தமிழ் வீசு யின் அர்த்தம்

வீசு

வினைச்சொல்வீச, வீசி

 • 1

  (ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக) வேகத்துடன் காற்றின் ஊடாகச் செலுத்துதல்; எறிதல்.

  ‘வேகமாக ஓடி வந்து பந்தை வீசினான்’
  ‘ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதால் காவலர்கள் தடியடி நடத்தினார்கள்’
  ‘விமானங்கள் குண்டு வீசித் தாக்கின’
  ‘படகிலிருந்து கடலில் வலைவீசினான்’
  உரு வழக்கு ‘திடீரென்று தன்னை நோக்கி ஒரு கேள்வி வீசப்பட்டதும் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான்’
  உரு வழக்கு ‘எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர்’

 • 2

  (கத்தி, கம்பு போன்றவற்றைப் பிடித்து) பக்கவாட்டில் அல்லது மேலும்கீழுமாக ஆட்டுதல் அல்லது அசைத்தல்; (கைகளை) ஆட்டுதல்.

  ‘அந்த நடிகர் முறையாக வாள் வீசக் கற்றுக்கொண்டார்’
  ‘அரசருக்குப் பின்னால் இரண்டு பணிப்பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தனர்’
  ‘குழந்தை கைகளை வீசிக்கொண்டு நடந்து வந்தது’
  ‘அவன் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதற்காகக் காலை வீசிப்போட்டு நடந்தான்’

 • 3

  (காற்று, வாசனை முதலியவை) உணரக்கூடிய வகையில் பரவுதல்.

  ‘இரவுப்பொழுது தொடங்கியதும் காற்று நன்றாக வீசத் தொடங்கியது’
  ‘நூறு கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும்’
  ‘திடீரென்று சாம்பார் மணம் வீசுகிறதே!’
  ‘வியர்வையினால் துர்நாற்றம் வீசாத அளவுக்கு உடலில் வாசனைத் திரவியங்களைப் பூசியிருந்தார்’

 • 4

  (ஒளியை) உமிழ்தல்; (அடுப்பு போன்றவை நெருப்பைக் காற்றில்) மேல் எழும்பச் செய்தல்.

  ‘ஒளி வீசும் நட்சத்திரங்கள்’
  ‘உலை தீப் பிழம்புகளை வீசியது’
  உரு வழக்கு ‘உங்கள் சிந்தனை, செயல், பேச்சு அனைத்திலும் உண்மை ஒளி வீசட்டும்’