தமிழ் வருகை யின் அர்த்தம்

வருகை

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் ஒரு இடத்துக்கு அல்லது நிகழ்ச்சிக்கு வருதல்; வரவு.

  ‘மாமாவின் திடீர் வருகை எங்களை வியப்பில் ஆழ்த்தியது’
  ‘தமிழறிஞர்கள் பலர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிந்தனர்’
  ‘குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’
  ‘பேராசிரியரின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்’
  ‘திருமணத்துக்கு உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’

 • 2

  (வரலாற்று நோக்கில் கூறும்போது) பிற நாட்டவர் அல்லது பிற இனத்தவர் ஒரு நாட்டுக்கு அல்லது பிரதேசத்துக்கு வருதல்.

  ‘ஐரோப்பியர்களின் வருகையினால் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் பல’
  ‘முகலாயர்களின் வருகை இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது’

 • 3

  (அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய பொருள்கள் போன்றவை) முதன்முதலில் அறிமுகம் ஆகும் நிலை.

  ‘அச்சு இயந்திரத்தின் வருகை உலகின் போக்கையே மாற்றியமைத்தது’
  ‘ஒருநாள் போட்டியின் வருகையால் 1970களில் கிரிக்கெட்டுக்குப் புத்துயிர் கிடைத்தது’

 • 4

  கிறித்தவ வழக்கு
  இயேசுநாதர் பூமியில் மறுமுறை அவதரித்தல்.

  ‘‘கர்த்தரின் வருகை மட்டுமே நம்மை நமது பாவங்களிலிருந்து விடுவிக்கும்’ என்று பிரசங்கியார் முழங்கினார்’