தமிழ் மூடு யின் அர்த்தம்

மூடு

வினைச்சொல்மூட, மூடி

 • 1

  (உள்ளிருப்பது வெளியே தெரியாதபடி இருக்கும் நிலைக்கு வருதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (திறந்திருக்கும் கதவு, ஜன்னல் முதலியவை) உள்ளே அல்லது வெளியே பார்க்க முடியாத அல்லது ஏதும் செல்ல முடியாத நிலைக்கு நகர்தல்/(திறந்திருக்கும் கதவு, ஜன்னல் முதலியவற்றை) உள்ளே அல்லது வெளியே பார்க்க முடியாத அல்லது ஏதும் செல்ல முடியாத நிலைக்கு நகர்த்துதல்

   ‘இந்தப் பொத்தானை அமுக்கினால் கதவு மூடும்’
   ‘ஜன்னலை மூடாதே!’

  2. 1.2 (திறந்திருக்கும் பெட்டி, பை பாத்திரம் போன்றவற்றின் வாய்ப்பகுதி, முன்பகுதி அல்லது மேல்பகுதியை) அடைத்தல்

   ‘நான் பார்த்தபோது பெட்டி மூடித்தான் இருந்தது’
   ‘தண்ணீர்த் தவலையை மூட மறந்துவிட்டேன்’
   ‘உணவை விழுங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் உணவுக்குழல் மூடியிருக்கும்’

  3. 1.3 (கண், வாய் குறித்து வரும்போது) (இமைகள், உதடுகள்) ஒன்றுசேர்தல்/(இமைகளை, உதடுகளை) ஒன்றுசேர்த்தல்

   ‘தியானத்தின்போது அவருடைய கண்கள் மூடியிருந்தன’
   ‘வாயை மூடிக்கொண்டு தூங்கு!’

  4. 1.4 (காது, வாய், கண் போன்றவற்றை) பொத்துதல் அல்லது மறைத்தல்

   ‘தொலைக்காட்சியில் ஆபாசமான ஒரு காட்சி வந்தபோது தன் கையால் பையனின் கண்களை மூடினான்’
   ‘கடப்பாரை குத்திக் காலில் ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்த இடத்தை அழுத்தி மூடினான்’
   ‘அவன் பேசுவதைக் கேட்கச் சகிக்காமல் காதைக் கையால் மூடிக்கொண்டாள்’
   ‘சில நிலைமைகளில் மட்டுமே ஆழமான வெட்டுக் காயங்களை மூட வேண்டும்’

  5. 1.5 (ஒன்று) விரிந்த, பிரிந்த, திறந்த நிலையிலிருந்து மடங்கிய, சுருண்ட அல்லது திறக்கப்படாத நிலையை அடைதல்/(ஒன்றை) விரிந்த, பிரிந்த, திறந்த நிலையிலிருந்து மடங்கிய, சுருண்ட அல்லது திறக்கப்படாத நிலையை அடையச் செய்தல்

   ‘பிறந்த குழந்தையின் கை மூடி இருக்கும்’
   ‘கொட்டாவி வந்ததும் புத்தகத்தை மூடினான்’

  6. 1.6 ஒரு பொருள், இடம் போன்றவற்றை மறைக்கும் விதத்தில் அவற்றின் மேல் ஒன்று பரவியிருத்தல்/ஒரு பொருள், இடம் போன்றவற்றை மறைக்கும் விதமாக அவற்றின் மேல் ஒன்றைப் பரப்புதல் அல்லது வைத்தல்

   ‘பனி மூடிய மலை’
   ‘குழியில் எல்லா முட்டைகளையும் இட்ட பிறகு ஆமை மணலைப் போட்டு முட்டைகளை மூடிவிடும்’
   ‘மூளையைச் சுற்றி ஒரு படலம் மூடியிருக்கும்’
   ‘எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை ஒரு மணிஜாடி கொண்டு மூட வேண்டும்’

 • 2

  (செயல்படாமல் இருத்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 கல்வி நிறுவனம், கடை, தொழிற்சாலை போன்றவற்றில் அன்றைய அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான செயல்பாடு, பணி, வியாபாரம் போன்றவை முடிதல்/கல்வி நிறுவனம், கடை, தொழிற்சாலை போன்றவற்றில் அன்றைய அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான செயல்பாடு, பணி, வியாபாரம் போன்றவற்றை முடித்துக்கொள்ளுதல்

   ‘அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை மூடியிருந்தது’
   ‘சீக்கிரம் போ, கடை மூடிவிடும்’
   ‘பள்ளிக்கூடத்தை அரையாண்டுத் தேர்வுக்குப் பின் விடுமுறைக்காக மூடியுள்ளனர்’

  2. 2.2 (தொழில், வியாபாரம், நிறுவனம் போன்றவற்றை மேற்கொண்டு தொடராமல்) நிரந்தரமாக நிறுத்திக்கொள்ளுதல்

   ‘அவரது தந்தை நடத்தி வந்த கடை கவனிப்பாரின்றி மூடப்பட்டது’
   ‘நஷ்டத்தில் இயங்கிய சினிமா நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன’

  3. 2.3 (குழாய் போன்றவற்றிலிருந்து நீர், வாயு முதலியவை வெளியேறாதவாறு) நிறுத்துதல்

   ‘குழாயை மூடிவிட்டாயா?’