தமிழ் மற யின் அர்த்தம்

மற

வினைச்சொல்மறக்க, மறந்து

 • 1

  (கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒன்றை அல்லது தனக்குத் தெரிந்ததை) நினைவுக்குக் கொண்டுவர முடியாமல் போதல்/(கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒன்று அல்லது தனக்குத் தெரிந்தது) நினைவிலிருந்து நீங்குதல்.

  ‘பார்த்துப் பல வருடங்களானதால் உன் முகம்கூட எனக்கு மறந்துவிட்டது’
  ‘மறக்க முடியாத திரைப்படங்களுள் ‘கர்ணன்’ படமும் ஒன்று’
  ‘எனக்கு நேர்ந்த அவமானம் இன்னமும் எனக்கு மறக்கவில்லை’

 • 2

  ஒன்றைச் செய்யும் பழக்கம் விட்டுப்போவதால் அதை மீண்டும் செய்ய முடியாத நிலை ஏற்படுதல்.

  ‘நான் சின்ன வயதில் பரத நாட்டியம் ஆடியிருக்கிறேன். இப்போது எனக்கு மறந்துவிட்டது’
  ‘பொரித்த குழம்பு எப்படி வைப்பது என்பது எனக்கு மறந்துவிட்டது’

 • 3

  செய்ய வேண்டிய ஒன்று நினைவுக்கு வராததால் அதைச் செய்யாமல் விடுதல்.

  ‘நீ அடுத்த முறை வரும்போது மறக்காமல் மௌனியின் சிறுகதைத் தொகுப்பை எடுத்து வா’
  ‘முட்டைகோஸ் வாங்க மறந்துவிட்டேன்’

 • 4

  ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி நினைப்பதை நிறுத்திக்கொள்ளுதல்.

  ‘‘அவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்றால் இத்தோடு எங்களை மறந்துவிடு’ என்றார் அப்பா’
  ‘குடும்பப் பிரச்சினைகளை மறந்து இருக்கலாம் என்று நண்பர்களிடம் போனால் அவர்களுடனும் பிரச்சினை’

 • 5

  (அதிகமான உற்சாகம், பரவசம், கோபம் போன்றவற்றால் ஒருவர்) தன் நிலையில் இல்லாமல் இருத்தல்.

  ‘வீணை இசையைக் கேட்டு என்னையே நான் மறந்துவிட்டேன்’
  ‘தன்னை மறந்து நீந்திக்கொண்டிருந்தான்’
  ‘நீதிமன்றம் என்பதையும் மறந்து பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்’