வா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வா1வா2

வா1

வினைச்சொல்வர, வந்து

 • 1

  (இடமாற்றம் நிகழ்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (பேசுபவரிடம் அல்லது பேசுபவர் குறிப்பிடும் இடத்தை நோக்கி) நடத்தல், ஓடுதல், பயணம் செய்தல், நுழைதல் போன்ற செயல்களை மேற்கொள்ளுதல்

   ‘மக்கள் திரள்திரளாக வந்து அந்த மகானைப் பார்த்தார்கள்’
   ‘இவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள்’
   ‘ஐந்து நாள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்’
   ‘ஊருக்குப் போய்விட்டு நேற்று இரவுதான் வந்தேன்’
   ‘ரயில் நிலையம்வரை தம்பி துணைக்கு வந்தான்’
   ‘பள்ளத்திலிருந்து சிங்கம் மேலே வந்தது’
   ‘ஆந்தை பகலில் வெளியே வராது’
   ‘இந்த ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறது’
   ‘வேகமாக வந்த பந்தை அவன் மட்டையால் தடுத்தான்’
   ‘கங்கை இமயமலையிலிருந்து வருகிறது’

  2. 1.2 (ஒரு நிகழ்வு, விழா போன்றவற்றில்) பங்குகொள்ளுதல்; கலந்துகொள்ளுதல்

   ‘பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்கள் வெளியே நின்றார்கள்’
   ‘தாத்தாவின் சாவுக்கு ஊரே திரண்டு வந்தது’
   ‘வழக்கமாக நான் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை’
   ‘இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்’

  3. 1.3 (ஒருவரோடு அவர் செல்லுமிடத்திற்கு) உடன் செல்லுதல்

   ‘நீங்கள் என்னோடு ஊருக்கு வருகிறீர்களா?’
   ‘எழுத்தாளர் ஒருவரைப் பேட்டி எடுக்கப் போகிறேன். நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும்’

  4. 1.4 (ஒன்றின் உள்ளிருந்து அல்லது ஒன்றின் வழியாக வேறொன்று) வெளிப்படுதல்; வெளியாதல்

   ‘அவனுக்குப் புண்ணிலிருந்து இரத்தம் நிற்காமல் வந்துகொண்டிருந்தது’
   ‘மாமாவை அங்கு பார்த்ததும் ஒரு நிமிடம் அவனுக்கு மூச்சே வரவில்லை’
   ‘சிறுநீர் விட்டுவிட்டு வந்தது’
   ‘அலாவுதீன் விளக்கைத் தேய்த்தபோது அதன் உள்ளிருந்து பூதம் வந்தது’
   ‘பந்தை நீருக்குள் அழுத்திவிட்டால் அது மறுபடியும் வெளியில் வந்துவிடும்’

  5. 1.5 (ஒருவர் எடுத்துச்செல்வதன் மூலம் ஒன்று மற்றவருக்கு) தரப்படுதல்

   ‘எங்கள் எல்லாருக்கும் ஆவி மணக்க காப்பி வந்தது’
   ‘எப்போதும் மதியம் அவருக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வரும்’
   ‘காலையில் வந்த கோப்பு இன்னும் பிரிக்கப்படாமலேயே இருக்கிறது’

  6. 1.6 (ஒருவர் சென்றுசேர வேண்டிய இடம் அவரால்) அடையப்படுதல்

   ‘இதோ வந்துவிட்டது என் வீடு’
   ‘தம்பி! மதுரை வந்தவுடன் என்னை எழுப்பிவிடுகிறாயா?’

