தமிழ் வரவழை யின் அர்த்தம்

வரவழை

வினைச்சொல்வரவழைக்க, வரவழைத்து

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றை ஓர் இடத்துக்கு) வரச்செய்தல் அல்லது வந்துசேரச்செய்தல்.

  ‘நான் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால் உதவிக்குத் தம்பியை ஊரிலிருந்து வரவழைத்திருக்கிறேன்’
  ‘ஓட்டலிலிருந்து மதிய உணவு வரவழைத்துச் சாப்பிட்டான்’
  ‘இது தபாலில் வரவழைத்த புத்தகம்’

 • 2

  (குறிப்பிட்ட முறைகளின்படி) ஒன்றை ஒரு பொருளிலிருந்தோ இடத்திலிருந்தோ வெளிவரச்செய்தல் அல்லது தோன்றச்செய்தல்.

  ‘மாயாஜால நிகழ்ச்சி நடத்துபவர் தொப்பியிலிருந்து முயலை வரவழைத்து எங்களை வியப்புக்கு உள்ளாக்கினார்’
  ‘சில வகை வேதிப்பொருள்களைத் தூவி மழையை வரவழைக்க முடியும்’

 • 3

  (உண்மை, தகவல் முதலியவற்றை ஒருவரிடமிருந்து) வெளிக்கொண்டுவருதல்; வெளிப்படச் செய்தல்.

  ‘உண்மையை வரவழைக்கத் திருடனை அடித்துத் துன்புறுத்தினார்கள்’

 • 4

  (குறிப்பிட்ட உணர்வு, நிலை, தன்மை போன்றவற்றை) ஏற்பட அல்லது தோன்றச் செய்தல்.

  ‘துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்’
  ‘சோர்வு தூக்கத்தை வரவழைத்தது’
  ‘கோபத்தை வரவழைக்கும் செயல்’
  ‘அவனுடைய பேச்சு எனக்குச் சிரிப்பை வரவழைத்தது’