தமிழ் முடிவு யின் அர்த்தம்

முடிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை; இறுதி; கடைசி.

  ‘மாநாட்டின் முடிவில் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது’
  ‘எதிர்பாராத ஒரு முடிவுடன் இந்தத் திரைப்படம் முடிகிறது’
  ‘இவன் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு வராதா?’

 • 2

  (போட்டி, தேர்வு போன்றவற்றில்) வெற்றி, தோல்விகளைப் பற்றி இறுதியாகக் கொடுக்கப்படும் தகவல்.

  ‘நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவிலிருந்து வெளிவரத் துவங்கும்’
  ‘பள்ளி இறுதித் தேர்வு முடிவு வெளிவந்த செய்தித்தாள் இருக்கிறதா?’
  ‘உலகக் கோப்பை அரையிறுதி முடிவுகளைப் பொறுத்துதான் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்பதைச் சொல்ல முடியும்’

 • 3

  ஆராய்ச்சி, விசாரணை போன்றவை இறுதியாக வெளியிடும் தகவல்.

  ‘இரட்டைக் கொலை வழக்கின் விசாரணை முடிவுகளைக் காவல்துறையினர் பத்திரிகைக்காரர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டனர்’
  ‘மக்களிடம் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு பெருகிவருவதை இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன’
  ‘இரத்தப் பரிசோதனையின் முடிவை மாலையில் தருவதாகக் கூறினார்கள்’
  ‘தனது ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி அவர் யாரிடமும் வாய்திறக்கவில்லை’

 • 4

  (நிலை, கருத்து குறித்து வரும்போது) உறுதி; இறுதி.

  ‘இதுதான் உன் முடிவான கருத்து என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை’
  ‘முடிவாகச் சொல்லிவிடு; வியாபாரத்தில் கூட்டுச் சேருகிறாயா, இல்லையா?’

 • 5

  தீர்மானம்.

  ‘வேலையை விட்டுவிடுவதுபற்றி அப்பாவிடம் சொல்வது என்கிற முடிவுக்கு வந்தான்’

 • 6

  (சட்டபூர்வமான) தீர்ப்பு.

  ‘கீழ்நீதிமன்றங்களின் முடிவை மாற்றும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு உண்டு’