  7. 1.7 (ஒரு இடத்திலிருந்து வெளிப்படுவது அல்லது புறப்படுவது) மற்றொரு இடத்தைச் சேருதல்

   ‘எங்கிருந்தோ வந்த அந்தப் பாடல் என் மனத்தை மயக்கியது’
   ‘பேச்சுச் சத்தம் வந்த திசை நோக்கி அவன் சென்றான்’
   ‘கூரையின் ஓட்டை வழியாகச் சூரிய ஒளி அறைக்குள் வந்தது’
   ‘வானத்தைப் பார்த்தால் மழை வரும் போலிருக்கிறது’
   ‘இரவு புயல் வரப்போகிறது’
   ‘கொல்லைப்புறத்திலிருந்து ஏதோ துர்நாற்றம் வருகிறது’
   ‘இந்த அறையில்தான் நன்றாகக் காற்று வருகிறது’
   ‘ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டது’

  8. 1.8 (தண்ணீர், மின்சாரம் போன்றவை) பயன்பாட்டுக்கு விடப்படுதல்

   ‘இரண்டு நாட்களாகக் குழாயில் தண்ணீர் வரவில்லை’
   ‘காலையில் பத்து மணிக்குப் போன மின்சாரம் பத்து நிமிடத்திற்கு முன்புதான் வந்தது’

  9. 1.9 (தந்திக் கம்பி, குழாய் முதலியவை ஒரு இடத்தை நோக்கி அல்லது ஒரு இடத்தின் வழியாக) போடப்பட்டிருத்தல்; அமைக்கப்பட்டிருத்தல்

   ‘மின்சாரக் கம்பி வீட்டின் பின்பக்கமாக வருகிறது’
   ‘மாடியிலிருந்து ரேழிக்கு வரும் மாடிப் படிக் கதவையும் சாத்தினாள்’

  10. 1.10 (பிறர் அனுப்பும் தபால், பணம் முதலியவை ஒருவரை) சேர்தல்

   ‘இன்றைய தபால் வந்துவிட்டதா?’
   ‘இன்றுதான் எனக்கு ஊரிலிருந்து பணம் வரும்’
   ‘30ஆம் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது’

 • 2

  (ஒன்றில் இடம்பெறுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (குறிப்பிடும் இடத்தில் ஒன்று) அமைதல்

   ‘திருமணப் பத்திரிகையின் மேல் பக்கத்தில் விநாயகரின் படம் வர வேண்டும்’
   ‘புதிய வீட்டின் வரைபடத்தைக் காட்டி ‘இந்த இடத்தில்தான் பூஜையறை வரும்’ என்று அவர் சொன்னார்’
   ‘கோபுரத்தின் உச்சியில் ஏழு கலசங்கள் வரும் என்று சிற்பி கூறினார்’

  2. 2.2 (கட்டடம், சாலை, பாலம் போன்றவை ஒரு இடத்தில்) ஏற்படுத்தப்படுதல்

   ‘இந்தப் பகுதியில் நிறைய வீடுகள் இருப்பதால் பல கடைகள் வரப்போகின்றன’
   ‘அணு மின்நிலையம் வருவதை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது’
   ‘எங்கள் ஊருக்கு இன்னமும் மின்சாரம் வரவில்லை’

  3. 2.3 (குறிப்பிடப்படும் முறையில் ஒன்று) உருவாதல்; அமைதல்

   ‘கட்டுரை நன்றாக வந்திருக்கிறது’
   ‘நம் நாடு நல்ல நிலைக்கு வரும்’
   ‘இந்தத் திரைப்படம் இவ்வளவு நன்றாக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’
   ‘ஓவியம் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை’
   ‘எனக்குக் கணவனாக வருபவருக்குக் குடிப்பழக்கம் இருக்கக் கூடாது’
   ‘உனக்கு நண்பர்களாக வருபவர்கள் எல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்களே!’

