தமிழ் போடு யின் அர்த்தம்

போடு

வினைச்சொல்போட, போட்டு

 • 1

  (விழச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒரு பொருளைக் கீழே) விழச் செய்தல்; (தவறுதலாக ஒரு பொருளைக் கீழே) விழும் வகையில் விட்டுவிடுதல்

   ‘நீங்கள் கீழே போட்டாலும் இந்தப் பாத்திரம் உடையாது’
   ‘வெள்ளப் பகுதிகளில் விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களைப் போட்டார்கள்’
   ‘இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு போடப்பட்டது’
   ‘பொம்மையைக் கீழே போட்டுவிடாதே’
   ‘வேலையாள் மரத்திலிருந்து இளநீர் பறித்துப் போட்டான்’

  2. 1.2 (குறிப்பிட்ட திசையில் ஒன்றை) வீசுதல்

   ‘இந்த முறை பந்து வீச்சாளர் தாழ்வாக ஒரு பந்து போட்டார்’
   ‘சித்தாள் செங்கல்லைக் கீழேயிருந்து மேலே போட, கொத்தனார் பிடித்துக்கொண்டார்’
   ‘சாப்பிட்ட இலையை எடுத்துக் கொல்லைப் பக்கம் போட்டான்’

  3. 1.3 (கம்பு, சுத்தியல், அரிவாள் போன்றவற்றால் ஒன்றை வேகமாக) அடித்தல் அல்லது வெட்டுதல்

   ‘தன்னைத் தாக்க வந்தவன் தலை மீது தடியால் ஓங்கி ஒரு போடு போட்டார்’
   ‘சுத்தியலால் ஒரு போடு போட்டதும் ஆணி வேகமாக உள்ளே இறங்கியது’
   ‘கோடாலியை வேகமாகப் போட்டதும் விறகு பிளந்துகொண்டது’

  4. 1.4 (கால்பந்தாட்டம், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் கோல்) அடித்தல்

   ‘கூடுதல் நேரத்தில் இத்தாலி மேலும் ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது’

 • 2

  (கிடைக்கச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒரு பொருளை) கொண்டுவந்து தருதல்

   ‘பக்கத்து வீட்டுக்கு யார் பத்திரிகை போடுகிறானோ அவனையே நமக்கும் போடச் சொல்’
   ‘காலையில் பால் பாக்கெட் போடுபவன் வரவில்லை’

  2. 2.2 (கடிதம், மனு, விண்ணப்பம் போன்றவற்றை) அனுப்புதல்

   ‘அப்பா என்னை வரச்சொல்லிக் கடிதம் போட்டிருக்கிறார்’
   ‘என் நிலைமையை விளக்கி மேலதிகாரிக்கு எழுதிப் போட்டேன்’
   ‘ஊரில் குளம் வெட்டுவது தொடர்பாக அமைச்சரிடம் மனு போட்டிருக்கிறோம்’
   ‘இந்த வேலைக்கு ஒரு விண்ணப்பம் போட்டுவை’

  3. 2.3 (உணவு, பானம் அல்லது தீவனம் போன்றவற்றை) கொடுத்தல்; அளித்தல்

   ‘அம்மா, எனக்கு இன்னும் கொஞ்சம் சாதம் போடு’
   ‘எல்லோருக்கும் பாயசம் போட்டீர்களா?’
   ‘எனக்கென்ன குறைச்சல்? வீட்டில் மூன்று வேளையும் சாப்பாடு போடுகிறார்கள்’
   ‘மாட்டுக்கு வைக்கோல் போடு’
   ‘இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் பொரியை வாங்கி இங்குள்ள குளத்து மீன்களுக்குப் போடுகிறார்கள்’
   ‘எலும்புத் துண்டை நாய்க்குப் போட்டான்’
   ‘ஆட்டுக்குக் குழை ஒடித்துப் போடு’

  4. 2.4 (தேவைப்படாத பழைய பொருள்களைக் கடையில்) விற்றல்

   ‘உடைந்த இரும்புச் சாமான்களைக் காயலான் கடையில் போட்டுவிட்டேன்’
   ‘பழைய துணிகளைப் போட்டுப் பாத்திரம் வாங்கினாள்’

