் சந்தேகத்தைப் போக்கியதற்கு நன்றி’
  ‘இந்த மருந்து முகப்பருக்களை விரைவில் போக்குகிறது’
  ‘மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையைப் போக்க வேண்டும்’
  ‘நமது பாவங்களைப் போக்கவே தேவன் நம்மிடையே அவதரித்தான்’
  ‘வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலைப் போக்கலாம்’
  ‘நம் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை நாம் போக்க வேண்டும்’

 • 2

  (உயிரை) விடுதல்.

  ‘முடிவு தனக்குச் சாதகமாக இல்லை என்றால் உயிரைப் போக்கிக்கொள்ளப்போவதாகக் கடிதத்தில் எழுதியிருந்தாள்’

 • 3

  (நேரத்தை) கழித்தல்.

  ‘வேலைக்குப் போகாமல் எத்தனை நாள் இப்படியே பொழுதைப் போக்க முடியும்?’
  ‘சும்மா நேரத்தைப் போக்குவதற்காக ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன்’
  ‘பிறருக்காக உழைத்தே பாதி வாழ்நாளைப் போக்கியாகிவிட்டது’

போக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

போக்கு1போக்கு2

போக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்று செல்லும் திசை.

  ‘கால் போன போக்கில் நடந்தேன்’
  ‘பெரும் வெள்ளம் காரணமாக ஆற்றின் போக்கு மாறிவிட்டது’
  உரு வழக்கு ‘இடைவேளைக்குப் பிறகு போட்டியின் போக்கே மாறிவிட்டது’

 • 2

  (ஒருவர்) செயல்படும் அல்லது நடந்துகொள்ளும் விதம்; நடத்தை.

  ‘அவரவர் போக்கில் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள்’
  ‘வரவர அவன் போக்கு சரி இல்லை’
  ‘அவன் போக்கில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?’

 • 3

  குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு கோட்பாடு, கொள்கை போன்றவற்றின் அடிப்படையில் பலர் சேர்ந்து இயங்கும் நிலை.

  ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் போக்குகள் எதனுடனும் தன்னைப் பிணைத்துக்கொள்ளாத எழுத்தாளர்களும் உண்டு’
  ‘தீவிரவாதப் போக்குகள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்’
  ‘மதவாதப் போக்குகளும் இனவாதப் போக்குகளும் பெரும் கவலை அளிக்கின்றன’

 • 4

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில்) (ஒருவர் ஆதரவு, உதவி முதலியவை கேட்டு) நாடுவதற்கான இடம்; போக்கிடம்.

  ‘போக்கற்றுப்போய் உன்னிடம் வரவில்லை’
  ‘போக்கற்ற பயல்’