  4. 2.4 (பேச்சு, எழுத்து, திரைப்படம் முதலியவற்றில்) இடம்பெறுதல் அல்லது குறிப்பிடப்படுதல்/(பத்திரிகையில் செய்தி, விளம்பரம் போன்றவை) வெளியிடப்படுதல்

   ‘என் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே’
   ‘அவருடைய பேச்சில் அவருடைய மகனின் பெயர் அடிக்கடி வரும்’
   ‘நான் படித்த கேள்வி எதுவுமே வினாத்தாளில் வரவில்லை’
   ‘ஏறுதழுவுதலைப் பற்றிச் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் வருகின்றன’
   ‘பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்று வரும்’
   ‘இந்நூலில் அளவுக்கதிகமாக வந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்திருக்கலாம்’
   ‘இந்தப் படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக வரும் நடிகர் ஆந்திராவைச் சேர்ந்தவர்’
   ‘தலைவரைப் பற்றிப் பத்திரிகைகளில் மோசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன’
   ‘பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்த நிறுவனத்துக்கு வேலைக்காக விண்ணப்பம் செய்தான்’
   ‘மத்தியப் பிரதேசத் தேர்தலைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் பரபரப்பாக இருக்கின்றன’

  5. 2.5 (புத்தகம், பத்திரிகை, திரைப்படம் போன்றவை) வெளிவருதல்

   ‘இதுவரை வந்த துப்பறியும் நாவல்களிலேயே இது மிகவும் வித்தியாசமானது’
   ‘‘பாசமலர்’ திரைப்படம் வந்தபோது எங்கு பார்த்தாலும் அதைப் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது’
   ‘இது மாதம் இருமுறை வரும் பத்திரிகை’

  6. 2.6 (குறிப்பிடப்படும் துறையில் ஒருவர்) இடம்பெறுதல் அல்லது ஈடுபடுதல்

   ‘பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் எழுத்துத் துறைக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய அறிவுரை’
   ‘விளையாட்டுத் துறையில் தற்போது திறமையுள்ள இளம் வயதினர் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்’
   ‘தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேலைக்கு வந்தேன்’
   ‘எண்பதுகளுக்குப் பிறகு எழுத வந்தவர்களுள் இவர் மிகவும் முக்கியமானவர்’

  7. 2.7 (ஒன்று) உருவாதல்

   ‘கதிர் வரும் பருவத்தில் கருக்காய் அதிகம் விழுவதுண்டு’

  8. 2.8 (கனவு) தோன்றுதல்; (கனவில் ஒன்று அல்லது ஒருவர்) தோன்றுதல்

   ‘காளி தேவி என் கனவில் வந்தாள்’
   ‘கொஞ்சம் நாட்களாக ஒரே கெட்ட கனவாக வருகிறது’

 • 3

  (வந்து சேர்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (குறிப்பிடப்படும் ஒரு) நிலையை, இடத்தை, பதவியை அடைதல்

   ‘என் மகன் நன்றாகப் படித்து மாநிலத்திலேயே முதல் மாணவனாக வர வேண்டும் என்பதுதான் என் ஆசை’
   ‘நீ நன்றாகப் படித்துப் பெரிய பதவிக்கு வருவதை நான் பார்க்க வேண்டும்’
   ‘உலகக்கோப்பை போட்டியில் இரண்டாவதாக வந்த இலங்கை அணிக்கு அந்நாட்டில் பாராட்டு விழா நடத்தப்பட்டது’
   ‘நல்ல ஓவியனாக வந்திருக்க வேண்டியவன் அவன்’
   ‘நீ பிற்காலத்தில் என்னவாக வருவாய்?’

  2. 3.2 (குறிப்பிடப்படும் தேதி, சமயம் போன்றவை) நெருங்குதல்

   ‘தீபாவளி வந்துவிட்டது’
   ‘பொங்கல் வர இன்னும் மூன்று மாதம் இருக்கிறது’
   ‘தேர்தல் வரட்டும், அவர்களைப் பார்த்துக்கொள்ளலாம்’
   ‘வருகிற முகூர்த்தத்திலேயே மகளின் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்’

  3. 3.3 (ஒரு பொருள்) பயன்பாட்டுக்குக் கிடைத்தல் அல்லது இருத்தல்

   ‘இந்த மருந்து இப்போது வேறொரு பெயரில் வருகிறது’
   ‘ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த அந்தத் தைலம் இப்போதெல்லாம் ஏன் வருவதில்லை என்று கடைக்காரரிடம் கேட்டான்’
   ‘இந்தப் பணம் எத்தனை நாட்களுக்கு வரும்?’
   ‘சர்க்கரை இன்னும் இரண்டு நாட்களுக்கு வரும்’