  5. 2.5 (நுகர்வோருக்கு ஒரு பொருளைக் குறிப்பிட்ட எடைக்கோ அல்லது விலைக்கோ) தருதல்; கொடுத்தல்

   ‘கத்திரிக்காய் கால் கிலோவும் தக்காளி அரைக் கிலோவும் போடு’
   ‘எனக்குக் கால் கிலோ இறால் போடுங்கள்’
   ‘தம்பி! இரண்டு ரூபாய்க்குப் பச்சை மிளகாய் போடு’
   ‘ஐந்து ரூபாய்க்கு முந்திரிப் பருப்பு போட்டு விடட்டுமா?’

  6. 2.6 (வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் ஒருவர் தன் கணக்கில் பணம்) செலுத்துதல்

   ‘அன்றன்று வசூலாகும் பணத்தை வங்கியில் போட்டுவிடுவார்’
   ‘எங்கள் வங்கியில் பணம் போட்டிருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை’
   ‘மாதம் ஒரு சிறு தொகையையாவது உன் கணக்கில் போட்டுவை’

  7. 2.7 (நேர்த்திக்கடனாகக் கண்மலர் போன்றவற்றைக் கோயிலுக்கு) அளித்தல்; (நேர்த்திக்கடனாகக் கோயிலில் விளக்கு) ஏற்றிவைத்தல்

   ‘கோவிலில் நெய் விளக்குப் போடுவதாக வேண்டிக்கொண்டாள்’

  8. 2.8 (விதை, உரம் போன்றவற்றை வயலில்) இடுதல்

   ‘தொழுவுரத்தைப் போட்டால் களைகள் பரவுவது குறையும்’
   ‘சரியான இடைவெளியில் விதைகளைப் போட வேண்டும்’
   ‘பயிருக்குப் போடும் உரத்தில் கணிசமான பகுதியைக் களைகள் எடுத்துக்கொள்கின்றன’
   ‘பொறுக்கு விதைகளைப் போட்டால் பயிர் நன்றாக முளைத்து வளரும்’

  9. 2.9 (ஒன்றில்) முதலீடு செய்தல்; (விலையாக அல்லது பங்காகக் குறிப்பிட்ட அளவு) பணத்தைக் கொடுத்தல்

   ‘கோழிப் பண்ணை அமைக்க எவ்வளவு மூலதனம் போட வேண்டும்?’
   ‘என்னுடைய சொந்தக் காசைப் போட்டுக் கட்டிய வீடு’
   ‘பல கோடி ரூபாய் போட்டு எடுத்த படம் தோல்வியைத் தழுவியது’
   ‘நாம் பத்து பேரும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டால் இந்த நாடகத்தை நடத்திவிட முடியும்’
   ‘கிராமவாசிகள் தங்களால் முடிந்த அளவுக்கு ஐந்தோ பத்தோ போட்டுத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்’

  10. 2.10 (பிச்சை) இடுதல்

   ‘கோயிலுக்கு வருவோர் அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுவது வழக்கம்’
   ‘எனக்கு என்ன நீ பிச்சை போடுகிறாயா? உன் பணம் எனக்கு வேண்டாம்’

  11. 2.11 (பழியைப் பிறர் மேல்) சுமத்துதல்

   ‘எல்லாவற்றையும் நீ செய்துவிட்டு அந்தப் பெண் மேலே பழியைப் போடுகிறாயா?’

  12. 2.12 (மதிப்பெண்) தருதல்

   ‘உனக்கு எத்தனை மதிப்பெண் போட்டிருக்கிறார்கள்?’

