தமிழ் மிஞ்சு யின் அர்த்தம்

மிஞ்சு

வினைச்சொல்மிஞ்ச, மிஞ்சி

 • 1

  (தேவை, பயன்பாடு முதலியவை போக) மிச்சமாகவோ மீதமாகவோ இருத்தல்.

  ‘விற்றது போக இரண்டு ஏக்கரா நிலம் மட்டும்தான் நமக்கு மிஞ்சுகிறது’
  ‘வழக்கில் வெற்றிபெற்றாரே தவிர சொத்தில் எதுவும் மிஞ்சவில்லை’
  ‘தேவைக்கு மிஞ்சி என்னிடம் பணம் இருக்கிறது’
  ‘நான்கு பேருக்குத்தான் சமைத்தேன். இருந்தாலும் சாதம் மிஞ்சிவிட்டது’
  ‘இட்லி மிஞ்சிவிட்டால் அதை உப்புமா செய்துவிடலாம்’

 • 2

  (எரிச்சலுடனோ வருத்தத்துடனோ கூறும்போது) ஒன்றின் விளைவாக எதிர்பாராததோ விரும்பத் தகாததோ கிடைத்தல்.

  ‘இவ்வளவு செய்தும் பயன் இல்லை; வருத்தம்தான் மிஞ்சுகிறது’
  ‘எத்தனை படங்கள் எடுத்தென்ன, இறுதியில் கடன் மட்டுமே மிஞ்சுகிறது’

 • 3

  பிறரை அல்லது பிறவற்றைவிடச் சிறப்பாகவோ அதிகமாகவோ செயல்படுதல்; முந்துதல்; விஞ்சுதல்.

  ‘அறிஞர் அண்ணாவை யாரும் பேச்சில் மிஞ்ச முடியாது என்று என் அப்பா அடிக்கடி கூறுவார்’
  ‘மனிதனைக் கணிப்பொறி மிஞ்சிவிடும் காலமும் வரலாம். யார் கண்டது?’

 • 4

  (குறிப்பிட்ட வரம்பை, ஒழுங்கை) கடத்தல்; கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போதல்; மீறுதல்.

  ‘காலம் தாழ்த்தினால் காரியம் மிஞ்சிவிடும்’
  ‘அவன் என் பேச்சையும் மிஞ்சிப் போய்விடுவான் போலிருக்கிறது’