முறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முறை1முறை2

முறை1

வினைச்சொல்முறைக்க, முறைத்து

 • 1

  (கோபம், எரிச்சல் முதலியவற்றால்) முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு பார்த்தல்.

  ‘சில்லறை தர முடியாது என்று கூறிய கடைக்காரரை முறைத்தான்’
  ‘பேச்சில் குறுக்கிட்ட மனைவியை முறைத்துவிட்டு என்னைப் பார்த்தார்’

முறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முறை1முறை2

முறை2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நியதி, பழக்கவழக்கம் முதலியவற்றின் அடிப்படையில்) குறிப்பிட்ட விதத்தில், தன்மையில் ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரையறை.

  ‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை சமுதாயத்தில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது’
  ‘‘பெற்ற தாயையே கவனிக்காமல் விட்டுவிட்டாயே! இது முறையா?’ என்று மாமா என்னைத் திட்டினார்’
  ‘எங்களை முறையாக நடத்தினால் நாங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம்’

 • 2

  ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.

  ‘முறையாக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு நெடுநாளாக ஆசை’
  ‘புதிய மருத்துவமனை முறைப்படி நாளை துவக்கப்படும்’
  ‘என் மாமாவுக்கு முறையான படிப்பு இல்லையென்றாலும் பட்டறிவு அதிகம்’
  ‘நீ எதை வேண்டுமானாலும் செய். ஆனால் அதற்கு ஒரு முறை இருக்கிறது’

 • 3

  ஒரு செயல், ஆய்வு போன்றவற்றை மேற்கொள்வதற்காக வகுக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டு வடிவம்.

  ‘கார்பன் கணக்கீட்டு முறையின்படி புதைபடிவங்களின் வயதை அறியலாம்’
  ‘மடக்கை முறைப்படி இந்தக் கணக்குக்குத் தீர்வு காண வேண்டும்’
  ‘அந்தாதி முறையில் எழுதப்பட்ட பாடல் இது’
  ‘மக்களாட்சி முறை ஒரு மாபெரும் தத்துவமாகும்’

 • 4

  ஒன்று இருக்கும், நடைபெறும், செயல்படும், இயங்கும் தன்மை; விதம்.

  ‘பொருளாதார அமைப்பு மாறும்போது வாழ்க்கை முறையும் மாறும்’
  ‘மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் முறையில் அன்புடன் பேசினார்’

 • 5

  அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்; தடவை.

  ‘நகரத்தையே இப்போதுதான் முதல்முறையாகப் பார்ப்பதுபோல் பார்த்தான்’
  ‘எத்தனை முறை படித்தாலும் கொஞ்சம்கூட அலுக்காத கதை’
  ‘எதிர் வீட்டுப் பையன் மறுமுறையும் என்னிடம் சண்டைக்கு வந்தான்’
  ‘இந்த முறையாவது எதிர்பார்த்தபடி பருவமழை பெய்யுமா?’

 • 6

  ஒரு வரிசையிலோ தொடர்ச்சியாக செய்யப்படும் ஒன்றிலோ ஒருவருக்கான அல்லது ஒன்றுக்கான சந்தர்ப்பம்.

  ‘வயல்களுக்கு முறை வைத்துதான் தண்ணீர் விடப்படும்’
  ‘மருத்துவமனையில் மருத்துவரைப் பார்க்க வரிசையில் தன் முறைக்காகக் காத்திருந்தார்’
  ‘‘இது உன் முறை’ என்று சொல்லிவிட்டுச் சீட்டுக்கட்டை அவனிடம் கொடுத்தார்’

 • 7

  (இருவருக்கும் இடையில் இருக்கும்) வரையறுக்கப்பட்ட உறவு.

  ‘அவர் எனக்கு மாமா முறை’
  ‘அவர் உனக்கு என்ன முறை வேண்டும்?’
  ‘ஆசிரியர் என்ற முறையில் உங்களைக் கண்டிக்க எனக்கு உரிமை உண்டு’
  ‘கட்சியின் உண்மையான தொண்டன் என்ற முறையில் கட்சித் தலைமையின் எல்லா முடிவுகளுக்கும் நான் கட்டுப்படுகிறேன்’