தமிழ் மாறு யின் அர்த்தம்

மாறு

வினைச்சொல்மாற, மாறி

 • 1

  (வேறு நிலைக்குப் போதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (இருக்கும் நிலையிலிருந்து) புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருதல்

   ‘சமூகம் மாற வேண்டும் என்று பேசினால் மட்டும் போதுமா?’
   ‘புதிய கருத்துகளுக்கு வழிவகுக்கும் அளவில் கல்வித் திட்டம் மாறியுள்ளது’
   ‘வாய்ச்சண்டை அடிதடியாக மாறியது’
   ‘என்ன செய்தாலும் பித்தளை தங்கமாக மாறாது’
   ‘வெப்பத்தால் நீர் நீராவியாக மாறுகிறது’
   ‘காலம் மாறிவிட்டது; இளைஞர்களுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியவில்லை’

 • 2

  (இடம் விட்டு இடம் போதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 ஒரு இடத்திலிருந்து நீங்கி வேறு ஒரு இடத்துக்கு வருதல்

   ‘இடம் மாறினால் கொஞ்சம் மனத்துக்கு நிம்மதியாக இருக்கும்’
   ‘முன்னால் உட்கார்ந்திருந்தவரின் தலை மறைத்ததால் நண்பர்கள் இருவரும் திரையரங்கில் இருக்கைகள் மாறி உட்கார்ந்துகொண்டனர்’

  2. 2.2 (காலிசெய்து அல்லது விலகி) வேறொன்றுக்குச் செல்லுதல்

   ‘நாங்கள் வீடு மாறி ஆறு மாதம் ஆகிறது’
   ‘விழுப்புரத்தில் வண்டி மாறிச் சென்னைக்கு வந்தான்’
   ‘தேர்தலுக்குப் பிறகு பலர் கட்சி மாறியுள்ளனர்’

 • 3

  (ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று என்ற சூழல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (திசை, பாதை முதலியவை குறித்து வரும்போது) சரியானதைத் தவறவிடுதல்

   ‘நாம் பாதை மாறி வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்’
   ‘சென்னைக்கு வர வேண்டிய கப்பல் புயலில் சிக்கித் திசைமாறிச் சென்றுவிட்டது’

  2. 3.2 குறிப்பிட்ட காலம்வரை இருந்துவந்த அல்லது செயல்பட்டுவந்த ஒன்றுக்குப் பதிலாக வேறொன்று வருதல்

   ‘திரையரங்கில் நாளை படம் மாறலாம்’
   ‘‘பம்பாய்’ நகரத்தின் பெயர் ‘மும்பை’ என்று மாறியுள்ளது’

  3. 3.3இலங்கைத் தமிழ் வழக்கு (நோய்) குணமாதல்

   ‘இந்த நோய் மாற எத்தனை காலம் பிடிக்கும்?’
   ‘‘நோய் மாறவே மாறாதா’ என்று கவலையோடு மருத்துவரிடம் கேட்டாள்’
   ‘கடுமையான குளிசைகள் சாப்பிட்டும் நோய் மாறவில்லை’