தமிழ் வளர் யின் அர்த்தம்

வளர்

வினைச்சொல்வளர, வளர்ந்து, வளர்க்க, வளர்த்து

 • 1

  (உயிரினம், உயிரினத்தின் உறுப்பு முதலியவை) தோன்றிய நிலையிலிருந்து வடிவம், தன்மை முதலியவற்றில் அதிகமாதல்; அடுத்த முதிர்ச்சி நிலையை அடைதல்.

  ‘‘குழந்தை எப்படி வளர்ந்துவிட்டான்!’ என்று ஆச்சரியப்பட்டார்’
  ‘அப்பா வைத்த ரோஜாச் செடி அதற்குள் வளர்ந்துவிட்டது’
  ‘பல்லியின் வால் அறுபட்டால் மீண்டும் வளர்ந்துவிடும்’

 • 2

  (ஒன்று அல்லது ஒருவர்) ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக நிறைவடைந்த அல்லது மேலான நிலையை நோக்கிச் செல்லுதல்.

  ‘வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்தப் படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் இசையமைக்கிறார்’
  ‘வளர்ந்துவரும் கவிஞர் இவர்’
  ‘‘தம்பி நீ வளர வேண்டிய பையன். உனக்குத் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதே’ என்று அந்த அதிகாரி என்னை மிரட்டினார்’

 • 3

  (குறிப்பிட்ட தன்மை, நிலை போன்றவை) அதிகமாதல்; மிகுதல்.

  ‘தொழில்துறை வளர அடிப்படை வசதிகள் மேம்பட வேண்டும்’

 • 4

  (பேச்சு, கதை அல்லது சண்டை, சர்ச்சை முதலியவை முடிவுக்கு வராமல்) நீளுதல்; தொடர்தல்.

  ‘பேச்சு இப்படி வளர்ந்துகொண்டேபோனால் எப்போது சாப்பிடுவது?’
  ‘இதற்கு மேலும் பிரச்சினையை வளரவிடாதே’
  ‘சண்டை இப்படி வளர்ந்து கொண்டேபோனால் என்ன செய்வது?’

தமிழ் வளர் யின் அர்த்தம்

வளர்

வினைச்சொல்வளர, வளர்ந்து, வளர்க்க, வளர்த்து

 • 1

  (மரம், செடி, வீட்டு விலங்குகள் போன்றவற்றை) மிகச் சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து பராமரித்துப் பெரியதாக ஆகச்செய்தல்.

  ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’
  ‘என் மகள் பூனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்’
  ‘ஒரு காலத்தில் எங்கள் தாத்தா யானை வளர்த்தாராம்’

 • 2

  (குழந்தைகள், பிள்ளைகள் போன்றோரிடம்) அக்கறை காட்டி, தேவையானவற்றைச் செய்து, பெரியவர்கள் ஆக்குதல்.

  ‘குழந்தையை வளர்க்கக் கற்றுக்கொள்’
  ‘என் பெண்ணுக்குப் பொய், சூதுவாது எதுவுமே தெரியாது. நான் அவளை வளர்த்த விதம் அப்படி!’
  ‘என்ன பையனை இப்படி மோசமாக வளர்த்திருக்கிறாய்?’
  ‘அவர் தன் பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்திருக்கிறார்’
  ‘பெற்றவர்களைவிட தன்னை வளர்த்தவர்மேல்தான் அவனுக்குப் பாசம் அதிகம்’

 • 3

  (நகம், முடி ஆகியவற்றை வெட்டாமல்) நீளமாக ஆக விடுதல்.

  ‘முடியை நீளமாக வளர்த்துக்கொள்வது இக்கால இளைஞர்களின் நாகரிகம்’
  ‘நகத்தை ஏன் இப்படிப் பெரிதாக வளர்த்துவைத்திருக்கிறாய்?’

 • 4

  ஒரு பண்பு, தன்மை, உணர்வு போன்றவற்றை ஒருவர் ஏற்படுத்திக்கொண்டு அல்லது பிறரிடம் உண்டாக்கி அவற்றை மேலும் அதிகரிக்கச் செய்தல்.

  ‘காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்’
  ‘மாணவர்கள் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் அது பிற்காலத்தில் உதவும்’
  ‘இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை வளர்ப்பதே எங்கள் நோக்கம்’
  ‘‘வீண் கற்பனையை வளர்த்துக்கொள்ளாமல் ஒழுங்காகப் படிக்கிற வழியைப் பார்’ என்று அவர் எனக்கு அறிவுரை கூறினார்’
  ‘பொறாமையை வளர்த்துக்கொள்ளாதே’
  ‘பகையை வளர்த்துக்கொள்வது நல்லது அல்ல’
  ‘ஏதாவது ஒரு கலைத்திறனைக் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே வளர்க்க வேண்டும்’
  ‘மாணவர்களிடையே கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் வளர்க்க வேண்டும்’
  ‘தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாதீர்கள்’

 • 5

  (பேச்சு முதலியவற்றை) முடிக்காமல் நீளச் செய்தல்; நீட்டித்தல்.

  ‘பேச்சை வளர்க்காமல் விஷயத்துக்கு வா’
  ‘சண்டை வளர்க்காதே’

 • 6

  (நெருப்பு) உண்டாக்குதல்.

  ‘தீ வளர்த்துக் குளிர்காய்ந்தனர்’

 • 7

  (ஒன்றை) மேன்மை அடையச் செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதல்.

  ‘தமிழிசையை வளர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட இசைக்கல்லூரி இது’
  ‘அழிந்துவரும் கிராமியக் கலைகளை வளர்க்க அரசு முன்வர வேண்டும்’
  ‘வெளிநாடுவாழ் தமிழர்கள் பலர் தங்கள் பண்பாட்டைப் பேணி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்’