தமிழ் மேற்கொள் யின் அர்த்தம்

மேற்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (திட்டம், முயற்சி, பணி, ஆய்வு, போர், ஆட்சி போன்றவற்றைக் குறித்து வரும்போது) செய்தல்; நடத்துதல்; செயல்படுத்துதல்.

  ‘காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய ஆய்வை இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது’
  ‘இட ஒதுக்கீடு குறித்து எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன’
  ‘சலீம் மெக்காவுக்கு இரண்டு முறை புனித யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்’
  ‘ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே அக்பர் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டார்’
  ‘லூயி மன்னனை வீழ்த்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன’
  ‘பல முக்கியமான அரசியல் சட்டங்கள்குறித்து விரிந்த அளவில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன’
  ‘வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’
  ‘தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் எண்ணற்ற முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன’
  ‘மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலம் கதிரியக்கச் சிகிச்சை மேற்கொண்டார்’

 • 2

  (உத்தி, வழிமுறை, தொழில், துறவு முதலியவற்றை) கைக்கொள்ளுதல் அல்லது பின்பற்றுதல்.

  ‘நோயைத் தடுக்க என்னென்ன வழிகளை மேற்கொள்ள வேண்டும்?’
  ‘ஒரே கதையை இரண்டு பேரின் பார்வையில் சொல்வது என்ற உத்தியை இயக்குநர் மேற்கொண்டிருக்கிறார்’
  ‘துறவு மேற்கொண்ட பின்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார்’
  ‘கதாகாலட்சேபம் செய்யும் தொழிலை மேற்கொண்டவர்களைப் பாகவதர் என்றழைத்தனர்’
  ‘மக்கள் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள எல்லா வசதிகளையும் செய்துதருவது அரசாங்கத்தின் கடமை’
  ‘காஷ்மீர் பிரச்சினையில் நாங்கள் மேற்கொண்டிருக்கும் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை’

 • 3

  (விரதம், நோன்பு) கடைப்பிடித்தல்.

  ‘மௌன விரதம் மேற்கொண்டார்’
  ‘மதிப்புக் கூட்டு வரியை எதிர்த்து வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்’