 • 3

  (உள்நோக்கிச் செல்லச் செய்தல் அல்லது ஒன்றில் இருக்கச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (ஒன்றை ஒரு இடத்தில்) இருக்குமாறு அல்லது கிடக்குமாறு செய்தல்

   ‘பாய், தலையணையை எல்லாம் வெயிலில் போட வேண்டும்’
   ‘குழந்தையைக் கூடத்தின் ஓரமாகப் போட்டிருந்தாள்’
   ‘துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு புறப்படத் தயாரானார்’
   ‘கட்டிலை வாசலில் போட்டுத் தாத்தா படுத்திருந்தார்’
   ‘சட்டையைக் கழற்றிக் கொடியில் போட்டான்’
   ‘வெள்ளிப் பாத்திரங்களின் மேல் துணியைப் போடு’
   ‘இந்த அறையில் இரண்டு நாற்காலிகள் போடு’

  2. 3.2 (ஒன்றை ஒன்றினுள்) இடுதல்

   ‘சில்லறையைப் பையில் போட்டுக்கொள்’
   ‘வாக்குச்சீட்டை முறையாக மடித்து வாக்குப்பெட்டிக்குள் போட வேண்டும்’
   ‘குழந்தைக்குத் திருஷ்டி சுற்றிய உப்பையும் மிளகாயையும் அடுப்பினுள் போட்டாள்’
   ‘அப்பா கொடுத்த காசையெல்லாம் உண்டியலில் போட்டு வைத்துக்கொண்டாள்’
   ‘மன்னர் கையில் வைத்திருந்த வாளை உறையில் போட்டார்’
   ‘துப்பாக்கியில் குண்டுகளைப் போட்டுக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பினான்’

  3. 3.3 (நூல், அறிவிப்பு முதலியவற்றில்) குறிப்பிடப்படுதல்

   ‘என் ராசிக்குப் பண வரவு என்று பத்திரிகையில் போட்டிருக்கிறது’
   ‘தேர்வு முடிவுகளை அறிவிப்புப் பலகையில் போட்டிருக்கிறார்கள்’

  4. 3.4 (கை, கால் ஆகியவற்றைக் குறிப்பிட்ட நிலையில் ஒன்றின் மேல்) வைத்தல்

   ‘அவர் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்’
   ‘தோள்மேல் கையைப் போட்டுக் கூப்பிடுவது யார் என்று திரும்பிப்பார்த்தார்’
   ‘ஒரே பக்கத்தில் கால்களைப் போட்டவாறு குதிரையில் அமர்ந்திருந்தார்’
   ‘தம்பி எதிரிலிருந்த மேஜைமீது கால்களைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்’
   ‘அவன் தோளில் ஆதரவாகக் கை போட்டு உள்ளே அழைத்துக்கொண்டு போனார்’

  5. 3.5 (உடை, ஆபரணம் முதலியவை) அணிதல்/அணிவித்தல்

   ‘மஞ்சள் சட்டை போட்டிருப்பவர்தான் என் மாமா’
   ‘குழந்தைக்கு ஏன் இவ்வளவு நகைகள் போட்டிருக்கிறாய்?’
   ‘செருப்புப் போடாமல் வெளியே போகாதே’
   ‘தன் அன்னையின் படத்துக்கு மாலை போட்டார்’
   ‘அவனுடைய வீட்டுக்குக் கண்ணாடி போட்ட ஒரு டாக்டர் வந்தார்’
   ‘முகமூடி போட்டுக்கொண்டு பிள்ளைகளைப் பயமுறுத்தினான்’
   ‘மகளுக்கு வைரத் தோடு போட்டு அழகு பார்த்தாள்’

  6. 3.6 (உபகரணம் போன்றவற்றை ஒன்றில்) பொருத்துதல்/ (தாழ்ப்பாள் போன்றவற்றை அவற்றுக்கு உரிய இடத்திலும் பொத்தானைச் சட்டையின் துளையிலும்) பொருத்துதல்; இணைத்தல்

   ‘பித்தளைப் பூண் போட்ட தடியைக் கையில் வைத்திருந்தார்’
   ‘மூக்குத்தியில் திருகாணியைப் போட முடியவில்லை’
   ‘மரப்பிடி போட்ட பாத்திரம்’
   ‘முதலில் சட்டைப் பொத்தானைப் போடு, எல்லாரும் பார்க்கிறார்கள்’
   ‘கொல்லைக் கதவின் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு வா’
   ‘ஜன்னல் கதவின் கொக்கியைப் போடு’

