தமிழ் வலம்வா யின் அர்த்தம்

வலம்வா

வினைச்சொல்-வர, -வந்து

 • 1

  (ஒருவர் வழிபடும் முறையாகக் கோயில், குளம் போன்றவற்றை அல்லது சடங்குகளில் அக்கினிக் குண்டம் போன்றவற்றை) இடப்பக்கம் ஆரம்பித்து வலப்பக்கம் முடியுமாறு சுற்றிவருதல்; (தேர், சுவாமி ஊர்வலம் போன்றவை கோயிலை, வீதியை அல்லது நகரை) இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கமாகச் சுற்றிவருதல்.

  ‘மூன்று முறை வலம்வந்து மூலவரை வணங்கினோம்’
  ‘ஹோம குண்டத்தைச் சுற்றி மணமக்கள் வலம்வந்தனர்’
  ‘வழிபாடு முடிந்த பின் நவகிரகங்களை வலம்வந்து கும்பிட்டான்’

 • 2

  ஒரு இடத்தைச் சுற்றிவருதல்.

  ‘மாப்பிள்ளையைக் குதிரையின் மீது ஏற்றி ஊரை வலம்வரச்செய்வது செட்டிநாட்டு வழக்கம்’
  ‘வாடகைக்குச் சைக்கிள் எடுத்ததும் முதலில் எங்கள் தெருவை வலம்வந்தோம்’
  ‘இந்தத் தள்ளாத வயதிலும் இவர் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து தனது தெருவை வலம்வருகிறார்’
  ‘குடியரசுதினப் பாதுகாப்புக்காகக் காவல்துறை குதிரைப்படையினர் மெரினாவில் வலம்வந்தனர்’

 • 3

  (நட்சத்திரங்களைக் கோள்களும் கோள்களைத் துணைக்கோள்கள், செயற்கைக்கோள்கள் போன்றவையும் அணுக்கருவை எலக்ட்ரான்களும்) சுற்றுதல்.

  ‘விண்வெளியில் ஆயிரக் கணக்கான செயற்கைக்கோள்கள் பூமியை வலம்வந்துகொண்டிருக்கின்றன’
  ‘புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதோடு சூரியனையும் வலம்வருகிறது’

 • 4

  ஒருவர் ஒரு இடத்தில் சுற்றித்திரிதல்.

  ‘திரைப்படக் கனவுகளுடன் எத்தனையோ பேர் இன்று சென்னையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்’
  ‘இளம் வயதில் நானும் என் நண்பனும் கைகோத்துக்கொண்டு தஞ்சை நகரத்தின் வீதிகளில் வலம்வந்ததை மறக்க முடியாது’
  ‘(உருவ.) அவள் கற்பனைத் தேரில் ஏறி வானில் வலம்வந்துகொண்டிருந்தாள்’

 • 5

  ஒன்று பலரிடையே அல்லது பலவற்றில் காணப்படுதல்.

  ‘தங்கையின் திருமணத்தைப் பற்றிய சிந்தனையே எங்கள் வீட்டில் எல்லோர் மனத்திலும் வலம்வந்துகொண்டிருந்தது’
  ‘‘இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாசக் காட்சிகளும்தான் இன்று திரைப்படங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன’ என்றார் அவர்’
  ‘இடையில் சில காலம் காணாமல் போயிருந்த இந்த நடிகர் இப்போது மீண்டும் தமிழ்த் திரையுலகில் வலம்வருகிறார்’