தமிழ் மாற்று யின் அர்த்தம்

மாற்று

வினைச்சொல்மாற்ற, மாற்றி

 • 1

  (வேறுபட்ட நிலைக்குப் போகச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (திருத்துதல், நீக்குதல், சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ) புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்

   ‘சமுதாய அமைப்பை அடியோடு மாற்ற நினைக்கிறோம்’
   ‘பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளார்கள்’
   ‘சில பாக்டீரியாக்கள் பாலைத் தயிராக மாற்றுகின்றன’
   ‘அந்தக் காலத்தில் இரும்பைத் தங்கமாக மாற்றுவதற்காகத் தங்கள் சொத்துகளை அழித்தவர்கள் ஏராளம்’
   ‘அவனை மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவனோ கொஞ்சம்கூட மாறவில்லை’

 • 2

  (இடம் விட்டு இடம் போகச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒரு பொருள், கைகால்கள் போன்றவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அல்லது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு) கொண்டுவருதல்

   ‘சுமையைத் தலையிலிருந்து தோளுக்கு மாற்றிக்கொண்டான்’
   ‘பெட்டியை வேறு வண்டிக்கு மாற்றவா?’
   ‘கால்களை மாற்றிப் போட்டு உட்கார்ந்தான்’

  2. 2.2 அதுவரை இருந்த, வைத்திருந்த, பழகியிருந்த ஒன்றை நீக்கிவிட்டு அல்லது விட்டுவிட்டு வேறொன்றை ஏற்றுக்கொள்ளுதல்

   ‘வீட்டை மாற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்./’
   ‘காரை மாற்றிவிட்டாயா?’
   ‘மேஜையை மாற்ற வேண்டும்’
   ‘ஊருக்குப் புறப்படத் தயாராக இருந்த அவர் கடைசி நேரத்தில் மனத்தை மாற்றிக்கொண்டார்’
   ‘என் முடிவை நான் மாற்றிக்கொள்வதாக இல்லை’

  3. 2.3 ஒரு இடத்தை விட்டு வேறொன்றுக்குப் போகுமாறு ஒருவரைப் பணித்தல்

   ‘உன்னை விற்பனைப் பிரிவுக்கு மாற்றியிருக்கிறார்கள்’
   ‘என்னைச் சோதனைச்சாவடிக்கு மாற்றியிருக்கிறார்கள்’

 • 3

  (ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றை வருமாறு செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 காசோலையை வங்கியில் கொடுத்துப் பணம் பெறுதல்

   ‘காசோலையை வங்கியில் கொடுத்து மாற்ற இவ்வளவு நேரமாகிவிட்டது’

  2. 3.2 ஒரு நாட்டின் பணத்தைக் கொடுத்து அதற்கு உரிய மதிப்புடைய மற்றொரு நாட்டின் பணத்தைப் பெறுதல்

   ‘என்னிடம் இருக்கும் நூறு வெள்ளியையும் மாற்ற வேண்டும்’

  3. 3.3 பணத்தை ஒருவரிடம் கொடுத்துச் சில்லறை பெறுதல்

   ‘இந்த ஐநூறு ரூபாயைப் பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொண்டு வா’

  4. 3.4 ஒன்று இருந்த இடத்தில் மற்றொன்றைப் பொருத்துதல்

   ‘அந்த உடைந்த கண்ணாடியை மாற்று!’

  5. 3.5 (உடுத்தியிருந்த ஆடையைக் கழற்றிவிட்டு வேறு ஆடையை) போட்டுக்கொள்ளுதல்; அணிதல்

   ‘சட்டையை மாற்றிக்கொண்டு எங்கே கிளம்பிவிட்டாய்?’

  6. 3.6 ஒன்று அல்லது ஒருவர் இருந்த நிலையில் மற்றொன்றையோ மற்றொருவரையோ இருக்கச் செய்தல்

   ‘‘கனகாம்புஜம்’ என்ற பெயரைத் திரைப்படத்துக்காக ‘பூஜாஷ்ரி’ என்று மாற்றிக்கொண்டுவிட்டாள்’
   ‘அந்தச் சாலையின் பெயரை மாற்றி ஒரு வருடமாகிறது’
   ‘தோப்பில் காவலுக்கு ஆள் மாற்றிவிடுவதற்காக அப்பா போயிருக்கிறார்’
   ‘கதாநாயகியை மாற்றியே தீர வேண்டும் என்று கதாநாயகன் அடம்பிடிக்கிறார்’

  7. 3.7 (தன் சொத்து முதலியவற்றை மற்றவருக்கு) அதிகாரபூர்வமான முறையில் உரியதாக்குதல்

   ‘வீட்டை என் பேரன் பெயருக்கு மாற்றி எழுதிவைத்துவிட்டேன்’
   ‘சொத்தைத் தன் பெயருக்கு மாற்ற வேண்டும் என்று அவருடைய மூத்த மகன் நச்சரிக்கிறான்’

  8. 3.8இலங்கைத் தமிழ் வழக்கு (நோயை) குணப்படுத்துதல்

   ‘இப்போது காசம் மாற்றக்கூடிய நோயாகிவிட்டது’

தமிழ் மாற்று யின் அர்த்தம்

மாற்று

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு) பதில்; ஈடு; வேறு.

  ‘மாற்றுச் சிறுநீரகம்’
  ‘மாற்று ஆட்டக்காரர்’
  ‘மாற்று வழி’
  ‘மாற்றுப் பேருந்து’

தமிழ் மாற்று யின் அர்த்தம்

மாற்று

பெயர்ச்சொல்

 • 1

  (தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின்) கலப்பற்ற நிலை; சுத்தத் தன்மை.

  ‘உரைத்துப்பார்த்தால் தங்கத்தின் மாற்று தெரிந்துவிடும்’