  4. 3.4 (ஒன்றின் விளைவாக மற்றொன்று) கிடைத்தல்

   ‘இருபதையும் முப்பதையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை ஐம்பது’
   ‘உரம் அதிகமாகப் போட்டால் மட்டும் அதிக மகசூல் வந்துவிடாது’
   ‘தயிரைக் கடைந்தால் வெண்ணெய் வரும்’

  5. 3.5 (வருமானம், விளைச்சல் போன்றவை) கிடைக்கப்பெறுதல்

   ‘தென்னந்தோப்பிலிருந்து அவருக்கு நல்ல வருமானம் வருகிறது’
   ‘நிலத்திலிருந்து வரும் வருமானம் குறைவு’
   ‘எனக்குச் சம்பளம் வந்தவுடன் நகையை மீட்டுக்கொள்ளலாம்’

  6. 3.6 (ஆட்சி, பதவி முதலியவற்றை) ஏற்றல்

   ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாருக்கும் உறுதியாக வேலை தருவோம்’
   ‘பதவிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுகிறார்கள்’

  7. 3.7 (ஒருவரால் அல்லது ஒரு நோக்கத்துக்காக) அழைக்கப்படுதல்

   ‘மேலிடத்திலிருந்து அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது’
   ‘பிரதமர் பதவியை ஏற்கும்படி வந்த கோரிக்கையை அந்தத் தலைவர் நிராகரித்தார்’

 • 4

  (பிற வழக்கு)

  1. 4.1 (குறிப்பிட்ட நிலை, உணர்வு, விளைவு முதலியவை) உண்டாதல்; ஏற்படுதல்

   ‘அவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது’
   ‘எனக்குத் தூக்கம் வருகிறது’
   ‘அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அப்பாவின் ஞாபகம் வருகிறது’
   ‘ஒரு மனிதனுக்கு இப்படியா வெறி வரும்?’
   ‘இனிமேலாவது அவனுக்குப் புத்தி வரட்டும்’
   ‘இன்னும் அவளுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை’
   ‘பசி வந்தால் எனக்கு எதுவுமே புரியாது’
   ‘கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வாந்தி வருவது சகஜம்தான்’
   ‘கொடுக்கல்வாங்கலில் அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது’
   ‘வீட்டுக்குப் புதுப்பொலிவு வந்து விட்டது’

  2. 4.2 (ஒன்றைச் செய்ய ஒருவருக்கு) இயலுதல்; முடிதல்

   ‘அவருக்கு ஆங்கிலம் பேச வரும். ஆனால் எழுத வராது’
   ‘அம்மாவின் கெட்டிக்காரத்தனம் எல்லோருக்கும் வந்துவிடாது’
   ‘அவரைப் பார்த்தவுடன் எனக்குப் பேச வரவில்லை’

  3. 4.3 (ஒரு சட்டம், முறை, அமைப்பு போன்றவை) ஏற்படுத்தப்படுதல்; நடைமுறைப்படுத்தப்படுதல்

   ‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் புதிய சட்டங்கள் வர உள்ளன’
   ‘இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தவுடன் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது’
   ‘சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்கு பல்வேறு வாரியங்கள் வந்துவிட்டன’

  4. 4.4 (தீர்ப்பு, உத்தரவு, கட்டளை போன்றவை) பிறப்பிக்கப்படுதல்

   ‘தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகவே வந்திருந்தது’
   ‘அவரை வேலையை விட்டு அனுப்புவதற்கு மேலிடத்திலிருந்து இன்னமும் உத்தரவு வரவில்லை’

  5. 4.5 (வழக்கு, மனு போன்றவை விசாரணைக்கு) ஏற்றுக்கொள்ளப்படுதல்

   ‘இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது’