  7. 3.7 (சிறை, கூண்டு போன்றவற்றில்) அடைத்தல்

   ‘அவனைப் பிடித்துக்கொண்டுபோய்ச் சிறையில் போட்டுவிட்டார்கள்’
   ‘சிங்கத்தைக் கூண்டுக்குள் போட்டுப் பூட்டினர்’
   ‘இரண்டு பேரையும் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டான்’

  8. 3.8 (வாகனத்தில் எரிபொருள்) நிரப்பிக்கொள்ளுதல்

   ‘அவசியம் என்றால் பெட்ரோல் போட்டுக்கொள்’

  9. 3.9 (ஒன்றை மற்றொன்றின் மேல்) பரப்புதல்; விரித்தல்

   ‘வெள்ளைப் படுதா போட்டு மூடிக் கட்டிய வண்டி’
   ‘கடைக்காரன் பல புடவைகளை எடுத்துப் போட்டாலும் என் மனைவிக்கு எதுவும் பிடிக்கவில்லை’

  10. 3.10 (பேச்சு, சொற்றொடர் முதலியவற்றில் குறிப்பிட்ட வார்த்தைகளை) சேர்த்தல்

   ‘இப்போது நிறைய பாடல்களில் ஆங்கில வார்த்தைகளைப் போட்டு எழுதுவது ஒரு பாணி’
   ‘மெட்டை ஆரம்பித்த உடனே வார்த்தைகளைப் போட்டுப் பாடலாசிரியர் அசத்திவிட்டார்’

 • 4

  (உருவாக்குதல் அல்லது தயாரித்தல் தொடர்பான வழக்கு)

  1. 4.1 (உணவுப்பொருள், வெந்நீர் போன்றவை) தயாரித்தல்

   ‘சாயங்காலம் வெங்காய பஜ்ஜி போடு’
   ‘குளிப்பதற்கு வெந்நீர் போடு’
   ‘வீட்டில் போட்ட ஊறுகாய்போல இது இல்லை’
   ‘காப்பி போட இவ்வளவு நேரமா?’

  2. 4.2 (கலவையாகத் தயாரிக்கப்படும் ஒன்றிலோ உணவுப் பண்டம், நீர் முதலியவற்றிலோ ஒன்றை) சேர்த்தல்

   ‘காப்பிக்கு இன்னும் கொஞ்சம் சர்க்கரை போடு’
   ‘சாம்பாரில் என்ன காய் போட்டிருக்கிறாய்?’
   ‘கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பாலைக் குடி’
   ‘சாதத்தில் பருப்பும் நெய்யும் போட்டுப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டினாள்’

  3. 4.3 (எழுதுதல், வரைதல், அச்சிடுதல் போன்றவற்றின் மூலம் எழுத்து, குறி, ஓவியம் முதலியவற்றை) உண்டாக்குதல்

   ‘வாக்கியத்தின் முடிவில் ஒரு ஆச்சரியக்குறி போடு’
   ‘பையன் யானைப் படம் போட்டுக்கொண்டிருந்தான்’
   ‘நெற்றியில் நாமம் போட்டிருந்தார்’
   ‘ஒரு எண்ணின் இடது பக்கம் பூஜ்யம் என்கிற எண்ணைப் போட்டால் அதற்கு மதிப்புக் கிடையாது’
   ‘கண்ணன் பிறந்த தினத்தன்று வாசலிலிருந்து பாதங்கள் போடுவது வழக்கம்’
   ‘சின்னப் பூப் போட்ட சேலையைக் காட்டுங்கள்’

  4. 4.4 (வேடம்) புனைதல்; (ஒப்பனை) செய்தல்

   ‘அரசர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர்வலம் வந்தார்’
   ‘இது அவசரத்தில் போட்ட ஒப்பனை’

  5. 4.5 (குறிப்பிட்ட பயிர், காய்கறி போன்றவற்றை) பயிரிடுதல்

   ‘கரிசல் மண்ணில் பருத்திதான் போடுவார்கள்’
   ‘இந்த வருடம் கரும்பு போடலாம் என்று இருக்கிறேன்’

