தமிழ் வாங்கு யின் அர்த்தம்

வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

 • 1

  (ஒன்று ஒருவரால் கொடுக்கப்பட்டு மற்றொருவரிடம் சேர்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (பிறர் தருவதை) ஏற்றுக்கொள்ளுதல்/(ஏற்றுக்கொள்வதன்மூலம்) தன்னிடம் இருக்கச் செய்தல்

   ‘அப்பா கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்குப் போனான்’
   ‘குழந்தையை மனைவியிடமிருந்து வாங்கிக்கொண்டு நடந்தான்’
   ‘எதிர் வீட்டுப் பெண்ணிடம் பழைய பத்திரிகைகளை இரவலாக வாங்கி அவள் படிப்பாள்’
   ‘மூன்று மணிக்குப் பிறகு இந்த வங்கியில் பணம் வாங்க மாட்டார்கள்’
   ‘இன்னும் நாங்கள் பட்டா வாங்கவில்லை’
   ‘எனக்கு ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும்’
   ‘தீபாவளி மலருக்காக எழுத்தாளர்களிடமிருந்து கதைகளை வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது’
   ‘தான் படித்த கல்லூரியிலேயே அவன் வேலை வாங்கிவிட்டான்’
   ‘ஒரு வாய்ச் சோற்றை வாங்கிக்கொண்ட குழந்தை அடுத்த வாய்க்கு வாந்தியெடுத்தது’

  2. 1.2 (ஒன்றை அதற்கு உரிய விலை, பொருள் போன்றவற்றைக் கொடுத்து) தன்னுடையதாக ஆக்கிக்கொள்ளுதல்

   ‘நகைகளை விற்றுதான் இந்த வீட்டை வாங்கினோம்’
   ‘இந்தப் புதிய நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புகிறேன்’
   ‘இங்கு பழைய பட்டுப் புடவைகள் வாங்கப்படும்’
   ‘தெலுங்குப் படம் ஒன்றின் உரிமையை வாங்கியிருக்கிறேன்’

  3. 1.3 (செய்யும் வேலைக்குப் பதிலாக அல்லது ஈடுசெய்யும் வகையில் ஒன்றை) பெற்றுக்கொள்ளுதல்

   ‘நான் முப்பதாம் தேதியே சம்பளம் வாங்கிவிட்டேன்’
   ‘அந்த மருத்துவர் ஏழைகளிடம் பணம் வாங்கிக்கொள்வதில்லை’
   ‘லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம்’
   ‘இப்படி அநியாய வட்டி வாங்குபவன் உருப்படவே மாட்டான் என்று அவள் திட்டினாள்’
   ‘வரதட்சிணை வாங்கிக்கொள்ளாமல் திருமணம் செய்துகொள்ள நான் தயார்’
   ‘உங்கள் நண்பர் இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முன்பணம் வாங்கிவிட்டாராமே’

  4. 1.4 (முயற்சியின் விளைவாக ஒன்றை) பெறுதல்

   ‘என்னுடைய தங்கை தமிழில் நூற்றுக்கு எண்பது மதிப்பெண் வாங்கியிருந்தாள்’
   ‘பள்ளியில் நடக்கும் போட்டிகளில் நான் நிறைய பரிசு வாங்கி இருக்கிறேன்’
   ‘நடிப்புக்காக இவர் இது வரை மூன்று தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறார்’
   ‘பத்மஷ்ரி பட்டம் வாங்கியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?’
   ‘முனைவர் பட்டம் வாங்கிய பிறகுதான் திருமணம் என்கிற முடிவில் அவள் இருக்கிறாள்’

  5. 1.5 (தேவையான ஒன்றைக் கொடுக்கும் உரிமை அல்லது தகுதி உள்ளவரிடமிருந்து) பெறுதல்

   ‘விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட மேலதிகாரியின் கையெழுத்தை அலுவலக முத்திரையுடன் வாங்க வேண்டும்’
   ‘தொழில் தொடங்குவதற்கு வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளலாம்’
   ‘போகும்முன் பெரியவரிடம் உத்தரவு வாங்கிக்கொள்’
   ‘வேலையில் சேருவதற்கு முன் அம்மாவின் ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டேன்’
   ‘தொழில் தொடங்குவற்கு அப்பாவிடம் சம்மதம் வாங்கிவிட்டாயா?’
   ‘தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று அவனிடம் அவள் சத்தியம் வாங்கிக்கொண்டாள்’

  6. 1.6 (குறிப்பிட்ட நாளில் ஒன்றைச் செய்வதற்குச் சம்பந்தப்பட்டவரிடம் தேதி, நேரம் ஆகியவற்றைக் கேட்டு) நிச்சயித்துக்கொள்ளுதல்

   ‘எனது அடுத்த படத்திற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் தேதிகளை வாங்கியிருக்கிறேன்’
   ‘‘அடுத்த வாரம் அமைச்சரைப் பார்க்க நேரம் வாங்க முடியுமா?’ என்று அவன் என்னிடம் கேட்டான்’

  7. 1.7 (தண்டனையாக அல்லது பகை காரணமாக ஒருவருடைய கால், கை அல்லது தலையை) வெட்டுதல்

   ‘‘அந்தப் பயலின் கையை வாங்காமல் விடமாட்டேன்’ என்று ஆவேசமாகப் பேசினான்’
   ‘அவனை எதிர்த்துப் பேசினால் தலையை வாங்கிவிடுவானா?’

  8. 1.8 (ஒன்றை) பாடுபட்டுப் பெறுதல்

   ‘பெரியவர் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கப் பாடுபட்டவர்’

 • 2

  (ஒன்றுக்கு உள்ளாக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (செய்த காரியத்துக்கு) தண்டனை பெறுதல்

   ‘தாமதமாக வகுப்புக்குப் போனால் ஆசிரியரிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும்’
   ‘அந்தப் பையன் அடி வாங்காத நாளே கிடையாது’

  2. 2.2 (செய்யும் காரியத்தின் விளைவாக மற்றவர்களுடைய) மதிப்பீட்டைப் பெறுதல்

   ‘மாணவர்களாகிய நீங்கள் நல்ல பெயரை வாங்க வேண்டும்’
   ‘அவனோடு சேர்ந்து கெட்ட பெயர் வாங்கியதுதான் மிச்சம்’
   ‘வேலை ஏதும் இல்லாமல் திரிந்துகொண்டிருந்ததால் வீட்டில் உதவாக்கரை என்ற பட்டம் வாங்க நேரிட்டது’

  3. 2.3 உறிஞ்சுதல்; இழுத்தல்; உள்வாங்குதல்

   ‘புதுத் துணி ஈரத்தை வாங்காது’
   ‘ஆற்று மணலில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது வாங்கிக்கொள்ளும்’

  4. 2.4 (ஒருவர் சொல்வதை மனத்தில்) பதியவைத்துக்கொள்ளுதல்

   ‘நான் சொல்லப்போவதை மனத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்!’

  5. 2.5

தமிழ் வாங்கு யின் அர்த்தம்

வாங்கு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு துறட்டி.

தமிழ் வாங்கு யின் அர்த்தம்

வாங்கு

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
 • 1

  இஸ்லாமிய வழக்கு
  தொழுகைக்கான அழைப்பு.

தமிழ் வாங்கு யின் அர்த்தம்

வாங்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நீளமான இருக்கை; பெஞ்சு.

  ‘மருத்துவமனை வாங்கில் பலர் உட்கார்ந்திருந்தனர்’