மறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறை1மறை2மறை3

மறை1

வினைச்சொல்மறைய, மறைந்து, மறைக்க, மறைத்து

 • 1

  கண்ணுக்குப் புலப்பட்டது புலப்படாமல் ஆதல்.

  ‘நிலா மேகங்களுக்குப் பின் மறைந்ததும் எங்கும் இருள் கவிந்தது’
  ‘பேருந்து நகர்ந்து சாலையில் புள்ளியாக மறைவதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்’
  ‘காயத்தினால் ஏற்பட்ட லேசான தழும்பு இப்போது மறைந்துவிட்டது’

 • 2

  (ஒலி) கேட்க முடியாத நிலையை அடைதல்.

  ‘எங்கோ ஒரு நாய் ஊளையிடும் சத்தம் கொஞ்சம்கொஞ்சமாகத் தேய்ந்து பின் மறைந்தது’

 • 3

  ஒரு நிலை, உணர்வு, தன்மை போன்றவை ஒன்றை விட்டு அல்லது ஒருவரை விட்டு நீங்குதல்; விலகுதல்.

  ‘வேலை துவங்கியபோது இருந்த உற்சாகம் இப்போது முற்றிலுமாக மறைந்துவிட்டிருந்தது’
  ‘அவருடைய விளக்கத்தைக் கேட்ட பிறகு அதுவரை இருந்த சந்தேகம் கொஞ்சம்கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது’
  ‘குழந்தையுடன் இருக்கும்போது தனது பதற்றம், கவலை எல்லாம் மறைந்துவிடுவதை அவளால் உணர முடிந்தது’
  ‘நாளடைவில் ‘சுப்புரத்தினம்’ என்கிற அவருடைய இயற்பெயர் மறைந்து ‘பாரதிதாசன்’ என்கிற பெயரே நிலைத்தது’
  ‘அவரது நாவல்களில் பல இடங்களில் கவிதைக்கும் உரைநடைக்கும் இருக்கும் வேறுபாடே மறைந்துவிடுகிறது’
  ‘எனது தாழ்வு மனப்பான்மை எப்போதுதான் மறையுமோ தெரியவில்லை’

 • 4

  (வெளிவராமல் அல்லது இருப்பது வெளியே தெரியாமல் ஒருவர் அல்லது ஒன்று ஒரு இடத்தில்) பதுங்கியிருத்தல்; ஒளிந்திருத்தல்.

  ‘மறைந்திருந்து தாக்குவதுதான் கொரில்லாப் போர் முறை’
  ‘தீவிரவாதிகள் மறைந்திருப்பதாகக் கருதப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டது’
  ‘வகுப்புத் தோழன் தன்னைத் தேடிக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மரத்தின் பின்னால் மறைந்துகொண்டான்’

 • 5

  (ஒரு இனம், அமைப்பு, பழக்கவழக்கங்கள் காலப்போக்கில்) இல்லாமல் போதல்; அழிதல்.

  ‘வங்காளப் புலி இனம் மறைந்துவருகிறது’
  ‘மறைந்த பண்டை நாகரிகங்களைப் பற்றி அறியத் தொல்பொருள் ஆராய்ச்சி உதவுகிறது’
  ‘யாழ் என்ற இசைக் கருவி காலப்போக்கில் மறைந்துவிட்டது’
  ‘கனிஷ்கருக்குப் பின் குஷாணப் பேரரசு வலிமை குன்றி மறைந்தது’
  ‘மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பல கலை, இலக்கிய கோட்பாடுகள் தோன்றிப் பின் மறைந்தன’
  ‘உடன்கட்டை ஏறும் பழக்கம் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது’
  ‘தாத்தா காலமான பிறகு அவர் நடத்திய நாடக சபாவும் மறைந்துவிட்டது’

 • 6

  உயர் வழக்கு இறத்தல்.

  ‘அண்மையில் மறைந்த கவிஞருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது’
  ‘நாட்டுக்கே வழிகாட்டியாக விளங்கிவந்த தலைவர் மறைந்தார்’

மறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறை1மறை2மறை3

மறை2

வினைச்சொல்மறைய, மறைந்து, மறைக்க, மறைத்து

 • 1

  எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்; ஒளித்தல்.

  ‘பெட்டியைப் புதைத்துவிட்டுச் சருகுகளைப் போட்டு மூடி மறைத்தார்’
  ‘கருமேகங்கள் சூரியனை மறைத்தன’

 • 2

  பார்க்க முடியாத விதத்தில் தடையாக இருத்தல்.

  ‘மறைக்காதே! கொஞ்சம் விலகி உட்கார்’
  ‘தூண் ஒன்று மேடையைப் பார்க்கவிடாமல் மறைத்தது’
  ‘கண்ணில் சதை வளர்ந்து பார்வையை மறைக்கிறது’
  உரு வழக்கு ‘பணச் செருக்கு அவன் கண்ணை மறைக்கிறது’

 • 3

  (ஒன்றை) வெளிப்படாமல் இருக்கச் செய்தல்; ஒளித்தல்.

  ‘உண்மையை யாரும் மறைக்க முடியாது. அது வெளிப்பட்டே தீரும்’
  ‘மறைக்காமல் நடந்ததைச் சொல்!’
  ‘மருத்துவரிடமும் வழக்கறிஞரிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்பார்கள்’
  ‘நமது குறைகளை மறைப்பதற்காக நாம் அடுத்தவர்களைக் குறைசொல்கிறோம்’

மறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறை1மறை2மறை3

மறை3

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு வேதம்.

  ‘அவர் நான்கு மறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்’
  ‘திருக்குறளைத் தமிழ் மறை என்று கூறுவதுண்டு’