  6. 4.6 (ஒரு கட்டமைப்பை அல்லது தோட்டம், வேலி போன்றவற்றை) அமைத்தல்

   ‘காலி மனையில் போடப்பட்டிருந்த குடிசைகள் அகற்றப்பட்டன’
   ‘கட்சி மாநாட்டுக்காக மைதானத்தில் பெரிய பந்தல் போட்டிருந்தார்கள்’
   ‘எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த இடத்தில் சில நாடோடிகள் கூடாரம் போட்டிருக்கிறார்கள்’
   ‘இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலை போடப்படுகிறது’
   ‘சமீப காலங்களில் நிறைய மேம்பாலங்கள் போடப்பட்டுள்ளன’
   ‘வீட்டின் முன்புறத்தில் ஒரு தோட்டம் போடலாமே’
   ‘தோட்டத்திற்கு வேலி போட வேண்டும்’
   ‘புது வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டாயிற்றா?’

  7. 4.7 (சிமெண்டு, மொசைக் கற்கள் ஆகியவற்றைத் தரையில்) பாவுதல்

   ‘இப்போதுதான் சிமெண்டு போட்டிருக்கிறோம்’
   ‘தரைக்கு மொசைக் கற்கள் போடப்போகிறோம்’

  8. 4.8 (ஓடு, கீற்று முதலியவற்றை) வேய்தல்

   ‘ஓடு போட்ட வீடுதான் என்னுடையது’
   ‘கூரைக்குப் புதிதாகக் கீற்று போட வேண்டும்’

  9. 4.9 (சட்டம், கண்ணாடி, அட்டை போன்றவற்றை) பொருத்துதல்; அமைத்தல்

   ‘அலமாரிக்கு மேல் பாட்டியின் பழைய புகைப்படம் ஒன்றைப் புதிதாகச் சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கிறோம்’
   ‘புத்தகங்களுக்கு அப்பா அட்டை போட்டுக்கொண்டிருந்தார்’

  10. 4.10 (பாட்டுக்கு மெட்டு) அமைத்தல்

   ‘இந்தப் படத்துக்காக அருமையான மெட்டு ஒன்றை இளையராஜா போட்டிருக்கிறார்’

 • 5

  (ஏற்பாடு செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 5.1 (திரையரங்கத்தில் படம்) காட்டுதல்; (தொலைக்காட்சியில் படம், நிகழ்ச்சி போன்றவை) ஒளிபரப்புதல்; (நாடகம், கூத்து போன்றவை) நடத்துதல்

   ‘இந்தத் திரையரங்கத்தில் பழைய படமாகவே போடுகிறார்கள்’
   ‘இன்றைக்கு என்ன நாடகம் போடுகிறார்கள்?’
   ‘தூர்தர்ஷனில் இந்த வாரம் தேசிய விருது பெற்ற திரைப்படம் ஒன்றைப் போடுகிறார்கள்’

  2. 5.2 (வேலை விஷயமாக ஒருவரை ஒரு இடத்துக்கு) அனுப்புதல்

   ‘அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து மதுரையில் போட்டிருக்கிறார்கள்’
   ‘உனக்கு எங்கே வேலை போட்டிருக்கிறார்கள்?’
   ‘இந்த வருஷம் கோயம்புத்தூர். அடுத்த வருஷம் எங்கே போடப்போகிறார்களோ தெரியவில்லை’

  3. 5.3 (ஒரு பணிக்கு ஒருவரை) நியமித்தல்; (ஒரு செயலுக்கு அல்லது பொறுப்புக்கு ஒருவரை) தேர்ந்தெடுத்தல்

   ‘குழந்தையைக் கவனித்துக்கொள்ள வீட்டோடு ஒரு ஆயாவைப் போட்டிருந்தார்’
   ‘அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல்துறை அதிகாரி ஒருவரைப் போட்டிருந்தார்கள்’
   ‘இந்தப் படத்திற்குக் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று இயக்குநருக்கு ஒரே குழப்பம்’
   ‘அவனுக்கு வேலை போட்டுக்கொடுத்ததே நான்தான்’