  6. 4.6 (ஒன்று ஒரு பிரிவில் அல்லது வகையில்) உட்படுதல்

   ‘ஏன் இந்தச் செலவு எந்தக் கணக்கிலும் வரவில்லை?’
   ‘வருமான வரி அதிகாரிகள் அந்த நடிகரின் வீட்டைச் சோதனையிட்டுக் கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றினார்கள்’
   ‘இந்தக் குற்றம் வருமான வரிச் சட்டத்தின் எந்தப் பிரிவுக்குள் வரும்?’

  7. 4.7 (குறிப்பிடப்படும் செயல்பாட்டைச் செய்ய) முனைதல்

   ‘பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கடி என்னோடு சண்டைக்கு வருகிறான்’
   ‘நான் கஷ்டப்பட்டபோது எனக்கு உதவ யாருமே வரவில்லை’

  8. 4.8 (ஒன்று ஒரு தொடர்ச்சியில்) அமைதல்

   ‘வம்சாவழியில் வந்த அரசன் நாட்டை ஆண்டான்’
   ‘இது மரபுவழி வந்த ஒரு வழக்கமாகும்’

  9. 4.9 (ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) குறிப்பிட்ட பெயர் அமைதல்

   ‘‘கா கா’ என்று கத்துவதால் இந்தப் பறவைக்கு ‘காக்காய்’ என்ற பெயர் வந்திருக்கலாம்’
   ‘நடிகர் சிவாஜி கணேசனுக்கு ‘சிவாஜி’ என்று பெயர் எப்படி வந்தது என்பது பலருக்குத் தெரியாது’

  10. 4.10 (பெரும்பாலும் இறந்தகாலத்தில் அல்லது எதிர்காலத்தில் குறிப்பிடும்போது மட்டும்) ஒன்று நிகழ்தல்

   ‘நான் உன்னைத் திட்டினால், அவனுக்கு என்ன வந்தது?’
   ‘வருவதெல்லாம் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்’
   ‘அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்புடன் பக்கங்களைப் புரட்ட வைக்கிற நாவல் இது’

  11. 4.11 (விவாதம், விமர்சனம், பாடம் போன்றவற்றுக்காக ஒன்றை) எடுத்துக்கொள்ளுதல்

   ‘இப்போது கதையைப் பற்றிய எதிர்மறையான விமர்சனத்துக்கு வருவோம்’
   ‘உங்கள் யோசனைக்குப் பிறகு வருவோம்’
   ‘இப்போது அவருடைய மொழிபெயர்ப்புக்கு வருவோம்’
   ‘நதிநீர்ப் பிரச்சினை என்று வரும்போது அவர் எதுவுமே பேசுவதில்லை’

வா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வா1வா2

வா2

துணை வினைவர, வந்து

 • 1

  ஒரு செயல் கடந்த காலத்தில் அல்லது சற்று முன்பு தொடங்கப்பட்டுக் குறிப்பிட்ட கால எல்லைவரை தொடர்வதையும் அல்லது இனியும் தொடரும் என்பதையும் காட்டப் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘பல நூற்றாண்டுகளாகவே நிலத்தை உழுவதற்கு மாடுகளைப் பயன்படுத்திவருகிறோம்’
  ‘நீங்கள் கொடுத்த புத்தகத்தைப் படித்துவருகிறேன்’
  ‘ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுவந்த காலம்’
  ‘வானம் இருண்டுவருகிறது’

 • 2

  ஒரு செயலைச் செய்ய இருப்பதைக் குறிக்கும் ‘செய’ என்னும் வாய்பாட்டு வினையுடன் இணைக்கப்படும் துணை வினை.

  ‘நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்து வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன்’
  ‘நான் எழுதவந்தது அது அல்ல’
  ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது பத்திரிகைகளிலிருந்து தெரியவருகிறது’
  ‘பணத்தை என்னிடம் கொடுக்கவந்தான்’