  4. 5.4 (பாதுகாப்பு) ஏற்படுத்துதல்

   ‘கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’
   ‘வெடிகுண்டுப் புரளியை அடுத்துப் பாராளுமன்றத்துக்குத் தகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்’

  5. 5.5 (திட்டத்தை) கொண்டுவருதல்; (கட்டளை, உத்தரவு) தருதல்

   ‘இவ்வளவு திட்டங்கள் போட்டு என்ன பயன்?’
   ‘அவர் கூட்டங்களில் பேசுவதற்குக் காவல்துறை சில நிபந்தனைகளைப் போட்டது’
   ‘கலவரத்துக்குப் பிறகு ஊரடங்குச் சட்டம் போடப்பட்டது’
   ‘உன் விருப்பத்துக்கு நானா தடை போட்டேன்?’
   ‘எனக்குக் கட்டளை போட நீ யார்?’

  6. 5.6 (கையெழுத்து) இடுதல்

   ‘பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்துப் போடப்போவது யார்?’
   ‘கையெழுத்துப் போடாமல் விண்ணப்பத்தை அனுப்புகிறவர்களும் உண்டு’
   ‘இன்னும் இரண்டு கடிதங்களில் கையெழுத்துப் போட வேண்டும்’

  7. 5.7 (கூட்டம்) நடத்துதல்/(கூட்டத்தை) கூட்டுதல்

   ‘அடுத்த வாரம் திலகர் திடலில் ஒரு கூட்டம் போடுகிறார்கள். நீயும் என்னோடு வருகிறாயா?’
   ‘வீட்டுக்கு முன்னே ஏன் கூட்டம் போடுகிறீர்கள்?’

  8. 5.8 (பட்டியல், ரசீது முதலியவற்றை) தயாரித்தல்

   ‘இதுபோல், பல்லாயிரக் கணக்கானவர்களின் சம்பளப் பட்டியல்களை வெகு சீக்கிரத்தில் கணிப்பொறி போட்டுவிடும்’
   ‘ரசீதை யார் பெயரில் போட வேண்டும்?’

  9. 5.9 (வரி) விதித்தல்

   ‘தனியார் அஞ்சல் சேவைக்கும் சேவைவரி போடப்பட்டுள்ளது’

  10. 5.10 (ஒருவர் மேல் வழக்கு) பதிவுசெய்தல்

   ‘அப்பா மேலேயே மகன் வழக்குப் போடுகிறான்’
   ‘மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனங்களின் மீது ஆயிரக் கணக்கானவர்கள் வழக்குப் போட்டிருக்கிறார்கள்’

  11. 5.11 (விலையை) நிர்ணயித்தல்

   ‘இந்தப் புத்தகத்துக்கு எவ்வளவு அதிகமாக விலை போட்டாலும் தகும்’
   ‘இந்தக் கட்டிலுக்கு எவ்வளவு விலை போடலாம், சொல்லுங்கள்?’

 • 6

  (வெளிவரச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 6.1 (விலங்குகள் தங்கள் கழிவுப்பொருளை) வெளித்தள்ளுதல்

   ‘வீட்டு வாசலில் மாடு சாணி போட்டிருக்கிறது’
   ‘வழியெல்லாம் ஆடு புழுக்கை போட்டுவைத்திருக்கிறது’

  2. 6.2 (நூல், பத்திரிகை முதலியவற்றை) பிரசுரித்தல்; (பத்திரிகையில் செய்தி, தகவல் முதலியவற்றை) வெளியிடுதல்

   ‘உங்கள் கட்டுரைகளைத் தொகுத்துக் கொடுங்கள். ஒரு நூலாகப் போட்டுவிடலாம்’
   ‘‘மாநகரத்தில் இன்று’ என்ற தலைப்பின் கீழ் சென்னையில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பற்றிப் போட்டிருந்தார்கள்’
   ‘‘கொலை, கொள்ளை தவிர உங்கள் பத்திரிகையில் போடுவதற்கு வேறு செய்திகள் எதுவும் இல்லையா?’ என்று ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்’

 • 7

  (பிற வழக்கு)

  1. 7.1 (புகையிலை, வெற்றிலை போன்றவற்றை) பயன்படுத்துதல்; நுகர்தல்

   ‘சிலர் புகையிலை மட்டும் போடுவார்கள்’
   ‘அவர் பொடி போட்டுவிட்டுக் கைக்குட்டையால் மூக்கைத் துடைத்துக்கொண்டார்’
   ‘தாம்பூலம் போட்டுக்கொள்கிறீர்களா?’
   ‘தாத்தா வெற்றிலை போடும் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்’

  2. 7.2 (எண்ணெய், களிம்பு போன்றவற்றை) தடவுதல்; (சோப்பைக் கொண்டு) தேய்த்தல்

   ‘காயத்திற்கு மருந்து போடு’
   ‘புளி போட்டுப் பாத்திரங்களை அலம்பினாள்’
   ‘கண்ணாடி முன் நின்று பவுடர் போட்டுக்கொண்டான்’
   ‘எண்ணெய் போடாத ஊஞ்சல் சங்கிலிகள் கிறீச்சிட்டன’
   ‘அவர் சோப்புப் போட்டுக் குளிக்க மாட்டார். மூலிகைப்பொடிதான் பயன்படுத்துவார்’

  3. 7.3 (கணக்கு போன்றவற்றை) செய்தல்

   ‘வீட்டுக்கணக்குப் போட்டுவிட்டாயா?’
   ‘அதிக மதிப்பெண்களைக் கொண்ட கணக்குகளையெல்லாம் முதலில் போட்டேன்’
   ‘சிக்கலான கணக்குகளையும் இந்தக் கணிப்பொறி போடும்’

  4. 7.4 (விசையைத் தட்டி ஒன்றை) இயங்கச் செய்தல்

   ‘மின்விசிறியைப் போடு’
   ‘அறையின் உள்ளே நுழைந்ததும் விளக்கைப் போட்டார்’
   ‘விசையைப் போட்டதும் தண்ணீர் கொட்டத் தொடங்கியது’

  5. 7.5 (விடுகதை, புதிர் போன்றவற்றுக்கான கேள்வியை ஒருவரிடம்) கேட்டல்

   ‘அக்கா ஏதாவது விடுகதை போடேன்?’
   ‘விடை கண்டுபிடிக்க முடியாத புதிர்களையெல்லாம் அண்ணன் என்னிடம் போடுவான்’

தமிழ் போடு யின் அர்த்தம்

போடு

துணை வினைபோட, போட்டு

 • 1

  சில பெயர்ச்சொற்களோடு இணைந்து அவற்றை வினைப்படுத்தும் வினை.

  ‘தூக்கம்போடு (=தூங்கு)’
  ‘மயக்கம்போடு (=மயங்கு)’
  ‘தும்மல்போடு (=தும்மு)’
  ‘குளியல்போடு (=குளி)’

 • 2

  முதன்மை வினை குறிப்பிடும் செயல் அந்தக் கணத்தில் முடிவெடுத்துச் செய்யப்படுவது, மிகுந்த அக்கறை காட்டப்படாமல் சாதாரணமான முறையில் செய்யப்படுவது போன்ற பொருள் தொனிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘நிலத்தை வாங்கிப்போட்டு இவ்வளவு நாளாகியும் இன்னும் வீடு கட்டவில்லை’
  ‘வீட்டைத் திறந்துபோட்டுவிட்டு எங்கே போனாய்?’
  ‘தரையில் பாயை விரித்துப்போட்டுப் படுத்தான்’
  ‘பானையைக் கழுவிய பிறகு கவிழ்த்துப்போடு’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு ‘ஒரு செயலைச் செய்து முடித்தல்’ என்ற பொருளில் ‘செய்து’ என்னும் வாய்பாட்டுக்குப் பின் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘சோறு காய்ச்சிப்போட்டேன்’
  ‘கட்டுரை எழுதிப்போட்டேன்’